சொத்துக்கு ஆண்வாரிசே ஒரே வழி! கடிதங்கள் - கதிரவன்

 







நேருவை மறக்கும் ஊடகங்கள்!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

உங்கள் பெற்றோரை கேட்டதாக கூறவும். இன்று மழை சற்று விட்டுவிட்டு பெய்தது. மழை காரணமாக ஊரில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டுப்போகும். ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்டர்நெட் போய்விட்டது. நேற்று காந்தியும் ஜவகரும் என்ற நூலைப் படித்தேன். வெ.சாமிநாதசர்மா எழுதிய நூல். நேருவுக்கும் காந்திக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை 34 பக்கங்களில் எழுதி தொகுத்து இருந்தார். இந்த ஆண்டு நேருவின் 132ஆவது பிறந்தநாள் அமைதியாக கடந்துபோயிருக்கிறது.

இந்துத்துவ அரசு தாக்குதல், மிரட்டல் காரணமாக நேரு பற்றி பேசுபவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். சில ஊடகங்கள் மட்டுமே நேரு பற்றிய கட்டுரைகளை அச்சிடுகின்றனர். இந்து ஆங்கிலம் நாளிதழ், தனது ஞாயிறு நாளிதழில் இணைப்பிதழான மேகஸினில் தொடர்ச்சியாக நேரு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அதைப் படித்தேன். நேரு புரட்சிகாரரா இல்லையா என்பதே மையப்பொருள். கட்டுரையில் நிறைய விஷயங்கள் இல்லை. நூல் ஒன்றிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்ட கட்டுரை.

இன்று வாட்ஸ்அப் படித்துவிட்டு வியாக்கியானம் பேசுபவர்கள் அதிகரித்துவிட்டார்கள். எனவே, உண்மை என்பது பின்னுக்குப் போய் பொய், வதந்திகள் முன்னுக்கு வந்து மேடையை அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன.

அன்பரசு

18.11.2021

மயிலாப்பூர்

-----------------------------------------















சொத்துக்கு ஆண்வாரிசே ஒரே வழி!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு,வணக்கம். நலமா?

இங்கு சென்னையில், மழை விட்டுவிட்டுப் பெய்கிறது. டெய்லி புஷ்பம் நாளிதழ் முதலாளிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் பத்திரிகை ஊழியர்கள் அனைவருக்கும் மது விருந்து வழங்கப்படுகிறது. நான் இத்தகைய நிகழ்வுகளில் எப்போதும் பங்கேற்க விரும்பவில்லை.

ஆண் வாரிசு தான் குடும்பத்தை வழி நடத்த வேண்டும். சொத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் மேல் சாதியினர் மிகவும் கவனமாக இருக்கின்றனர். இதை எளிய வார்த்தைகளில் என்னருகே அமர்ந்து உள்ள லெஜண்ட் ஓவியர் கூறினார். அவரும் விருந்தில் பங்கேற்றவர்தான். மாற்றங்கள் வரும் எதிர்பார்த்துக்கொண்டே இரு என்று கூடுதலாகச் சொன்னார். மாதக்கூலி வாங்கும் நமக்கு மாற்றம் என்பது நாமாக வெளியேறுகிறோமா அல்லது நிறுவனமே வெளியேற்றுகிறதா என்பது மட்டுமே.

பெரிய முதலாளி, சின்ன முதலாளி, குட்டி முதலாளி என ஐ போல முதுகெலும்பை வளைத்து காலை நக்கி பிழைப்பவர்கள் எதிலும் தப்பித்துக்கொள்வார்கள்தான். நான் இதற்கு தயாராக இல்லை. வேலையைச் செய்து சம்பளத்தை பெறுவதோடு நிறுத்திக்கொள்வதே நல்லது.

எழுதுவதில் இப்போது சற்று சுணக்கமாக உள்ளது. எனவே, தினசரி எழுதுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். எழுதவேண்டிய ஐடியாக்கள் நிறையவே இருந்தாலும் மனம் இன்னும் அதற்கு படியவில்லை. உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்கள். நன்றி!

அன்பரசு

20.11.2021

மயிலாப்பூர்



கருத்துகள்