சிவன் கோவிலை புனரமைக்கும் இரட்டைத் தலை நாகம் - நந்தி ரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்













நந்தி ரகசியம் 


இந்திரா சௌந்தர்ராஜன்


மின்னூல் 


இறைவனை நம்பினால் இன்னல் நீங்கும். அதற்கு மனித முயற்சியும் சிறிது தேவை என்பதை நூலாசிரியர் கூறுகிறார். கதையும், அதற்கான சம்பவங்களும் வலுவாக இல்லை என்பதே நாவலின் பெரும் பலவீனம். 


நாவலை படிப்பதை விட நூலில் உள்ள கோவில் அமைவிடம், ஏன் கோவில் குறிப்பிட்ட கன்னி மூலையில் அமைக்கப்படுகிறது என்ற தகவல்கள் துணுக்குகளாக வாசிக்க நன்றாக இருக்கின்றன. 


ஊர் பெரிய மனிதர் உடையார். அவர் சிந்தாமணி என்ற பெண்ணை உடலுறவுக்கென காதலியாக சேர்த்துக்கொள்கிறார். இதனால் அவரை திருமணம் செய்த மனைவி திரௌபதி கணவனை விட்டு விலகுகிறாள். அதே ஊரில் தனது மனநிலை சரியில்லாத மகனுடன் தங்கியிருக்கிறாள். ஒருநாள் உடையார் இறந்துவிட, காதலி அழுதுக்கொண்டிருக்க ஊர் பெரியவர்களில் ஒருவர் உடையாருக்கு உரிய மனைவி என்பவள் திரௌபதிதான்.அவளைக் கூப்பிட்டால்தானே உடலுக்கான காரியங்களை செய்ய முடியும் என சொல்லுகிறார். இந்த நேரத்தில் சொத்து தொடர்பான வாக்குவாதம் தொடங்குகிறது. உடையாரின் வழக்குரைஞர் வாதிராஜ், அனைத்து சொத்துகளும் காதலியான சிந்தாமணிக்கு சொந்தம் என்று எழுதிய உயிலைக் காட்டுகிறார். கூடவே கட்டாந்தரையாக கிடக்கும் பரம்பரை சொத்து குடும்பத்திற்கானது என்பதை அதை மனைவி திரௌபதிக்கு அளிக்கிறார். 


இன்னொரு கிளைக்கதையாக சைவ மதம் சார்ந்து பரிகாரம் என ஒரு இளைஞன் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கிறான். அவன் பெயர் மோகன். அவன் தீட்சிதர் ஒருவரை அணுகி தனது பிரச்னைகள் நிறைய இருக்கின்றன. அதற்கு பரிகாரம் என்ன, என் வாழ்க்கை வெளிச்சமாகுமா என்று கேட்கிறான். அதற்கு அவர் சிவன் கோவிலை புத்துயிர் பெறச்செய்தால் நிலைமை மாறும் என்கிறார். மோகனைப் பொறுத்தவரை மூன்று அக்காக்கள் இருவருக்கு மணம் செய்யவேண்டும். ஒருத்திக்கு மணம் ஆகியும் கணவர் சரியில்லை என தன் வீட்டுக்கே வந்துவிடுகிறாள். 


இந்த பிரச்னைகளை சிவன் முன்னால் இருக்குமே நந்தி அவர் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதே கதை. 


நாவலில் நாம் உணர்ச்சிரீதியாக பாத்திரங்களுடன் ஒன்றுபடும் இடம் என்பதே எங்கேயும் இல்லை என்பதே நூலின் பெரிய பலவீனம். சரோஜா ஸ்வீட் சாப்பிடு, புத்திர பாக்கியம் கிடைக்கும் என விளம்பரம் செய்தால் எப்படி ஐயையோ என இருக்கிறதோ அதேபோல வேலப்பன் நந்தியைச் சுற்றி வந்து உடனே சித்தம் தெளிவாகிறான். மோகனுக்கும் உடனே அக்காவின் கணவர் திருந்துகிறார். இதெல்லாம் அவசர கதியில் எழுத்தாளர் எழுதியிருக்கிறாரோ என்ற சந்தேகத்தே எழுப்புகிறது. 


தன் கணவரை விஷம்வைத்து கொன்று, அதை மறைக்க பணமும் கொடுக்கிறேன். தனது உடலைக் கூட பயன்படுத்து என வழக்குரைஞரிடம் பேரம் பேசிய ஒரு பெண்ணை திரௌபதி மன்னிக்கிறாள் என்பது சரியான முடிவல்ல. 


இறுதியில் நாகம் முனிவராக மாறி நல்வழி காட்டி விலகுவது நாவலுக்கு பொருத்தமான முடிவாகவும் அமையவில்லை. 


பார்த்தாலே தெரியும் செய்திதான். ரகசியம் ஏதுமில்லை. 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்