கூடுகிற வேலைச்சுமை - கடிதங்கள் - கதிரவன்

 














ஆழமான அக்கறை கொண்ட கட்டுரைகள்!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.

நலமாக இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அப்பா, அம்மாவின் நலனை விசாரித்ததாக சொல்லுங்கள். நவ.1 இல் அரசு சொன்னபடி பள்ளி தொடங்கினால், எங்கள் நாளிதழ் 15ஆம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன்.

ஃபிரன்ட்லைன் இதழ்களுக்கு கட்டிய சந்தா இன்னும் இரு இதழ்களோடு முடிவுக்கு வருகிறது. இதில் வரும் கட்டுரைகள் படிக்க நிறைய தகவல்களோடு உள்ளன. எல்லாமே ஆழமாக கருத்துகளை கொண்டவரை. படிக்க சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதழ் இதுவே. ஃபிரன்ட்லைனில் எழுதும் டி.கே. ராஜலட்சுமி என்ற கட்டுரையாளர் எனக்கு பிடித்தமானவர். இவர் தான் எழுதும் கட்டுரைகளில் தனது மனிதநேயம், அக்கறையை எப்படியாவது சொல்லிவிடுகிறார்.

இப்போது தினசரி அலுவலக வேலைக்கு ரெடிமேட் சட்டைதான் அணிகிறேன். ஃபேஷன் கம்ஃபோர்ட் என்ற கடையின் உடைகள் எனக்கு பொருத்தமாக இருக்கின்றன. அங்கு தான் அண்மையில், 1,450 ரூபாய்க்கு சட்டை, பேண்ட் வாங்கினேன். காலை எட்டு மணிக்கு ஆபீஸ் போய்விடுகிறேன். இதனை ஆசான் கேஎன்எஸ்சிடமிருந்து கற்றது. இப்போது ஆசான் என்னையும் மிஞ்சி ஏழுமணிக்கு ஆபீசுக்கு வந்துவிடுகிறார். இப்போதும் அவரின் உழைப்பு ஒரு அடி முன்னாடி தான் இருக்கிறது. வேகத்தையும் ஆற்றலையும் மேட்ச் செய்யவே முடியவில்லை. பிடிக்கவும் முடியவில்லை.

மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் என்று தெலுங்குப்படம் பார்த்தேன். ஹர்ஷா, விபா என இருவருக்குமான காதலும் கலாட்டாவும்தான் கதை. இதில் விபா, கல்யாணம் எதற்கு என்ற கேள்வியை உருவாக்கி பதில் கேட்க ஹர்ஷாவுக்கு பதில் தெரியவில்லை. பதிலை எப்படி தேடி கண்டுபிடிக்கிறான் என்பதுதான் படம். படத்தை வடபழனி பாலசோ தியேட்டரில் சன் மோகனுடன் பார்த்தேன். தியேட்டர் புல் தான். டிக்கெட் விலை ரூ. 102. நன்றி!

அன்பரசு

21.10.2021

மயிலாப்பூர்

-----------------------------






கூடுகிற வேலைச்சுமை!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

சென்னையில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. சாலையெங்கும் போக்குவரத்து நெரிசல். தி.நகரில் நல்ல கூட்டம். சூப்பர் மார்க்கெட்டிலும் கூட மக்கள் திரள் அதிகம்.

இன்று குங்குமம் வார இதழின் தலைமை உதவி ஆசிரியர் த.சக்திவேலைப் பார்த்தேன். வடபழனியிலுள்ள அவரது அறையில் சந்தித்தோம். ஸ்குயிட் கேம் 2 எபிசோடுகளைப் பார்த்தோம். கொரிய இயக்குநர் வெப் தொடரை உளவியல் புரிதலோடு நன்றாகவே எடுத்திருக்கிறார். வன்முறை அதிகம் என்பதால் பலரும் பார்க்கத் தயங்கலாம்.

சக்தி சாருக்கு அலுவலகத்தில் புதிதாக ஹெச்பி கணினி வாங்கித் தந்திருப்பதாக சொன்னார். கடந்த இருவாரங்களாக சனிக்கிழமை மட்டும் கூடுதலாக விடுமுறை எடுத்துவிட்டேன். ஆபீஸ் சென்று மோசமான மனிதர்களை சந்திப்பதே சலிப்பூட்டுகிறது. ஏதாவது படிக்க நினைத்தேன். நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வது முக்கியம் அல்லவா?

எங்களது நாளிதழ் எட்டாம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன். முதல் வாரத்திற்கான வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன். இந்த முறை எனக்கு பக்கம் கூடியிருக்கிறது. எனவே, வேலைச்சுமையும் கூடுதல்தான். ஒவ்வாமை பற்றிய நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன். 2021க்குள் முடிந்துவிடும் என நினைக்கிறேன். நன்றி!

அன்பரசு

30.10.2021

மயிலாப்பூர்





கருத்துகள்