திராவிடர்கள் யார், திராவிடம் என்றால் என்ன என்பது பற்றி தெளிவாக விளக்கும் நூல்!
திராவிடம் - தமிழ்தேசியம் ஒரு விளக்கம்
கா.கருமலையப்பன்
பெரியார் திராவிடக்கழகம்
இந்த நூலில், கருமலையப்பன், தமிழ் தேசியவாதியான மணியரசனின் பார்ப்பன ஆதரவு அரசியலை கருத்துகளை சாடுகிறார்.இழிவான கருத்துகளால் அல்ல. முறையாக ஆதாரங்களை வைத்தே வாதிடுகிறார். இன்று ஒருவர் பொதுக்காரியங்களில் பொறுப்பான ஒருவரைப் பற்றி கேள்வி கேட்டுவிட்டால், தனிநபரின் அந்தரங்களை சொல்லி திட்டுவது, வசைபாடுவது வழக்கமாகிவிட்டது. இந்தசூழலில் அப்படியான இயல்பு இல்லாமல், முழுக்க ஆதாரங்களை வைத்தே எதிர்த்தரப்பை எதிர்கொள்வது எளிதல்ல.
பெரியார் கூறிய கருத்துகளின் படி, காலத்திற்கேற்ப மாறும் விஷயங்களை கருத்தில் கொண்டும் கருமலையப்பன் பல்வேறு வாதங்களை முன்வைக்கிறார். அடிப்படையில் பெரியார், இந்தியா, இந்து என்ற வகைமையை விரும்பவில்லை. எனவேதான் தனித்தமிழ்நாடு கோரிக்கை உருவானது. அந்த அடிப்படையில் திராவிடர்கள் என்ற கருத்தை உருவாக்கினார். திராவிடர்கள் என்பதும் தமிழர்கள் என்பதும் வேறு வேறல்ல.
தமிழர்கள் என்று சொல்லி திராவிடத்தை வெறுக்கும் மணியரசன், தமிழ்தேசியம் சார்ந்த பத்திரிகை ஒன்றை நடத்துகிறார். அந்த பத்திரிகையை நூலகத்தில் தமிழ்நாடு அரசு வாங்குகிறது. இப்படியான அணுகுமுறையை மணியரசன் கொண்டிருப்பாரா என்று தெரியவில்லை. தமிழர்கள் யார் என்று மக்களை அவர் சுத்திகரிக்கிறார் என கருமலையப்பன் குற்றம் சாட்டுகிறார். தென்னிந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் திராவிடர்கள்தான். இதில், பார்ப்பனர்கள் மட்டுமே வேறுபட்டவர்கள். அவர்கள் திராவிடர்கள் அல்லாதவர்கள் என்று பெரியார் கூறினார். ஆனால், இதை தமிழ்தேசியவாதிகள் ஏற்பதில்லை. அதற்கு அவர்களுக்கு பல்வேறு தன்னல காரணங்கள் உள்ளன.
இந்த நூலில், கொளத்தூர் மணி செய்துள்ள பல்வேறு போராட்டங்கள், சிறை சென்ற அனுபவங்கள் பற்றியும் சுருக்கமான தகவல்களை கூறப்பட்டுள்ளது. திராவிடக் கழகத்தின் போராட்டங்கள் திராவிடர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன பலன்களைக் கொடுத்தன. அப்போது தமிழ் தேசியவாதிகள் என்ன செய்தனர் என்றும் கருமலையப்பன் விளக்கமாக எழுதியுள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, மா.பொ.சி, பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இந்தியை ஆதரித்தார் என்று கூறுகிறார்.
திராவிடர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு பார்ப்பனர்கள் தங்களை உள்ளே இணைத்துக்கொண்டு தங்களுடைய கருத்தை திணிக்கும் ஆபத்து இருப்பதை கருமலையப்பன் உறுதியாக நின்று வாதாடுகிறார். தமிழர்கள் என்று சொன்னால், அதில் பார்ப்பனர்கள் இணைந்துகொண்டுவிடுகிறார்கள். ஆனால், திராவிடர்கள் என்பதில் அவர்கள் இணையமுடியாது. திராவிடர்கள் என்பதன் பொருளே, அவர்கள் ஆரியரல்லர் என்பதுதான். திராவிடர் அல்லாதார் என்று பார்ப்பனர்கள் குறிப்பிட வலியுறுத்துகிறார்.
பெரியார் ஆய்வாளர் ஆனைமுத்து அவர்களின் கருத்து பற்றியும் கூறப்படுகிறது. கருமலையப்பன் அதை, அவர் பெரியாரிய ஆய்வாளர். ஆனால், அவர் கூறிய பெரியார் பற்றிய கருத்து, அதுவொன்றும் முடிவான கருத்தல்ல என்று எளிமையாக கூறிவிட்டார். இது ஏன் முக்கியம் என்றால், அனைவரும் பல்வேறு கருத்துகளை கூறி, அதை விவாதித்து பிறகு பொதுக்கருத்தாக நிறை குறைகளை அலசி ஏற்பதே ஜனநாயகம். அந்த அமைப்பு முறை சிதைந்து வருகிறது. ஆனால், அதன் வரைமுறை இப்படித்தான். நாம் அதை கடைபிடிக்க முடிகிறதா இல்லையா என்பதல்ல.
திராவிடர்கள், தமிழர்கள் என்று எப்போதுமே வாதம் எழுவதுண்டு. அதை எழுப்பி தமிழ்நாட்டை பிரிக்க சில தீயசக்திகள் முயன்று கொண்டே இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் யார் திராவிடர்கள், யார் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு சுயநலமாக பயன்களைப் பெறுகிறார்கள் என்பதை இந்நூலை வாசித்து அறியலாம்.
கோமாளிமேடை
கருத்துகள்
கருத்துரையிடுக