கொங்கு பகுதி, தொழில்முனைவோருக்கான வழிகாட்டி! - மைல்கல்
மைல்கல்
த செ ஞானவேல்
தரு மீடியா வெளியீடு
விலை ரூ.400
தொடக்கத்தில் நன்றாக வந்த இந்து தமிழ்திசை பத்திரிக்கை இப்போது ஆர்எஸ்எஸின் ஆர்கனைசர் ஆகிவிட்டது என்று பேச்சு. அதில் வெளியான கொங்கே முழங்கு என்ற தொடரே நூலாக மாறியிருக்கிறது. இந்த நூலில் மொத்தம் இருபத்தைந்து தொழிலதிபர்கள் பேசப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள், அனைவருமே தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியைச் சேர்ந்தவர்கள். கொங்கு மண்டலம் என்று கூறுகிறார்களே அந்த நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டு தொழிலதிபர்கள் பெரும்பாலும் தங்களுடைய தொழில் ரகசியங்கள், போராட்டம், நிறுவனத்தின் லாபம், கிளைகளை பத்திரிகைகளுக்கு பகிர்ந்தது கிடையாது. அதாவது முன்னர், வரி பிரச்னை வந்துவிடுமோ என நினைத்திருக்கலாம். ஆனால், இந்த நூலில் தயங்கவில்லை. பல்வேறு விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள். இதில் நான் வாசித்தது எட்டு தொழிலதிபர்களை மட்டும்தான். மற்றவர்களை பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஏனெனில் மருத்துவமனை, ஆயத்த ஆடை ஆலைகளை நடத்துவது ஒப்பீட்டளவில் பெரிய சாகசம் என்று கூறமுடியாது. அதில் சிரமங்கள் உண்டு. ஆனால், பழம், உணவு விற்பது அடிப்படையில் கடினமான ஒன்று. எளிதில் கெட்டுவிடும் அல்லவா? இனி நூலுக்குள் செல்வோம்.
கோவை ஶ்ரீஆனந்தாஸ் உணவகம். இதை மணிகண்டன் நிர்வாக இயக்குநராக இருந்து நடத்துகிறார். அவருடன் நான்கு நண்பர்கள் தொழில் கூட்டாளிகளாக இருக்கிறார்கள். இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அடுத்த தலைமுறையும் தொழிலை நடத்த வந்துவிட்டது. இவர்கள், கோவை குண்டுவெடிப்பின்போது குத்தகைக்கு கிடைத்த கடையை எடுத்து நடத்தி இழப்புக்குள்ளாகி பிறகு தொழில்பாடம் கற்று முன்னுக்கு வந்தவர்கள். இதில் தவறு நடந்தால், அதை பூசி மெழுகாமல் பணிந்து மன்னிப்பு கேட்டுள்ளோம் என்கிறார்கள். இந்த பண்பை, பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை. ஆனால், இந்த ஒருமுறை பொறுத்துக்கங்க, அடுத்து ஒரு முறை வாய்ப்பு கொடுங்க என்று கேட்கிறார்கள். உணவு விஷயத்தில், தவறு ஒருமுறை என்றாலும் பாதிப்பு பலமடங்கு அதிகமாக இருக்கும். வாடிக்கையாளர்களை நல்லபடியாக உபசரித்து அனுப்பியே சாதித்திருக்கிறார்கள், இந்த உணவு உபசரிப்பு தொழிலில் வென்றவர்கள்.இன்று கோவையின் முக்கியமான அடையாளமாக ஆனந்தாஸ் உணவகம் உள்ளளது.
கோவை பழமுதிர் நிலையம் சின்னசாமி இருக்கிறார். இவருக்கு தொழில் கற்றுக்கொடுத்தவர், இஸ்லாமியர். அவர் கூறிய போதனைகளை இன்றும் கடைபிடிப்பதாக கூறியிருக்கிறார். கேட்க எளிமையாக இருக்கும் போதனை, கடைபிடிக்க கடினமானது. பொய் பேசாமல் நேர்மையாக வணிகம் செய்வது. கோவையில் உள்ள மில்லில் வேலை செய்துகொண்டே பழமுதிர் நிலையத்தை தொடங்கி நடத்தி வென்றிருக்கிறார்கள். பழம்,காய்கறிகளை ஒரே இடத்தில் விற்கும் கடைதான் இது. இதைப் பார்த்து, இதைப்போலவே இன்று நிறைய நகல்கள் வந்துவிட்டன. பழம்,காய்கறிகளுக்கான பில்களை கணினியில் அச்சிட்டு வழங்கியது தமிழ்நாட்டில் பழமுதிர் நிலையம்தான். இன்றும் நவீன காலத்திற்கேற்ப பல உத்திகளை செய்து வருகிறார்கள். இணைய போட்டிகளை வேறு சமாளிக்க வேண்டியிருக்கிறது. கடினமான சூழ்நிலைகளில்தான் வாய்ப்புக்கான வழி இருக்கும். கஷ்டத்தை நினைத்து வாய்ப்புகளை விட்டுவிடக்கூடாது என்று கூறியிருக்கிறார். விலையைக் குறைத்து வைத்து விற்க முடியாது என்று கூறும் நெஞ்சுரம் கொண்ட மனிதர் சின்னசாமி.
ரன்வீர், தீபிகா திருமணத்தின்போது, திருமணப் பரிசாக கிருஷ்ணா இனிப்பு கடையில் இருந்து மைசூர்பா அனைவருக்கும் சென்றிருக்கிறது. அதைச் சாப்பிட்டவர்கள் அதைப்பற்றி பேசி நிறுவனத்தை மட்டுமல்ல திருமணத்தையும் பேசுபொருளாக மாற்றினார்கள். அப்படித்தான் கிருஷ்ணனின் கதை தொடங்குகிறது. கேரளத்தை பூர்விகமாக கொண்டவரான கிருஷ்ணன் சிறுவயதில் அசட்டுத்தனமான ஆள்தான். ஆனால், இவரது அப்பா தொழிலில் கெட்டிக்கார ஆள், ஆனால் வியாபாரத்தில் திறமையானவர் அல்ல. இதனால், இவர்களது உறவினர் சொத்துக்களை ஏமாற்ற, தொடக்கத்தில் இருந்து மீண்டும் உழைத்து உயர்ந்து வெற்றி பெற்றார் கிருஷ்ணன். உலகம் முழுக்க கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்றால் என்னவென்று அனைவருக்குமே தெரியும். கடின உழைப்பும், கைமணமும்தான் கிருஷ்ணா ஸ்வீட்சை உயரே கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. கண்ணாடி வழியாக இனிப்புகளை பார்வையாளர்களுக்கு காட்டும் உத்தி, கிருஷ்ணன் கண்டுபிடித்ததுதான். இசை, இலக்கிய நிகழ்ச்சிகளை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது.
அரோமா என்பது பால் உற்பத்தி நிறுவனம். இன்று இந்த நிறுவனம் பால் உற்பத்தியோடு இனிப்பு பலகாரங்களை,தயாரித்து விற்கிறது. தனது பொருட்களுக்கான தனி பேக்கரியைக் கொண்டுள்ளது. அரோமா பொன்னுசாமி, அவரது தந்தையைப் போலவே கடுமையாக உழைத்தவர்தான்.ஆனால், தனது வழிமுறைகளை தொடர்ந்து முன்னேற்றியபடியே இருந்து வென்றார். இன்று அரோமா நிறுவனம், நெய்யைக் கூட தயாரித்து விற்று லாபம் பெற்று வருகிறது. சுகுணா புட்ஸ் நிறுவனம். தனியார் கறிகோழித்தொழிலில் பெரும்நிறுவனமாகும். சகோதரர்கள், கோழிகளை வளர்த்து விற்பனை, அதற்கான தீனி, கோழிகளைப் பற்றிய மேலாண்மை கல்வி, பயிற்சிகளை அளிக்கிறார்கள். இன்று, நீங்கள் எந்த கிராமத்திற்கு நகரத்திற்கு சென்றாலும் சுகுணா சிக்கன் என்ற விளம்பர பலகையைப் பார்க்க முடியும். அந்தளவுக்கு சகோதரர்கள், துறைசார்ந்து வளர்ந்திருக்கிறார்கள்.
