ரயில் நிலையத்தில் ஜோதிட நிரூபணம் - கடிதங்கள் - கதிரவன்

 










ஜோதிட நிரூபணம்!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என கார்ட்டூன் கதிரவன் போன் செய்தபோது விசாரித்தார். நலமோடு இருப்பதாக பதில் கூறினேன். நாகப்பட்டினத்தில் இருந்து இப்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறார். அவர் மனைவி அகிலா, அரசுத்தேர்வுக்கு படித்து தேர்வுகளை எழுதி வருவதாக கூறினார். ஒருமுறை தேர்வு எழுதிவிட்டு ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறார்.

திருவான்மியூர் ரயில் நிலையம் என்று சொன்னார். அங்கு, ஆதவன் நாளிதழில் முன்னர் பணியாற்றிய குமார் என்பவரை சந்தித்திருக்கிறார். முழுநேர ஜோதிடரும், பகுதிநேர ஃப்ரூப் ரீடருமான குமார், ரயில் நிலையத்திலேயே அகிலாவுக்கு ஜோதிடம் பார்த்து வேலை பற்றி கூறுவதாக சொல்லியிருக்கிறார். கதிரவனுக்கு மனதில் சங்கடமாகியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கதிரவன் குமாரை சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் அப்போதும் தனது ஜோதிட திறனை நிரூபிக்க வாய்பைத் தேடியிருக்கிறார். அகிலா தடாலடியாக பேசக்கூடியவர். கணவரின் நண்பர் என்பதால் நிதானம் கூட்டி பொறுத்திருக்கிறார்.

நாளிதழ் பணிக்கான கட்டுரைகளைத் தேடி படித்து வருகிறேன். கோவையிலிருந்து புதிதாக பெண் ஒருவர் உதவி ஆசிரியராக பணியில் சேரவிருக்கிறார் என கிசுகிசு பரவியது. வேலை செய்யும் விஷயங்கள் மாறும் என நினைக்கிறேன். நன்றி!

அன்பரசு

12.12.2021

மயிலாப்பூர்

------------------------------------------------------------------------------

கழிவறை ஆக்கிரமிப்பு போர்!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

நீங்கள் சென்னைக்கு வந்தாலும் கூட உங்களை என்னால் பார்க்க முடியவில்லை. வருத்தம்தான். என்ன செய்வது, நேரம் குறைவு. நல்லபடியாக ஊருக்குச் செல்லுங்கள். இன்னொரு நாள் சந்திப்போம். டிசம்பர் மாத குளிர் இரவிலேயே தொடங்கிவிடுகிறது. நான் காலை எட்டு மணிக்கே எழுந்து குளித்து முகச்சவரம் செய்துவிடுகிறேன். அதற்கு பிறகு நேரம் ஆனால், வட இந்திய ஆட்கள் கழிவறை, குளியலறையைக் கைப்பற்றி விடுவார்கள். மூன்றாவது மாடியில், வட இந்தியர்களோடு இப்போது நாங்கள் 9 பேர் தங்கியுள்ளோம்.

திருமண வயது சட்டம் பற்றி படித்துக்கொண்டு இருக்கிறேன். பெற்றோர்கள் 21 வயது வரை பிள்ளைக்கு பாதுகாவலர்களாக இருப்பார்கள். பெண்களின் பாலியல் தேர்வுகளை, விருப்பங்களை மறுத்தே சமூகம் உயிர்பிழைத்து வந்திருக்கிறது. பல்வேறு சட்டங்கள் வழியாக பாஜக அரசு தனது கருத்தியலை சமூகமெங்கும் பதித்து வருகிறது. நன்றி!

அன்பரசு

21.12.2021

மயிலாப்பூர்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்