இந்தியாவுக்கு ஏற்றதா காந்தியப் பொருளாதாரம்? - எதிர்கொண்ட முரண்பாடுகள்

 

 

 


 

 காந்தியப் பொருளாதாரம் முக்கியமானது எப்படி?

 

இன்று உலகளவில் வெளியான பொருளாதார நூல்களை எடுத்துக்கொண்டால் அதில், ஒரு பத்தியேனும் காந்தியப் பொருளாதாரம் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள். காந்தி, சுயராஜ்யம் நூலில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருக்கவேண்டுமென கூறியிருந்தனர். இந்த கருத்தை அப்போது இருந்த தலைவர்களான கோகலே, நேரு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாவர்க்கர் அந்தளவு நம்பிக்கையாக எதிர்கொள்ளவில்லை. ஆனால் காந்தி அந்த சிந்தனையைத்தான் சர்வோதயா எனும் அமைப்பாக மாற்றிக் காட்டினார். மத்திய அரசு நடத்திவரும் காதி அமைப்பும் காந்தியின் சிந்தனை வழியாக உருவான அமைப்பேயாகும். இந்த அமைப்புகள் மூலம் கைத்தொழில் கற்ற மக்களுக்கு வருவாய் ஈட்டும் வழி கிடைக்கிறது.


பாலியெஸ்டர் நிறுவனங்களுக்கு ஆதரவாக அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு கதரைப் போற்றுதும் என காந்தி செயல்படவில்லை. தான் பேசிய விஷயங்களையே செயல்பாடாக செய்து காட்டினார். இவரது சிந்தனைகளை அடியொற்றி இரு பொருளாதார அறிஞர்கள் உருவானார்கள். அவர்கள் - ஜே சி குமரப்பா, வினோபா பாவே என்ற இருவரும் இந்தியாவின் சுயசார்பை காந்தியின் சிந்தனை வழியாக உருவான சிந்தனைகளால் வளப்படுத்தினர்.


நிலக்கிழார்கள் வைத்திருந்த கூடுதலாக நிலங்களை ஏழை மக்களுக்கு விட்டுத்தர வினோபா பாவே இயக்கம் நடத்தினர். இதனால் மக்கள் பலரும் பயன்பெற்றனர். இவரின் நீட்சியாக நாடெங்கும் பல மனிதர்கள் இச்செயல்பாட்டை முன்னெடுத்தனர். தமிழ்நாட்டில் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டு. காந்தி, பெரும் தொழில் நிறுவனங்கள் உருவாகி வருவதை இந்தியாவின் இயற்கை வளத்தை அழித்துவிடும் என பயந்தார். அதை அவர் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தினார். அவர் பிரதமராக தேர்ந்தெடுத்த நேரு, வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏற்பட்ட தொழில்புரட்சியில் பெரும் ஈடுபாடு கொண்ட மனிதர்.. எனவே, நாட்டை பொருளாதார வளர்ச்சி கொண்டதாக கட்டமைக்க அவர் பெரும் தொழிற்சாலைகளை அமைக்க நினைத்தார். அதையும் சாதித்தார். சோசலிச வழியில் அதை செய்தார். இதனால்தான் நிறைய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க உரிமம் பெறும் சூழல் உருவானது.

காந்தியின் கருத்துகள் முழு இந்தியாவை, மக்களை புரிந்துகொண்டதோடு எதிர்காலத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை ஓரளவு யூகித்த காரணத்தால் உருவானது. நேருவைப் பொறுத்தவரை மக்கள் பாதிக்கப்பட்ட பஞ்சங்களை கவலையுடன் பார்த்தார். எனவே, அதுபோல மக்கள் கண்ணீர் சிந்தக்கூடாது. வளமாக வாழ வேண்டும் என நினைத்தார். இருவரும் ஒன்றுபட்டது இந்தியா வளமாக இருக்கவேண்டும் என்பதுதான். அதற்காக பயன் கொடுக்கும் என நம்பிய வடிவங்கள் மட்டுமே வேறுவேறு.


காந்தி மக்கள் இந்தியாவில் பயிரிடும் விளைபொருட்களிலிருந்து பொருட்களை தயாரித்து தம் உள்நாட்டுத்தேவை போக உபரியை விற்றால் போதும் என நினைத்தார். நேரு, உலக நாடுகளுக்கு தேவையான பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். தற்போது இந்தியா முதலாளித்துவ கொள்கைப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் கலப்பு பொருளாதார முறை நடைமுறையில் இருந்தது.

படம் போல்ட்ஸ்கை



கருத்துகள்