2025ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பிய உணவு - பிரியாணி!
2025ஆம் ஆண்டு மக்களால் அதிகம் விரும்பப்பட்ட உணவுகள்
தமிழ்நாட்டில் உணவு என்றால் பஞ்சாய்ப் பறப்பார்கள். கோவிலில் உணவு, இருபது ரூபாய் உணவு, பௌர்ணமி, அமாவாசை உணவு என எப்படி உணவு போட்டாலும் அதை வாங்கித் தின்ன பெரும் கூட்டம் திரள்வது வாடிக்கை. தார்ச்சு கட்டிடம் கட்டியவனும் இலவச சோறு வாங்க மாரியம்மன் கோவில் வாசலில் காத்திருப்பான். ஒரு வேளை சோறு வீட்டில் ஆக்கவேண்டியதில்லை என குடும்பத்தையே கூட்டிவந்து புதிதாக மணமாகி வந்த மருமகளைக் கூட லைனில் இணைத்துக்கொள்ளும் தாராளமனம் கொண்ட மக்கள் வாழும் தேசமிது. ஸ்விக்கி நிறுவனம் மக்கள் அதிகம் விரும்பிய உணவுகள் என தன்னுடைய ஆர்டர் லிஸ்டை ஆராய்ந்து புள்ளிவிவரம் ஒன்றை தயாரித்துள்ளது. இது அவர்களுடைய வணிகத்திற்கானதுதான். இருந்தாலும் அதை நாமும் பொருட்படுத்தலாம். நம்மிடம் என்டிஏ அரசைப் போல உணவைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.
பிரியாணி 93 மில்லியன் அளவுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் கோழி, ஆடு, மாடு, பன்றி எத்தனை என்று தெரியவில்லை.பர்கர் 44 மில்லியன் அளவுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பர்கர் சாப்பிடும் மக்களை இனி மதவாத குண்டர் குழுக்கள் என்ன செய்வார்களோ....
இனிப்பு சாப்பிட்டால்தான்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். கல்யாணத்தைவிட கடைசியில் கொடுக்கும் ஐஸ்க்ரீமுக்காக உயிரையே விடும் ஆட்கள்தானே நாம். மாநகரில் நான்கு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்ட என்னுடைய சித்தி கூட சுப நிகழ்ச்சியில் ஐஸ்க்ரீம் தரப்படாத நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தார். அந்தளவு ஓசி என்றாலும் இனிப்புக்கு பழகிப்போய்விடும். ஐஸ்க்ரீம் மோகத்தில் அனாதையானது,வெற்றிலைதான். இனிப்பைப் பொறுத்தவரை நகரில் வொயிட் கேக் 7 மில்லியன் அளவுக்கு விற்றுத் தீர்ந்துள்ளது. இதற்கடுத்து, சாக்லெட் கேக் 5.4 மில்லியன் அளவுக்கு விற்றுள்ளது.
பெருந்தீனி செய்பவர்களில் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ளார். இவர் 65 உலர் பழங்களைக் கொண்ட பிஸ்கெட்டுகளுக்கு 47 ஆயிரம் ரூபாய்களை செலவிட்டிருக்கிறார். மும்பையைச்சேர்ந்த ஒருவர் ஆண்டிற்கு 3,200 ஆர்டர்களை ஸ்விக்கிக்கு அளித்து சாதித்திருக்கிறார். ஒரு நாளைக்கு ஒன்பது ஆர்டர் என கணக்கு வருகிறது.
சிற்றுண்டி வகையில் கூட சைவத்தை விட அசைவம் முன்னே சென்றுவிட்டது. வெஜ் பர்கர் 4 மில்லியன் என்றால் அசைவமான சிக்கன் பர்கர் 6 மில்லியன் அளவில் உள்ளது.
டெலிவரி செய்வதில் சாதனை படைத்துள்ள மனிதர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் முகமதுரசிக். 11, 198 டெலிவரிகளை செய்திருக்கிறார்.
மூலம்
ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக