ஒருவர் சாப்பிட்ட மாட்டிறைச்சியைக் கண்டுபிடித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பும் ஆப்!
அண்மையில், ஒன்றிய அரசு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள கண்காணிப்பு ஆப்களைப் போல ஒன்றை வடிவமைத்தது. தொடக்கத்தில் இந்த ஆப், சிம்களை தவறாக பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பது. அதை முடக்குவது என்றே வலைத்தளமாக இயங்கியது. பிறகு, திடீரென போன்களுக்கு ஆப்பை தரவிறக்கி பதியுங்கள் என மிரட்டும் தொனியில் குறுஞ்செய்திகள் வரத் தொடங்கின.
இறுதியாக, தகவல்தொடர்புதுறை அமைச்சர் புதிதாக தயாரிக்கும் போன்களிலும், பழைய போன்களிலும் கண்காணிப்பு ஆப் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டார். ஆப்பிள் நிறுவனம், முடியாது என்ற ஒற்றைப் பதிலை சொல்லிவிட்டது. மற்றவர்கள் அமைதி காத்தனர். அமலாக்கத்துறை பயமாக இருக்கலாம். இணையத்தில், சர்வாதிகார நாடாக மாறிவிட்டதா இந்தியா என கேள்வி எழும்ப அமைச்சர் எப்போதும் போல ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தைப் பின்பற்றி மன்னிப்பு கோரி, உத்தரவை திரும்ப பெற்றுள்ளார். காலில் விழுவது, மன்னிப்பு கோருவது ஆர்எஸ்எஸ் ஆட்களுக்கு புதிதல்ல. ஆனால், அவர்களிடம் பொறுக்கித் தின்பவர்களுக்கு இன்னும் அந்த சடங்குகள் புரிபடவில்லை.
சரி, இப்போது அந்த ஆப்பை ஒரு மனிதராக நினைத்து பேட்டி எடுப்போம்.
உங்களை நிறுவுவது தொடர்பாக, அரசிடம் இணைந்து வணிகம் செய்வது கடினம் என தொழிலதிபர்கள் கூறியிருக்கிறார்களே?
இந்தியாவில் உள்ள வளரும், எதிர்கால தொழிலதிபர்களுக்கு ஒரே ஒரு பாதை உள்ளது. அதுதான் ப்ரீ இன்ஸ்டாலேஷன். இதை அவர்கள் பின்பற்றினால் போதுமானது.
எப்படி?
அனைத்து போன்களிலும் என்னை இன்ஸ்டால் செய்தால் அரசுக்கு வருமான வாய்ப்பு கிடைக்கும். போன்களில் இப்படி செய்வதற்கு முன்னால், அரசு அதிகாரிகளின் கணினியில் இயங்கி வந்தேன். கட்டாயமாக இன்ஸ்டால் செய்யப்பட்டால், பல கோடி மக்களின் இணைய பாதுகாப்பை என்னால் உறுதி செய்ய முடியும்.
கட்டாய இன்ஸ்டால் உத்தரவு திரும்ப பெறப்பட்டதை எதிர்பார்க்கவில்லையா?
அரசு, மக்கள் சொல்வதற்கு மதிப்பு கொடுப்பார்கள் என்று எனக்கு எப்படி தெரியும்? நீங்கள் இப்போது அந்தரங்கம் என்று சொல்லி கட்டாய ஆப் இன்ஸ்டாலை தடுத்தால், அடுத்து மக்கள் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக, சகாயம் செய்யக்கூடாது என்று கூறுவார்கள். சுத்தமான காற்று, குறைந்த விலையில் சுகாதார வசதிகள், குறைந்த வாடகை என நிறைய கோரிக்கைகளை முன்வைப்பார்கள். இத்தகைய கோரிக்கைகளுக்கு முடிவே கிடையாது. அரசு, இப்படி செல்லும் பாதை ஆபத்தானது.
இப்படியான அரசின் முடிவு வணிகர்களுக்கு நல்லதுதானே?
எளிமையாக வணிகம் செய்வது பற்றிய செயலுக்கு மக்களின் கருத்துகளை அரசு கேட்க வேண்டியதே இல்லை. நிலம், ஊழியர்கள், சூழல் அல்லது அந்தரங்கம் ஆகியவற்றைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், தேவை என்பதைப் பற்றி ஆளும் அரசு கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு தேவையான பணத்தை, யார் உங்கள் வாயில் வைக்கிறார்கள் என்பதே முக்கியம்.
ஆனால், இந்தியா என்பதே ஜனநாயக நாடுதானே?