ஶ்ரீஅன்னபூர்ணா, ஶ்ரீகௌரி சங்கர் உணவகங்கள், இதன் இயக்குநர் சீனிவாசன், மதவாத கட்சிக்கு ஆதரவானவர். இவர்தான், மதவாத கட்சியின் நிதி அமைச்சரைக் கேள்வி கேட்டு, பிறகு தனியாக மன்னிப்பு கோரியவர். பரிதாபமான காட்சி. தொழில்கதை சீனிவாசனைப் பற்றியதல்ல... இவரது தந்தை நிறுவனர், தாமோதரசாமி பற்றியது. தொழிலில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியவராக அவரையே கூறுகிறார் சீனிவாசன். பல்வேறு தின்பண்டங்கள், புதுமையான அணுகுமுறை என கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். தாமோதரசாமி எந்த இடத்திலும் வளைந்து நெளிந்து போனவரல்ல. நேர்மையானவர் என்பதாலேயே, நிறைய சவால்கள் வருகின்றன. அதையும் சமாளித்து வெல்வதற்கான வழியைத் தேடியிருக்கிறார். இதற்கு எடுத்துக்காட்டாக, கட்டிடத்தை வாடகைக்கு விட்ட உரிமையாளர், தன்னுடைய கடையில் பொருட்களை வாங்குமாறு கட்டாயப்படுத்திய சம்பவம். பணம் இல்லாதபோது உறவுகள் மட்டும் மதித்து விடுமா என்ன? அப்படியான அவமானமும் தாமோதரசாமியை ஊக்குவித்திருக்கிறது. இன்று சீனிவாசனின் வாரிசுகள் கடையைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
மில்கி மிஸ்ட் சதீஸ்குமார், ஈரோட்டைச் சேர்ந்தவர். ஏற்கெனவே இவரைப் பற்றி நிறைய எழுதிவிட்டார்கள். மற்ற தொழிலதிபர்கள் கூட பழைய ஆட்கள். ஆனால், சதீஸ் புதிய ஆள். அதேசமயம், இணையம் வளரத்தொடங்கிய காலகட்டம் என்பதால், இவரது நிறுவனம் பற்றிய நிறைய செய்திகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புண்டு. தன்னுடைய பரிசோதனை முயற்சிகளே வெற்றியைப் பெற்றுத்தந்தன என்று நம்புகிறார். அப்படி 300 லிட்டர் பாலில் பனீர் தயாரித்துப் பார்த்து தோல்வியுற்றாலும், பின்னாளில் அதுவே பனீருக்கான முக்கியமான பிராண்டாக மில்கி மிஸ்டை மாற்றுகிறது.
சக்தி மசாலாவின் பிசி துரைசாமியின் வாழ்க்கையும் நிறைய சோகங்களை வலியை உள்ளடக்கியது. இன்று, அந்த நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே முக்கிய மசாலா தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. அவர்களுடைய பொருட்களை மட்டுமே தனியாக வைத்து சூப்பர் மார்க்கெட் வைக்க முடியும். அந்தளவுக்கு ஏராளமான பொருட்களை தயாரிக்கிறார்கள். அவருடைய வாழ்க்கை கதையும் நிறைய போராட்டங்கள் வலியைக் கொண்டதுதான். மாமரத்துப் பாளையத்தில் சக்தி மசாலாவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்றுவதையே தொழிலின் முக்கியமான விஷயமாக துரைசாமி பார்க்கிறார். பெண்களுக்கு, மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது சக்தி மசாலா நிறுவனம். குறையொன்றுமில்லை விளம்பரத்தை முழு உலகமே பார்க்கிறது அல்லவா?
ஒட்டுமொத்தமாக நூல், தொழிலதிபர்களின் தொழில்வாழ்க்கை, கடைபிடித்த நெறிகள், கண்டுணர்ந்த பாடங்கள், வாடிக்கையாளர்களை நெருக்கமாக உணரச்செய்யும் உபசரிப்பு, பணிவான வார்த்தைகள் என நூலை சிறப்பாக செம்மை செய்திருக்கிறது தரு மீடியா குழு. ஆசிரியர் தசெ ஞானவெலின் எழுத்து, நூலைப் படிக்கும் பலருக்கும் அளவில்லாத ஊக்கம் தரும். நூலின் தாள்கள் அனைத்தும் ஆர்ட் பேப்பர். எனவே, விலை ரூ.400 என வைத்திருக்கிறார்கள். விலையை சற்று குறைத்து வைத்தால் நன்றாக இருக்கும். தொழில் நிறுவனங்களின் வலைத்தளம், தலைமை அலுவலக முகவரி ஆகியவற்றை அளித்திருந்தால் நன்றாக இருக்கும். நூலில் குறிப்பிட்ட தொழில்நிறுவனங்களைப் பற்றி படிக்கும்போது, உரிமையாளர், முன்னோடி கூறிய முக்கியமான வார்த்தைகளை எடுத்து மேற்கோள் குறியிட்டு அழகாக காட்டியிருக்கிறார்கள். படிக்க நன்றாக இருக்கிறது. இப்படி வரும் அனைத்து வாக்கியங்களை தொகுத்தாலே தொழில் தொடர்பான மாத இதழுக்கு பயன்படுத்தலாம்.
கொங்குப்பகுதியின் தொழிலதிபர்கள் பற்றிய முக்கியமான நூல் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
கோமாளிமேடைகுழு
புகைப்படம் - சினிமா விகடன்
கருத்துகள்
கருத்துரையிடுக