தொய்வாகும் உடலால் ஆற்றல் இழக்கும் மனம் - கடிதங்கள் - கதிரவன்
தொய்வடையும் உடலால் பலவீனமாகும் மனம்!
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?
நாளிதழ் வேலைகள் கடுமையாகிவிட்டன. ஒருங்கிணைப்பாளரைப் பார்த்தால் ரேபீஸ் வந்த நாயைப் போலவே தெரிகிறது. குரல் அப்படித்தான். சீப் டிசைனரே இன்று ஒருவித பதற்றத்தில் குரல் உயர்த்தி கூச்சல் போடத் தொடங்கிவிட்டார். இப்படி வேலை செய்தால் படிப்பவர்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியவில்லை. எனக்கு நெருக்கடி சூழல்தான் அமைகிறது.
2022ஆம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். உங்கள் மனதில் நினைத்துள்ள ஆசைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன். தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்தேன். 624 பக்கம். சில நாட்கள் இடைவெளியில் தான் படிக்க முடிந்தது. வேலைச்சுமை தான் காரணம்.
செரிமான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். உடல் நலிவுற்றால் மனதும் பலவீனமாகிவிடுகிறது. புத்தாண்டில் டைரி வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன். போனமுறை வாங்கியதில் அதிகம் எழுதவில்லை. இனியும் எழுதுவேனா என்று தெரியவில்லை. உங்கள் பெற்றோரைக் கேட்டதாக சொல்லுங்கள். நன்றி!
அன்பரசு
29.12.2021
மயிலாப்பூர்
----------------------------------------------------
தந்திரமான புத்தி!
அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?
எங்கள் அலுவலகத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார்கள். நான் சென்னையில் இருந்தபடியே ஆபீசுக்கு சென்று வேலை செய்யப்போகிறேன். சக உதவி ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர் என ஏதுமே இசைவாக இல்லை. ஏற்கெனவே வீண்பழிகளை காதுபட பேசி வருகிறார்கள். எனவே, அலுவலக கணினியைப் பயன்படுத்தி பணிசெய்ய நினைத்துள்ளேன்.
வீட்டில் இருந்தால் இணையச்செலவு நம்முடையது. தேவையா? முன்னர் வீட்டிலிருந்தே வேலை செய்தபோது சம்பள வெட்டு இருந்தது. பிறகு அதை போனஸ் என கொடுத்து புத்திசாலித்தனத்தைக் காட்டினார்கள். பிராமணர்களின் புத்தியே புத்தி.
2022ஆம் ஆண்டில் நிறைய சவால்களை சந்திக்கவேண்டும் என நினைக்கிறேன். நிறைய கட்டுப்பாடுகளை விதித்து நெருக்கடி கொடுத்தால், வேலையில் இருக்கமாட்டேன். பணத்தை சேர்த்துவைத்துவிட்டு பணி விலகினால் பிரச்னை இருக்காது. தனுஷ், சாரா அலிகான் நடித்த கலாட்டா கல்யாணம் படம் பார்த்தேன். இசையால் தான் படமே பார்க்கும்படி இருக்கிறது. தனுஷ் உணர்ச்சிமயமாக நடித்திருக்கிறார். ஆணவக்கொலை காரணமாக மனநலபாதிப்பு அடையும் பெண் பற்றிய படம். தனுஷ் இப்படிப்பட்ட பெண்ணை எப்படி மீட்கிறார் என்பதே மையக்கதை. துப்பறியும் சாம்பு நாவலை படித்துக்கொண்டிருக்கிறேன்.
நன்றி!
அன்பரசு
2.1.2022
மயிலாப்பூர்
கருத்துகள்
கருத்துரையிடுக