உடைந்துபோன திருமண உறவு - கடிதங்கள் - கதிரவன்

 








பிரேக் இல்லாத வண்டியை இயக்குவது போல...

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? எனது லினக்ஸ் கணினி பழுதானதால் இதுவரை எழுதிவந்த, எழுதி வைத்து சேமித் கோப்புகள் தானாகவே அழிந்துவிட்டன. சோதித்ததில் சில கோப்புகளை குப்பைத்தொட்டியில் பார்த்தேன். மீட்க முடியவில்லை.

அதை மீண்டும் எழுத வேண்டும். லினக்ஸ் கணினியில் காணாமல் போன கோப்பைத் தேடுவது கடலில் கலந்துவிட்ட ஆற்று நீரை தனியாக பிரிப்பது போல கடினமாக இருக்கிறது. லினக்ஸ் அமைப்பு முறையை முழுமையாக கற்காமல் அதை பயன்படுத்துவது தவறு என இப்போது எனக்குத் தோன்றுகிறது.

கணியம் சீனிவாசன் சார் உதவினாலும் கூட கோப்பை எளிதாக மீட்க முடியவில்லை. பேக்அப் எடுத்து வைத்திருக்கவேண்டும் என அரிய அறிவுரையைச் சொன்னார். நல்ல அறிவுரை. ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது. பிரேக்கிற்கு இணைப்பு கொடுப்பதற்கு முன்னரே வண்டியை சாவி போட்டு இயக்கியாயிற்று. வண்டி இப்போது சேட்டாவின் டீக்கடை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் லபோதிபோ என கத்துவது, ட்விட்டரில் போடும் அட்வைஸ்களை சொல்லி என்ன செய்வது...

இனி க்ளவுட்டில் கோப்பைச் சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும். 60 பக்கத்தில் எழுதிய நூலை இப்போது திரும்ப எழுத வேண்டும். முன்பு உழைத்த உழைப்பு அத்தனையும் வீண்....

அன்பரசு

5.12.2021

மயிலாப்பூர்

-------------------------------------------------











--------------------------------------------------------------------------------------

திருமணம் என்னும் சமூக உறவு!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று உங்களின் திருமண வாழ்க்கை பற்றி இரண்டு இடங்களில் பேசும்படி ஆகிவிட்டது. உண்மையில் பேச்சு இப்படி போகும் என நான் நினைக்கவில்லை. ஒன்று, உங்கள் பல்கலைக்கழக சீனியரான சன் மோகன் ராஜ் அண்ணாவிடம் பேசினேன். அவர் குறிப்பாக உங்களைப் பற்றி பேசி கேட்டார்.

இரண்டாவது இடம் சேட்டா ஜெகன் டீக்கடை. அவர் உங்களைப் பற்றிக் கேட்டார். திருமண வாழ்க்கை, வேலை பற்றி சொன்னேன். இந்த இரு நபர்களும் தங்களின் தோல்வியுற்ற திருமண வாழ்க்கை பற்றி விரிவாகப் பேசத் தொடங்கினார்கள். என்னால் பதிலுக்கு ஏதும் பேச முடியவில்லை. சங்கடமாகப் போய்விட்டது.

ஒருவரின் அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பேசுவது தவறு என நினைக்கிறேன். சேட்டா ஜெகன், டிவி சேனல் விவாதம் போல விவாதம் செய்யத் தொடங்கினார். அவர் பேசியதில் உள்ள வார்த்தைகளால் கவனம் திசைதிரும்பிய அருகிலிருந்த டெய்லர் கடை பெண்மணி எங்களை முறைக்கத் தொடங்கினார். அதை சில நொடிகளில் சேட்டா ஜெகன் அடையாளம் கண்டுவிட்டார். நான் சற்று தாமதமாகவே பார்த்தேன். நிசப்தம் பிராணசங்கடம் என்ற நிலை டீக்குடித்து முடிப்பதற்குள் உருவாகிவிட்டது. டீ டம்ளரை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்காமல் காசு கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டேன். நன்றி!

அன்பரசு

6.12.2021

மயிலாப்பூர்



கருத்துகள்