காந்தியின் உருவத்தைப் பார்த்து நாம் பெறும் செய்தி!

 








பொதுவாக காந்தியின் வழிமுறைகளாக கூறுவது என்ன? அமைதி, அநீதிக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு, எதிர்ப்பது, போராடுவது ஆகியவைதான். இதைத் தாண்டி உணவு, உடை, குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை வீணாக்காமல் பயன்படுத்துவதை காந்தியின் பெயர் சொல்லித்தான் சொல்லுவார்கள். உள்நாட்டு துணிவகைகளைப் பயன்படுத்துவது இதில் முக்கியமானது. காதியில் கிடைக்கும் காடாத்துணிகளை தைத்து உடைகளாக்கி போடுவது ஒரு காலத்தில் நாகரிகமாக இருந்தது. இன்று காதி, சர்வோதய சங்கத்தில் விற்கும் சட்டைகள் சற்று பெரிதாக வினோதமான வடிவமைப்பில் இருந்தாலும், துணிகளை வாங்கி சாதுரியமாக தையல்காரரிடம் விருப்பம் போல தைத்துக்கொள்ளும் புத்திசாலிகளும் உண்டு.


உடைகளை பழசாகிவிட்டால் தூக்கி எறிவதை காந்தி வெறுத்தார். அதை கிழியும் வரையில் பயன்படுத்தலாம். கிழிந்துவிட்டாலும் கூட அதை பயன்படுத்தும் வழிகள் உண்டு. இது நம்மை காசு செலவழிக்காத கருமியாக காட்டலாம். ஆனால் அப்படி பயன்படுத்த கற்றால் உங்களுக்கு செலவுகள் குறையும். பொருட்களால் வீட்டை நிறைக்க மாட்டீர்கள். வாழ்க்கையும் எளிமையாக மாறும்.


காந்தியின் சத்திய சோதனை நூலை ஒருவர் படிக்கும்போது அவர் பள்ளி மாணவராக இருப்பது நல்லது. அப்போதுதான் அவர் மனம் பல்வேறு அனுபவங்களால் நிறையத் தொடங்கும். அப்போது காந்தியின் கருத்துகள் எளிதாக நுழைய இடம் கிடைக்கும். முப்பது வயதுக்கு மேற்பட்டு ஒருவர் காந்தியை படிக்கும்போது தொடக்கத்திலேயே அவரது மனம காந்தியின் கருத்துகள், முறைகள், போராட்டங்களை எதிர்க்க தொடங்கிவிடும்.எனவே, சிறுவயதில் படித்துவிட்டு பிறகு பன்முறைகளில் படிக்கும்போது காந்தி பல்வேறு பரிமாணங்களில் காட்சியளிப்பார். முதலில் அவரது நூலைப் படிக்கும்போது ஒருவரது மனதில் தோன்றும் உணர்வு, அனைத்தும் எதிர்மறையாக நடக்கும்போது எப்படி நேர்மறையாக பயமின்றி இருக்க முடிந்தது என்பதுதான்.


காந்தியின் உருவம் எழுதுவது, பேசுவது, புன்னகைப்பது என பல்வேறு வடிவங்களில் நமக்கு நேர்மறையாக, எதிர்மறையாக மனிதர்களைப் பொறுத்து உணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. காந்தியின் உருவங்களை மக்களுடன் பார்க்கும்போது அவரை எளிதில் அணுக கூடியவராக காண்கிறோம். ஏறத்தாழ எளிய பாகுபாடு இல்லாத, வன்முறையற்ற, இந்து முஸ்லீம் மதவாதம் அற்ற நிலத்தின் பிரதிநிதியாக அவரைக் கருதலாம். காந்தி, நேரு ஓவியங்கள் பத்திரிகைகளில் வருகிறது என்றால் இந்திய ஜனநாயகம் ஏதேனும் அபாயத்தில் இருக்கிறதாக தோன்றுகிறது. இந்தியாவைக் குறிப்பிட நினைக்கும் கேலிச்சித்திர கலைஞர்கள் காந்தியை தேசிய நாளிதழ்களில் மேற்சொன்ன முறையில்தான் வரைகிறார்கள். மதவாதம், வாக்குவங்கி அரசியல், வன்முறை அதிகரிக்கும் சூழலில் காந்தியை நாம் இன்னும் கைவிடவில்லை என்று கூற காலம் இருக்கிறது.










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்