உங்களுக்கு வயதென்ன பனிரெண்டா ஆகிறது? இந்தியாவில் ஜனநாயகமெல்லாம் இல்லை. எந்த ஒரு அரசுடைய முக்கியக் கடமை மக்களைக் கண்காணிப்பதுதான். அவர்களது மூளையை தினசரி வாட்ஸ்ஆப் எனும் சோப்பு போட்டு சலவை செய்ய வேண்டும். மக்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். மக்களது பேச்சை கேட்கத் தொடங்கினால், தேர்தல் பத்திரத்தில் நிதி அளித்தவர்களுக்கு என்ன பதில் கூறுவது? என்னைப் பார், நான் இங்கிலாந்து நாட்டு குடிமகன், எனது மனைவி ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். எனது மகள் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர். எனக்கு, இந்தியாவின் நடப்பிலும் எதிர்காலத்திலும் கூட எந்த பங்கும் கிடையாது.
அப்படி இருந்தாலும் கூட வேலைக்காக நான் தினசரி 22 மணிநேரம் உழைப்பதோடு, அந்த உழைப்பை வாரத்திற்கு ஏழு நாட்களும் தொடர்கிறேன்;அதுவும் காற்று கடுமையாக மாசுபட்டுள்ள நாட்டின் தலைநகரில்...என்னுடைய வங்கிக் கணக்கு சுவிஸ் நாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. என்னுடைய இதயம் மட்டும் இந்தியனாக உள்ளது. அதனால்தான், அந்தரங்கம் என்று கூறி அரசு உத்தரவு திரும்ப பெறப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தேன்.ஆனால், இந்த விவகாரம் இத்தோடு முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் கூறியதைக் கேட்டுத்தானே ஆகவேண்டும்? அப்படி அல்லாதபோது, அடுத்தமுறை அந்த அரசை எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?
என்னை உருவாக்கியதே மக்கள் பேசுவதை வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் முழுவதுமாக கண்காணிக்கவே.தினசரி மக்கள் பேசும் அழைப்புகள் வாட்ஸ்அப், டெலிகிராம் என ஆப்களையும் கண்காணிக்க வேண்டியுள்ளது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், யாரை சந்திக்கிறீர்கள், எவருடைய புகைப்படங்களை எடுக்கிறீர்கள், உங்கள் போனில் எதுபோன்ற தேசதுரோக பொருட்கள் இருக்கின்றன என கண்டறிவதே எனது பணி. இதற்கு, மக்கள் என்னை மகிழ்ச்சியான மனநிலையில் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், வரலாற்றில் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழலே இல்லாத ஆட்சியைப் பார்த்துக்கூட இந்தியர்கள், கட்டாய இன்ஸ்டால் உத்தரவை ஏற்க மறுத்துவிட்டனர். அது ஒரு சிறிய விஷயம்தானே?
சரிதான். நடந்த விவகாரத்தில் இந்தியர்கள் சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், இதற்கு பயன்படுத்துபவர்களின் அனுமதி தேவையில்லையா?
சஞ்சார் சாதி என்றால் தகவல் தொடர்பு கூட்டாளி என்று பொருள். உடலுறவு கூட்டாளி என்பதல்ல. நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் அப்பாவியான பெண் என்பது போலவும், ஆப்பை, குத்துச்சண்டை சங்கத்தின் நிர்வாகியாக உள்ள அரசியல்வாதி போலவும் ஏன் கருதுகிறீர்கள்?
உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?
போனில் சஞ்சார் சாதியோடு இணைந்து வேலை செய்யும் ஆப்களை உருவாக்கி வருகிறோம். சஞ்சார் ஸ்வாதி என்ற ஆப், ஒரு பயனரின் போனை முற்றாக சுத்திகரிக்கும். அவர் எதை தரவிறக்கக்கூடாதோ அதைக் கண்காணித்து தடுக்கும். அடுத்து, சஞ்சார் ஆசிக், இளைஞர்கள் தவறான நபரைக் காதலித்தால் கண்டறிந்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கும். எனக்கு சஞ்சார் பாட்டி என்ற ஆப்தான் பிடித்திருக்கிறது.
அதில், என்ன சிறப்பு உள்ளது?
இதில், நீங்கள் ஒருவரின் புகைப்படத்தை பதிவேற்றினால், 24 மணிநேரத்திற்கு முன்பாக அவர் என்ன உணவுகளைச் சாப்பிட்டார் என கண்டுபிடித்து கூறிவிடும். அந்த உணவில் மாட்டிறைச்சி இருந்தால், அதுபற்றிய எச்சரிக்கைத் தகவல் உடனே அரசு அதிகாரிகளுக்கு சென்றுவிடும். இத்தகைய ஆப் போல, உலகிலேயே வேறொன்று கிடையாது.அரசை பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். எங்களால் செய்ய முடியாததே கிடையாது.
நன்றி
வெயிட்டிங் ஃபார் சஞ்சார் ஸ்வாதி - எழுத்தாளர் ஜி சம்பத், தி இந்து - ஆங்கிலம்


கருத்துகள்
கருத்துரையிடுக