நான் என்ன செய்யணும், நீங்களே சொல்லுங்க - டிபென்டண்ட் பர்சனாலிட்டி டிஸார்டர்
இந்தியர்களுக்கு முக்கியமான பிரச்னையே, முடிவு எடுப்பதுதான். சிலர் முடிவெடுப்பதில் மிக தீர்க்கமாக இருப்பார்கள். உணவகத்தில் சாப்பிடப் போகிறீர்கள். சாப்பிட்டு முடித்தபின் டெசர்ட் ஒன்றை ஆர்டர் செய்கிறீர்கள். ஆனால் சர்வர் அதை மாற்றிக் கொண்டுவந்துவிடுகிறார். உறுதியாக முடிவெடுப்பவர், நாங்கள் ஆர்டர் செய்தது இதுதான். மாற்றிக்கொண்டு வாருங்கள் என்பார். ஆனால் மறுப்பு சொன்னால் சங்கடமாகுமோ என நினைக்கும் நபர், பரவாயில்லைங்க என இனிப்பை ஏற்றுக்கொள்வார். இதுதான் டிபென்டெண்ட் பர்சனாலிட்டி டிஸார்டரின் அடிப்படை அறிகுறி.
மற்ற அறிகுறிகளையும் பார்த்துவிடலாம்.
இந்த வகை ஆளுமை பிறழ்வு கொண்டவர்களை நண்பர்களோ பெற்றோர்களோ தான் வழிநடத்தவேண்டும். ஒருமுறை அல்ல. வாழ்க்கை முழுவதும். தனது கழுத்தில் பெல்ட்டை மாட்டி, அதன் மறுமுனையை இன்னொருவர் கையில் கொடுத்துவிட்டு சுதந்திரமாக வாழ்வேன் என சண்டை பிடிப்பார்கள். வாதம் செய்வார்கள்.
வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் பிறரைச் சார்ந்தே வாழ்வார்கள்.
சுயமாக முடிவெடுத்து டீ, காபி, கல்யாணம், சாந்தி முகூர்த்தம் என ஏதும் செய்யமாட்டார்கள். இயற்கையில் வரும் வெயில், மழை, பனி போல அதுவாக நடந்தால், நடக்காது. பிறர் நடத்தி வைத்தால்தான் எதுவும் அமையும். தன்னம்பிக்கை இருக்காது. முடிவெடுத்தால் அது சரியாக இருக்குமா என பீதியில் இருப்பார்கள்.
பிறரது ஆதரவு தேவை என்பதற்காக ஆம் என்று மட்டுமே சொல்லுவார்கள், மறுத்தே பேச மாட்டார்கள். மறுத்து பேசினால் பிறர் உதவ மாட்டார்களோ என்று பயப்படுவார்கள். ஒரு உறவு முறிந்துபோனால் உடனே இன்னொரு உறவைத் தேடுவார்கள்.
எந்த உறவிலும் பயமும், சார்ந்திருத்தல் மட்டுமே இருப்பதால் எவருக்கும் அன்பை தர இயலாது.
தனியாக வாழ்வது கடினமாக மாறிவிடுவதால், பிறரது சுரண்டலையும் ஏற்கிறார்கள். திருமண வாழ்வில் உடல், மனம் ரீதியாக இணையர் உருவாக்கும் வன்முறைகளையும் ஏற்கிறார்கள். தன்னம்பிக்கையும், திறன்களை வளர்த்துக்கொள்ளும் திறன் இல்லாததுமே
காரணம்.
சிகிச்சை
மன அழுத்தம், பதற்றம் தவிர்க்க பென்ஸோடையஸ்பைன் என்ற மருந்தை மருத்துவர் பரிந்துரைப்பார். கூடுதலாக, மனிதர்கள் மீது நம்பிக்கை வருவதற்கு குழு தெரபி பரிந்துரைக்கப்படுகிறது. இதன்மூலம் தனது கருத்துகளை சொல்லுவதற்கான நம்பிக்கையை பிறழ்வாளர் பெறுவார். சமூக திறன்களை சற்றேனும் வளர்த்துக்கொள்வார். மருத்துவரிடம் எளிதாக தவிர்ப்பு மற்றும் சார்பு பிறழ்வாளர்கள் பேசிவிட மாட்டார்கள். விமர்சனம், கருத்து தன்னை பாதிக்கும் அல்லது தனக்குத் தேவையான முடிவுகளை மருத்துவரே எடுக்கலாம் என்ற தீர்மானத்தில் இருப்பார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக