இந்திய நாயினங்கள் பற்றி கவனிக்க கோரும் முக்கியமான நூல்! - இந்திய நாயினங்கள் - தியடோர் பாஸ்கரன்

 

















இந்திய  நாயினங்கள் 
தியடோர் பாஸ்கரன்  
காலச்சுவடு 
மின்னூல் 




இந்தியாவில்  உருவான 25  நாயினங்களை வரிசைக்கிரமமாக விவரித்து அதன் வரலாற்றைப் பேசும் நூல் இது. கூடுதலாக நாய்களால் ஏற்படும் ரேபீஸ் நோய்,அதற்கு செலவாகும்தொகை, தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தலையிடும் விலங்கு நல சங்கங்களின் விவகாரம், பாதிக்கப்படும் மக்கள் என இறுதிப் பக்கங்களில் பேசியுள்ளதும் முக்கியமான விவகாரம்தான். 


கோம்பை,ராஜபாளையம், பஷ்மி, சடை  நாய்கள், இமாலயன் மஸ்டிஃப் என பல்வேறு  நாய்களின் உடல் அமைப்பு, தனித்திறன்களைப்  பற்றி நூலில் விவரித்துள்ளார் ஆசிரியர். ஏறத்தாழ நாய்களைப் பற்றிய ஆய்வு நூலாக உருவாகியுள்ளது. நாய் என்ற பெயர் வந்தது எப்படி, அதன் பொருள் என்ன, இலக்கியத்தில் நாயை குறிப்பிட்டுள்ளனரா என்று தொடங்கப்பட்டிருப்பது நூலின் நோக்கத்தை  தெளிவுபடுத்துகிறது. பல்வேறு நாய்களின் புகைப்படங்களை பார்த்து அடையாளம் கொள்ள முடியும். அப்படி பார்க்க முடியாத நாய்களை ஓவியமாக நூலில்  காட்டியுள்ளார் ஆசிரியர். 


இந்திய நாயினங்களைப்பற்றி கள ஆய்வுகளை இந்திய அரசு நிறுத்தியதை வருத்தத்தோடு பதிவு செய்யும் ஆசிரியர், இந்திய  நாய் சங்கம் நாய்களை காட்சிப்படுத்துவதை தொடர்ச்சியாக செய்து வருவதையும் குறிப்பிடுகிறார். இப்படி  நாய்களை காட்சிபடுத்தும் சங்கங்களின் செயல்பாடு பற்றிய விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார். அமைப்பு இல்லாமல் தனிநபர்களாக தங்களுக்கு பிடித்த நாய்களைக் காப்பாற்ற உழைப்பவர்களையும் தியடோர் பாஸ்கரன் சுட்டிக் காட்டுகிறார். 


நமக்குத் தோழனாக 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து  வரும் நாய் பற்றி துல்லியமாக அறிந்துகொள்ள உதவும் நூல்  இது. நூல் 172 பக்கங்களைக் கொண்டது.  


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்