பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்!

 



பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்!


ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தால், அதற்கு முன்னே ஆட்சியில் இருந்தவர்கள் செய்த கட்டுமானப்பணிகளை சிதைப்பது, பெயரை மாற்றுவது, செயல்பாட்டில் உள்ளவற்றை அழிப்பது என நிறைய குதர்க்கங்களை காழ்ப்புணர்ச்சியால் செய்வார்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற கட்டிடம் அப்படித்தான் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. அதன் பின்னே உள்ளது தனிமனிதர் ஒருவரின் அற்பமான ஆணவமும், காழ்ப்புணர்ச்சியும் மட்டுமே.  


அந்த வகையில் அமெரிக்காவில் அரசு பயன்படுத்தும் எழுத்துரு மாற்றப்படுவதாக அரசு செயலர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் பைடன் ஆட்சியில், 2023ஆம் ஆண்டு 'சன்ஸ் ஷெரிஃப் காலிப்ரி' என்ற எழுத்துரு அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த எழுத்துரு, பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கும் உதவுவதாக இருந்தது. இப்போது, தொழிலதிபர் ட்ரம்ப் அதிபராகி, குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் வெள்ளையர்களுக்கு ஆதரவான இனவெறிப்போக்கு அதிகரித்துள்ளது. கருப்பினத்தவர்களின் வரலாற்றை மாற்றி பெருமை, தேசப்பற்று, ஒற்றுமை என்ற வகையில் அனைத்தும் மாற்றப்பட்டு வருகிறது. இதில், அருங்காட்சியகங்கள், பாடநூல்கள், நினைவுச்சின்னங்கள் என எதுவும் தப்பவில்லை. 


2023ஆம் ஆண்டு, பைடன் ஆட்சியில் சன்ஸ் ஷெரிப் காலிப்ரி எழுத்துருவை நடைமுறைக்கு கொண்டு வந்தவர், செயலர் ஆன்டனி பிலிங்கென்.ஒரு எழுத்துருவை அரசு அங்கீகரித்து கொண்டு வருகிறது என்றால், அதை பல்வேறு வகையில் சோதித்துப் பார்த்து பலரும் படிக்க வசதியாக இருக்குமா என சோதிக்க வேண்டும். அப்போதுதான் அதை பயன்படுத்துவதில் பயன் கிடைக்கும். அரசின் ஆவணங்கள் வலைத்தளங்கள் என பலவற்றிலும் அதிகாரப்பூர்வ எழுத்துரு பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக தமிழகத்தில் வழங்கப்பட்ட எஸ்ஐஆர் சீர்திருத்த படிவங்கள் தமிழ்மொழியில் யுனிக்கோட் எழுத்துருவான மருதம் என்பதில் அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த எழுத்துருவை நீங்கள் எளிதாக இணையத்தில் தரவிறக்கி பயன்படுத்தலாம். வாசிக்க எளிமையாக இனங்காண எளிதான எழுத்துரு. 


அமெரிக்க அரசு, சன்ஸ் ஷெரிப் காலிப்ரி எழுத்துருவை நீக்கிவிட்டு திரும்பவும் டைம்ஸ் நியூ ரோமன் எனும் எழுத்துருவுக்கு மாறுகிறது. இதில், கட்சி சார்ந்த அரசியல் இல்லாமல் இல்லை. எளிதாக அணுகுதல், பாரம்பரியம், அடையாளம் என நிறைய அம்சங்களைக் கருத்தில் கொண்டுதான் எழுத்துருக்களை அரசு தேர்ந்தெடுக்கிறது. டைம்ஸ் நியூ ரோமன் எழுத்துருக்கள் அலங்கார தன்மை கொண்டவை. இவற்றை கணினி திரையில் பார்த்து புரிந்துகொள்வது அறிவுத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கு கடினமாக இருக்கும். பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்களையும் இதில் இணைத்துக்கொள்ளலாம். சர்வாதிகார அரசுகள், மக்களைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது என்பதால், இதெல்லாம் ஒரு காரணமாக என நிராகரித்து விடுவார்கள். 


இப்போது துருக்கி விவகாரம் ஒன்றைப் பார்ப்போம். 1928ஆம் ஆண்டு, துருக்கி அதிபரான முஸ்தபா கெமால் அடாதுர்க், அதுவரை நடைமுறையில் இருந்த அரபி எழுத்துமுறையை முற்றாக நீக்கிவிட்டு லத்தீன் எழுத்துரு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். அவருடைய நோக்கம், காலத்திற்கு ஏற்ப மாறி மேற்கு நாடுகளோடு இணைந்து பயணிப்பதுதான். அதில் குறையேதும் கிடையாது. பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்து கல்வி சீர்திருத்தம் செய்யப்பட்டது. இதன் வழியாக நாட்டில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எப்போதும் போல மத அடிப்படைவாதிகளுக்கு அரபி முறையை நிராகரித்தது ஏற்புடையதாக இல்லை. அடிப்படையில், எழுத்துருக்கள் என்பதே கலாசார அடிப்படையைக் கொண்டவை. 


சோவியத் யூனியனிலும் கூட இதுபோல சிறுபான்மையினரின் மொழி, எழுத்துரு மாற்றப்பட்டது. துருக்கிய மொழிகள் லத்தீன் எழுத்துரு மொழியில் மாற்றப்பட்டு பிறகு ரஷ்யமொழிக்கு ஒத்திசையும்படி சிரிலிக் எழுத்துகளுக்கு மாறின. மொழி திணிப்பு என்பது எப்படி ஒருவரின் அறிவுச்செல்வத்தை அழிக்கிறதோ, அதேதான் ஒருவரின் கலாசாரத்திற்கு அந்நியமான எழுத்துரு முறைகளை அரசு கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்துவதும் கூட. இந்த வகையில் அவரின் அடையாளம், கல்வி, கலாசாரம் என அனைத்துமே பாதிக்கப்படுகிறது. 


இருபதாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஃபிராக்டுர்- ஆன்டிகுவா என இரு எழுத்துரு முறைகளுக்காக பெரும் விவாதம் நடைபெற்றது. அந்த நாட்டிலுள்ள தேசியவாதிகள் ஃபிராக்டுர் எழுத்துருவை ஆதரித்தனர். நவீனத்துவர்கள் உலகோடு தொடர்புகொண்ட லத்தீன் எழுத்துருவான ஆன்டிகுவாவை ஆதரித்தனர்.  

 

1941ஆம் ஆண்டு நாஜிக் கட்சியினர் ஃபிராக்டுரை எழுத்துருக்களை யூதர்களின் எழுத்துக்கள் என்று கூறி, அரசு மூலம் தடை செய்தனர். எழுத்துருக்களை ஒருவர் எளிமையாக கருத முடியாது. அது அடையாளமான ஒரு கருத்தியல் போர். 1996ஆம் ஆண்டு, ஜெர்மனிய எழுத்துரு முறை சீர்திருத்தப்பட்டது. இதில் அதன் எழுத்துகள், குறியீடுகள் மாற்றம் பெற்றன.


தென்கொரியாவில் 1945-55 வரையிலான காலகட்டத்தில் மக்களின் வாசிப்பை பரவலாக்க பிரதமர் சிங்க்மன் ரீ, எளிமையான ஹாங்குல் எனும் எழுத்துரு முறையை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். ஆனால், மக்கள் அதை ஏற்கவில்லை. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தென்கொரிய அரசு பழைய எழுத்துரு முறைக்கே திரும்பியது. இந்தியாவில் உள்ள கேரள மாநிலம், 1971ஆம் ஆண்டு மலையாள எழுத்துரு முறையில் சீர்திருத்தம் செய்தது. இதன்மூலம் மலையாள மொழி எழுத்துக்களை அச்சிடலாம், கணினியில் தட்டச்சு செய்யலாம். முன்பிருந்ததை விட சற்றே எளிமை. 


மொழி திணிப்பு, எழுத்துரு மாற்றம் என இரண்டுமே நடைமுறைப்படுத்தப்படுவதற்கு மக்களுடைய ஆதரவு தேவை. அப்படி செய்யாதபோது அப்படியான நடவடிக்கைகள் எளிதாக தோல்வியடையும். ஒரு அரசு, எழுத்துருக்களை உடனே மாற்றாமல் சாதக, பாதகங்களை ஆராய்ந்து பிறகு பொதுக்கருத்தை எட்டியபிறகு அதை அரசு ஆவணங்களுக்கு மாற்றலாம். அல்லாதபோது, மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுவார்கள். மக்கள் சமூகம் என்பது பன்மைத்தன்மை கொண்டது. அது ஒற்றை சாதி, மதம், நிறத்தாலானது அல்ல. குறிப்பிட்ட சமூகம் சார்ந்து அரசு செயல்பட்டால், பரந்த நாடு பல துண்டுகளாக உடைந்து நொறுங்கும். 





 


நன்றி

மூலக்கட்டுரை

தி ஸ்கிரிப்ட் வார் -ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் - வைசாலி தர் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!