நெருக்கடியான சூழலில் நமக்கு உதவும் காந்தி!
காந்தியை, இந்தியாவில் எப்போது நெருக்கடியான சூழல் வந்தாலும் நினைத்து பார்க்கிறோம். அவர் எப்படி சூழலை, நிலையைக் கையாண்டிருப்பார் என சிலர் பேசுகிறார்கள். இடையறாது, தேசிய நாளிதழ்களில் பத்தி எழுதப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? நவீன இந்திய சிற்பிகளில் உள்ள பிற தலைவர்களை இப்படி யாரும் எதிர்பார்ப்பதில்லையே? அதற்கு காரணம், காந்திக்கு இந்தியா பற்றியும், மக்கள் பற்றியும் அடிப்படையான உள்ளுணர்வுத்தன்மை இருந்தது. அதனால்தான் காந்தியின் எழுத்துகளைப் படிக்காதவர்கள் கூட அறியும்படி தனது உருவத்தை வடிவமைத்துக்கொண்டார். தகவல்தொடர்பு வேகமாக இல்லாத காலத்தில் கூட காந்தி என்ற பெயர் அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது.
1915ஆம் ஆண்டு காந்தி வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பினார். அப்போதும் அவருக்கு பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. அதற்கான சக்தியும் அவருக்கு அப்போது உருவாகியிருக்கவில்லை. ஆனால் அதற்கான முயற்சியை அரசியலமைப்பு மூலம் செய்யவேண்டுமென்ற தெளிவு அவருக்கு இருந்தது. ஆனால் இதைக்கூட காந்தியின் பேராசைகளில் ஒன்று என்றுதான் கூறவேண்டும். காந்தியின் எழுத்துகள் வழியாகவே அவர் செய்த செயல்பாடுகளில் எவை வெற்றி பெற்றன, எவை தோற்றன என்பதை அறிகிறோம். அல்லாதபோது, நமக்கு நிறைய தகவல்கள் தெரியாமல் போய்விடவே வாய்ப்புகள் அதிகம்.
பிரிட்டிஷார் காலத்தில் இந்திய மக்களிடையே அவர்களது ஆயுதங்கள், வன்முறை, தண்டனை பற்றிய பயம் இருந்தது. காந்தி இதை அடையாளம் கண்டார். எனவே, பயப்படாதீர்கள் என்று சொல்லியதோடு, பயத்தை உடைக்கும்படியான சத்யாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போன்ற அகிம்சை போராட்ட வடிவங்களை உருவாக்கினார். இதுவே பிரிட்டிஷாருக்கு கடுமையான நெருக்கடியை உருவாக்கியது.
அரசியல் ரீதியாக மக்களைத் திரட்ட காங்கிரஸ் கட்சி உதவியது. அந்த அமைப்பில் அந்த காலகட்டத்தில் பெரும் பணக்காரர்கள், சமூகத்தில் அந்தஸ்தான மனிதர்கள் இருந்தார்கள். அவர்களின் வழியாகவே பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு விடுதலைப் போராட்ட செய்திகள் கிடைத்தன. போராட்டத்தில் பங்கேற்பதற்கான தீவிரம் உருவாகியது.
தொழில்முறையில் வழக்குரைஞராக இருந்தாலும் தனது தொழில் பற்றிய தீவிரமான விமர்சனத்தை காந்தி கொண்டிருந்தார். பிரச்னைக்குரியவர்கள் தங்களது பிரச்னையை தாங்களே பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று சொன்ன துணிச்சல்காரர். இதுபோல ஊடகத்துறை சார்ந்த கருத்துகளையும் சற்று கடுமையாகவே சொன்னார் காந்தி. போராட்டங்களை செய்ததோடு ஹரிஜன், யங் இந்தியா, இந்தியன் ஒப்பீனியன், நவஜீவன் ஆகிய பத்திரிகைகளையும் நடத்தினார். பத்திரிகையாளராகவும், ஆசிரியராகவும் செயல்பட்டார் காந்தி. என்ன அவசியம் என்றால், அன்றைய காலத்தில் பிரிட்டிஷாரால் அனைத்து பத்திரிகைகளும் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. இதனால் விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளை, உண்மையான இந்தியா பற்றி பேசுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இதனால் காந்தி விளம்பரங்களே இல்லாமல் பத்திரிகைகளை தொடங்கி நடத்தினார். அப்படியும் கூட காந்தியைப் பற்றிய போலிச்செய்திகள் நிறைய வெளிவந்தன. இதனால் பாதிக்கப்பட்ட காந்தி, நான் வைஸ்ராய் மூலம் சர்வாதிகாரியாக இந்தியாவில் நியமிக்கப்பட்டால் ஹரிஜன் தவிர அனைத்து பத்திரிகைகளையும் தடை செய்துவிடுவேன் என்றார். இன்னொரு சந்தர்ப்பத்தில் , செய்தியாளர்கள் பிளேக் நோயைப் போன்றவர்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்தியாவை ஒன்றிணைக்க காந்தி முயன்று வந்தார். அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் அதை விரும்பவில்லை. எனவே, காந்தியைப் பற்றிய அவதூறு செய்திகளை வெளியிட்டன.
