பெரிய அண்ணனைக் கொன்றவர்களை ஒன்றாக சேர்ந்து கொல்லும் குடும்பம்! - கேங்லீடர் - சிரஞ்சீவி, விஜயசாந்தி
கேங் லீடர்
சிரஞ்சீவி, விஜயசாந்தி, கிருஷ்ணா, ஆனந்தராஜ்
இயக்கம் விஜயா பாபிநீடு
இசை பப்பி லகிரி
மூன்று அண்ணன் தம்பிகள். இவர்களுக்குள் உள்ள பாசமும், பின்னாளில் ஏற்படும் முரண்பாடுகளும்தான் கதை. ரகுபதி மட்டுமே ஆபீஸ் வேலைக்கு செல்பவர். ராகவன், குடிமைச் தேர்வுகளுக்காக படித்துக்கொண்டிருக்கிறார். ராஜாராம் வேறு யார் சிரஞ்சீவிதான். படித்துவிட்டு தனது கேங் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இவர்கள் மொத்தம் ஐந்து பேர் கொண்டு குழு. இந்த குழுதான் படம் நெடுக வருகிறது. படத்தின் திருப்புமுனையே ராஜாராமின் நண்பர்கள்தான்.
ராஜாராமைப் பொறுத்தவரை வேலை என்பது கிடைக்கும்போது செய்யலாம். ஆனால் எல்லாவற்றையும் விட குடும்பம், பெருமை முக்கியம் என நினைக்கிற ஆள். ராகவனின் தேர்வு செலவுகளுக்காக அவர் அறை ஒன்றை காலி செய்து கொடுக்க போகிறார். அங்குதான் நாயகி அறிமுகம். இவர் யாரென படத்தில் யாருமே கேட்பதில்லை. பெற்றோர் இருக்கிறார்களா, இல்லையா என்று. இறுதியில் அவரே தான் யார் என்று சொல்லுகிறார். அதுதான் முக்கியமான ட்விஸ்ட். நமக்கு அது பெரிய ஆச்சரியம் தருவதில்லை. நமக்குத் தேவை பப்பி லகிரியின் துடிக்கும் இசை பீட்டுகள்தான். பாப்பா ரீட்டா, வானே வானே பாடல்கள் கேட்க, பார்க்க நன்றாக உள்ளன.
படத்தின் அனைத்து பாடல்களிலும் சிரஞ்சீவி சிறப்பாக ஆடியுள்ளார். எதிலுமே நேர்த்தி குறையவில்லை. நகைச்சுவை, நெகிழ்ச்சி, கோபம் என அனைத்துமே சமச்சீராக அமைந்த படம்.
ராஜாராம் சந்திக்கும் எதிரிகள் அதிகம். அவர் வாழும் ஊரில் கூலிக்கொலை செய்யும் ஏகாம்பரம், கனகாம்பரம் என அண்ணன் தம்பி இருவர் உள்ளனர். அ்வர்களுக்கு தோதாக வழக்குகளை மாற்றி எழுத கமிஷனர் இருக்க அப்புறமென்ன....
மூத்த அண்ணன், தனது சகோதரனின் படிப்பு செலவுக்கு வீட்டை விற்று பணம் அனுப்புகிறார். மூன்றாவது பிள்ளை ராஜாராம், தான் சிறைக்கு சென்று அதில் கிடைத்த பணத்தை இரண்டாவது அண்ணனின் படிப்பு செலவுக்கு அனுப்பி வைக்கிறார். அதெல்லாம் சரி. ஜெயில் வார்டனின் மகள் செய்த விபத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு ஆகும் செலவை யார் தருவது என்ற கேள்விக்கு எந்த பதிலுமில்லை.
படத்தின் இறுதியில் வில்லன்களை நாயகி நெருப்பில் தள்ளி கொல்கிறாள். இன்னொருவரை கல்லில் நெருக்கி கொல்கிறார்கள். இதை மாவட்ட ஆட்சியர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார். இதெப்படி சாத்தியம் என புரியவில்லை. ஒரே நேரத்தில் அண்ணனாக தம்பியைக் காப்பாற்ற வேண்டும், ஆனால் அரசு அதிகாரியாக தனது அண்ணன் சாவுக்கு பழிவாங்கவேண்டும். இப்படியான கோணங்களை பெரிதாக இயக்குநர் யோசிக்கவில்லை. அப்படி யோசிக்கும் போதெல்லாம் விஜயசாந்தி சிரஞ்சீவியைப் பார்த்து சூடான முத்தத்தை பறக்க விடுகிறார். ரா.. ரா நான் ராஜா என கூறுகிறார். எனவே படத்தின் லாஜிக் அப்புறம்.. இப்போது பாடலுக்கு போய்விடுவோம் என கவனம் மாறிவிடுகிறது.
படம் முழுக்க கொலைக்கு கொலை என ஒரு குடும்பம் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு பழிவாங்குகிறது. அவ்வளவுதான் அய்யா. கொலைகளுக்கு லீடர், சிரஞ்சீவி. அவர்தான் கேங்லீடர்.
சிரஞ்சீவிக்காக மட்டுமே பார்க்கலாம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக