வாரம் முழுக்க காவல்துறை அதிகாரி, வார இறுதியில் கொலையாளி! விஜிலாண்டே

 



விஜிலாண்டே
மாங்கா காமிக்ஸ் 
கொரியா

இந்தக்கதையில் நாயகன், ரௌடி ஒருவனால் பாதிக்கப்பட்டு தாயை இழந்தவன்.அதாவது, அம்மாவை ரௌடி அடித்து உதைத்து படுகொலை செய்துவிடுகிறான். நீதிமன்றம் குற்றவாளிக்கு மெலிதான தண்டனை கொடுத்துவிட்டு விட்டுவிடுகிறது. இது நாயகனை பாதிக்கிறது. சிறுவனாக இருப்பவன், பெரியவனாகி குற்றவாளிகளை அடியோடு அழிப்பதாக உறுதி எடுக்கிறான். அதற்கு காவல்துறையே சரியான வழி என அங்கு வேலைக்கு சேர்கிறான். அவனது வயதில் உள்ளவர்களில் கராத்தே, ஜூடோ, ஜிஜூட்சு ஆகியவற்றை சிறப்பாக கற்றவர்கள் யாருமில்லை என்று பெயரும் புகழும் எடுக்கிறான். உங்களுக்கு இப்போதே புரிந்திருக்கும். யார் விஜிலாண்டே என்று. நாயகன்தான் குற்றவாளிகளை ஹூடி அணிந்துகொண்டு சென்று கை முஷ்டிகளால் தாடையை பெயர்த்து குத்து குத்தென குத்தியே கொல்கிறான். வேறு எந்த ஆயுதங்களும் கிடையாது. ஒருவகையில் அப்படி கொல்வது நாயகனுக்கு ஆத்ம திருப்தியை தருகிறது. 

கொரியாவில் நீதித்துறை கறைபடிந்த ஊழல் புரையோடியது. இதன் காரணமாக பள்ளியில் கேலி சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அடித்து உதைத்தல், குடும்ப வன்முறை என எவற்றுக்கும் நீதித்துறை கடுமையான தண்டனை வழங்குவதில்லை. குறைவான தண்டனைதான். திரும்ப திரும்ப குற்றங்களை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெரிய குற்றம் செய்து குறைந்த தண்டனை பெற்றவர்கள் நாயகன் குறிவைத்து கொல்கிறான். இது மெல்ல ஊடகங்களில் பரபரப்பான செய்தியாகிறது. இதை பெண் பத்திரிகையாளர் கவனித்து, டிவியில் இதுதொடர்பாக தொடர் ஒன்றை உருவாக்குகிறார்கள். அது சுயநலமான லாபநோக்கு கொண்டது. தான் கூறுபவர்களை கொலை செய்ய வைத்து நிகழ்ச்சியை வெற்றி பெற செய்ய பத்திரிகையாளர் முயல்கிறார். 

நாயகன் அவளது உத்தியை விரைவிலேயே கண்டுபிடித்துவிடுகிறான். அதை முறியடிக்கிறான். ஆனால், பத்திரிகையாளர் அவ்வளவு விரைவில் நம்பிக்கை இழக்கவில்லை. ஒருவகையில் அவனை வைத்தே நீதித்துறை சிக்கல்களை வெளிப்படையாக பேச முயல்கிறாள். 

இந்த நேரத்தில் பள்ளியில் கேலி சித்திரவதை செய்த பணக்கார குடும்ப வாரிசுகளில் சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அதை செய்வது யார் என காவல்துறை தேடுகிறது. அதுவும் ஏறத்தாழ விஜிலாண்டே முறையில் உள்ளது. நாயகன் கொலையில் கட்டுப்பாடு உண்டு. அவன் காவல்துறையில் வேலை செய்துவிட்டு, வாரம் ஒருவரைப் பற்றி ஆராய்ந்து பிறகே கொல்ல முயல்வான். வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே கொலை தினங்கள். ஆனால், புதிய கொலையாளி, குற்றவாளி என தெரிந்தாலே கடுமையாக அடித்து உதைத்து கொல்கிறான். 

நாயகனே, தான் செய்த கொலைகளைப் பற்றி விசாரிக்கும் குழுவில் உறுப்பினராக இருக்கிறான். இதுமாதிரியான காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். குரோதம் 1, 2 இப்படியான கதையைக் கொண்டதே. அதில் நாயகன் பிரேம் தொழிலதிபராக இருப்பார். இரவில் கொலையாளிகளை திட்டம் போட்டு கொல்வார். இந்த காமிக்ஸில் நாயகன் செய்த கொலைகளை விசாரிக்க வரும் விசாரணை அதிகாரி, நாயகனுக்கு ஆளுமை பிறழ்வு உள்ளதாக நினைப்பார். ஆனால், அந்த சூழலில் அப்படியான ஊகம் மோசமானது அல்ல. 

ஆனால், அங்குதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. நாயகனுக்கு ஆளுமை பிறழ்வு, பல் ஆளுமை சிக்கல் எல்லாம் கிடையாது. அவனுக்கு தாய் படுகொலையானது மறக்க முடியாத ரணமாக இருக்கும். அதேசமயம் அவன் தன்னுடைய சோகத்திலேயே மூழ்கிப் போய்விடுகிறவன் கிடையாது. அதனால்தான், குற்றவாளிகளை தேடிப் போய் கொல்கிறான். இதையே காப்பிகேட் செய்து இன்னொருவன் இயங்குகிறான். அவன், நாயகனுக்கு சந்திக்க வாய்ப்பையும் தருகிறான். ஆனால், நாயகன் அதை ஏற்பதில்லை. நாயகனுக்கு கட்டற்ற கொலைகள் என்பதில் விருப்பமில்லை. அவனுக்கென ஒரு லட்சியம் உண்டு. அதை நோக்கி செல்கிறான். 

குறைந்த தண்டனை விதிக்கப்பட்ட ஆபத்தான குற்றவாளிகளை கொல்வது மட்டுமே அவனது லட்சியம். அதை அவன் செய்துகொண்டே இருக்கிறான். இடையில்தான் பத்திரிகையாளர், நகல் கொலையாளி எல்லாம் வருகிறார்கள். மாங்கா காமிக்ஸில் கதையே வன்முறையை அடிப்படையாக கொண்டது. எனவே, நிறைய இடங்கள் கனவிலும் கூட வந்து பயமுறுத்தும் வகையில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது. இதில் நாயகனது உளவியல் தடுமாற்றங்கள் பற்றி விளக்கியிருந்தது சிறப்பு. அப்பகுதிகள் நன்றாக உள்ளன. 

கதை தனிப்பட்ட ஒருவரின் உறவினர் இறந்துபோவது என்று இல்லாமல் சமூக பிரச்னையாக உள்ளது. அதை நாயகனோ, வேறு யாருமோ கூட பேசுவதில்லை. அதை வாசகர்களே மனதால் உணரட்டும் என்று கூட கதாசிரியர் நினைத்திருக்கலாம். அதிலும் சண்டைக் காட்சிகள்தான் கதையில் உயிர்ப்பான இடம். போதைப்பொருள் விற்பவனை நாயகன் சங்கிலி வீசி தாக்கிக் கொல்வது, கொலை முயற்சியில் அவன் நிறைய விஷயங்களைக் கற்கிறான். அங்கு அவனுக்கு காதலி ஒருவள் கிடைக்கிறாள் என கதை நிறைய மாறுகிறது. 

அற உணர்வுகள் இல்லாத ஊழலால் உருக்குலைந்த கொரிய சமூகத்தை காமிக்ஸ் நம் கண் முன்னே காட்டுகிறது.அதிலும் பெரும்பாலும் பாதிக்கப்படும் நபர்கள் பெண்களாக இருக்கிறார்கள். ஏறத்தாழ நீதியை வழங்குவது என ஒருவர் முடிவை எடுப்பது எதற்காக என யோசிக்க வைத்திருக்கிறது இக்கதை. கதையின் ஊடே உளவியல் விஷயங்களையும் நிதானமாக சொல்லிக்கொண்டே வருகிறார்கள். குறிப்பாக செய்தியாளரை நாயகன் சந்திக்க நினைக்கிறான். ஆனால், அதை ஒருகட்டத்தில் வேண்டாம் என விட்டுவிடுகிறான். அந்த மனப்போராட்டத்தை நன்றாக காட்டியுள்ளனர். 

கோமாளிமேடை குழு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!