அன்று காந்தி இந்தியாவை ஒருங்கிணைந்த நாடாக வைத்திருக்க மொழியை முக்கியமானதாக கருதினார். எனவே, இந்தி, உருது ஆகியவற்றை மக்கள் அனைவரும் கற்கவேண்டுமென கருதினார். அதை தனது கருத்தாகவே எழுதி வெளியிட்டுள்ளார். பிராந்திய மொழிகளைக் கூட தேவநாகரி லிபியில் எழுத வேண்டுமென பரிந்துரைத்தார். பின்னாளில் சுதந்திர இந்தியா உருவானபோது, மொழியை முக்கியமான விவகாரமாக கருத்தில் கொண்டனர். பல்வேறு பிராந்தியங்களோடு தொடர்புகொள்ள ஆங்கிலம் பொதுமொழியானது.
இந்திய சுயராஜ்யம் என்பதை காந்தி அதிகாரத்தை மக்களிடம் பரவலாக்குவது என்ற அர்த்தத்தில் கூறினார். ஆனால் அன்று முதல் இன்றுவரை அதிகாரம் என்பது பெரும்பாலும் மத்திய அரசிடமே குவிந்துள்ளது. கூட்டாட்சி முறையில் இந்தியா செயல்படுகிறது என்றாலும் கூட பெருமளவு அதிகாரங்கள் தலைநகரான டெல்லியில்தான் உள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான செயல்பாடுகளை செய்வது தாமதமாகிவருகிறது.. கிராமங்களுக்கும், அங்குள்ள மக்களுக்கும் அதிகாரம் தேவை என்பது காந்தியின் கருத்தாக இருந்தது. அறிவு, உடல் உழைப்பு என்பது பிரிக்கக்கூடாத ஒன்று என காந்தி நினைத்தார். அப்படி பிரிக்கப்படும்போது மக்களிடையே இடைவெளி அதிகரிக்கும், சமூக சமநிலை குலையும் என பயந்தார். இன்று அவர் பயந்த சூழ்நிலை உருவாகிவிட்டது. அன்று அவர் தொலைநோக்காக யோசித்த தன்மையை நாம் மனதில் கொள்ளவேண்டும்.
காந்தியைப் பொறுத்தவரை தான் சொன்னதே சரி என்பதை எப்போதும் வாதிட்டவரல்ல. தவறு இருந்தால் அதை திருத்திக்கொண்டு கருத்தை கூறும் நெகிழ்வுத்தன்மை அவருக்குண்டு. வணிக சாதியில் பிறந்தவரான அவர் தன்னை இந்து என்று கூறிக்கொண்டார். மேலும், பிற மதங்களையும் தன்னையொத்த பார்வையில் அணுகினார். வேறுபாடுகள் இருந்தாலும் அதை மக்கள் மதிக்கவேண்டும் என்று கூறினார். விடுதலைப் போராட்டத்தில் ஒன்றுபட்ட மக்கள் மதம் சார்ந்த விவகாரத்தில் காந்தியின் பேச்சைக்கேட்கவில்லை. இதனால்தான் பிரிவினை நடைபெற்று ரத்த ஆறு ஓடியது. அதைத் தடுக்கவும் காந்தி தன்னாலான அனைத்து விஷயங்களையும் செய்தார்.
அம்பேத்கர் மூலம் தலித்துகள் பற்றிய பார்வையை வளர்த்துக்கொண்டார். ஒருவழிப்பாதையாக அவர் பேச்சும் சிந்தனையும் இருந்ததே இல்லை. தனக்கு தெரியாத விஷயங்களை பிறர் பேசும்போது முன்னர் பேசியதில் பிழை இருந்தால் அது பிழைதான் என ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவருக்கு இருந்தது. இதே காலகட்டத்தில் பிரிட்டிஷாருக்கு கைக்கூலியாக இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு, காந்திக்கு எதிரான துவேஷத்தை வளர்த்து வந்தது. அதன் காரணமாக காந்தியை மூன்று தோட்டாக்கள் துளைத்தன. காந்தி இறந்துபோனார். ஆனால் அவர் உருவாக்கிய கொள்கைகள், எழுதிய கருத்துகள், பேசிய விஷயங்கள் இன்றும் ஏதோ ஒருவகையில் பொதுமக்களிடையே உலவிக்கொண்டேதான் இருக்கின்றன. இருக்கும் என நம்புவோம்.
India today
venu madav govindu
Pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக