என்னை மட்டுமே எனக்குப் பிடிக்கும் - நார்ச்சிஸ்ட் டிஸார்டர்

 











இன்று உலகில் வாழும் இளைஞர்கள் பெரும்பாலும் நார்ச்சிஸ்ட் மனநிலை கொண்டவர்கள்தான். இவர்கள், அனைத்து விஷயங்களிலும் தாங்களே முன்னிலை பெறவேண்டும், மையமாக இருக்கவேண்டுமென நினைப்பார்கள். இதனால்தான் போன்களில் இன்ஸ்டா ரீல்ஸ், ஃபேஷன், நேபாளம் வரை பைக்கில் ட்ரிப் என பல்வேறு லட்சியங்களைச் சொல்லுவார்கள். எப்படி பிரபலமாவது என யோசிப்பார்கள். அவர்களது நண்பர்களையும் தங்களை பாராட்டியே ஆகவேண்டும் என வலியுறுத்துவார்கள். கோரஸ் பாடவே நண்பர்களை வைத்திருப்பார்கள். சுயமோகிகளை யாரும் விமர்சனம் செய்யமுடியாது. அப்புறம் என்னுடைய உடலின் ஒவ்வொரு அங்குலமும் அவ்வளவு பர்ஃபெக்ட் தெரியுமா? என வம்புச்சண்டைக்கு வந்துவிடுவார்கள். எதிர்கொள்வது கடினம். 


நார்ச்சிஸ்ட் என தன்னை மட்டுமே விரும்பும் மனநிலை கூடுதலாகி, ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறையும்போது தற்கொலை செய்துகொள்வார்கள். குறிப்பாக, வயதாகும்போது இயல்பாகவே ஆண், பெண்ணின் அழகு குறையும். அப்போது தன்னை  பிறர் நினைக்கவேண்டும், அழியாப்புகழை அடைய தற்கொலை செய்துகொள்வார்கள். 


இலக்கிய எடுத்துக்காட்டாக லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனினா நாவல் உள்ளது. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் செல்லும் இந்த நாவலில் இரண்டு முக்கியமான தன்னை மட்டுமே விரும்பும் பாத்திரங்கள் உண்டு. ஸ்டீவ், அவரது சகோதரியான அன்னா. இந்த இரண்டு பேருமே தன்னை மட்டுமே பிறர் அங்கீகரிக்கவேண்டும், அன்பு செலுத்த வேண்டும் என கருதுபவர்கள். திருமணமானபிறகும் கூட ஸ்டீவ் மனைவியிடம் அப்படி எதிர்பார்ப்பான். அவளோ தனக்கு பிறந்த மகனைப் பார்த்துக்கொள்ள தொடங்குவாள். 


உடனே ஸ்டீவ், தன்மேல் பிரியம் காட்டும் இன்னொரு பெண்ணைத் தேடத் தொடங்குவான். பெண்களைத் தேடவும், பிறரைப் பாராட்ட வைக்கவும் பெரும் செலவிலான விருந்துகளை ஏற்பாடு செய்வான். அதில் பரிமாறப்படும் அனைத்து உணவுப் பண்டங்களையும் பார்த்து நுட்பமாக தயாரிக்க கூறுவான். அன்னாவுக்கு வருவோம். இவளும் பார்த்தவுடனே பிறரை இயல்பாகவே வசீகரிக்கும் தன்மை கொண்டவள். அதை அவள் பயன்படுத்தி புதிய காதலர்களை அடைய விரும்புவாள். ஒரு கட்டத்தில் அந்த எண்ணமே தீவிரமாகி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வாள். 


இதற்கான சிகிச்சையில் நார்ச்சிஸ்ட் பிறழ்வாளர்கள் தங்களது குறைபாட்டை ஏற்கவே மாட்டார்கள். தங்களை மையப்படுத்தி பிறரது கவனம் தன்மீதே இருக்கவேண்டுமென நினைப்பார்கள். அதற்கான முயற்சிகள்தான் முக்கியமாக தெரியும். பிறர் காட்டும் அன்பை பொருட்படுத்த மாட்டார்கள். தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றே சாதிப்பார்கள். அதைத்தாண்டி குழுவாக, தனியாக சிகிச்சை எடுப்பது குறைபாட்டின் பாதிப்பைக் குறைக்கும். வெற்றிபெற்ற தொழிலதிபர்கள், பிரபலங்கள் நார்ச்சிஸ்ட் எனும் சுயமோக அறிகுறிகள் சிலவற்றை வெளிக்காட்டுவார்கள். ஆனால் அதற்காக அவர்களை  ஆளுமை பிறழ்வாளர்கள் என்று கூற முடியாது. பிறழ்வு நிலைக்கான அறிகுறிகள் அதிகரிக்கும்போதுதான் ஆபத்து உருவாகிறது. 

படம் பின்டிரெஸ்ட் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்