புதைப்படிவ பொருட்களை அகழ்ந்து எடுத்தும் அங்கீகாரம் கிடைக்காத பெண்மணி!

 





















மேரி அன்னிங்






அங்கீகரிக்கப்படாத புதைப்படிம சேகரிப்பாளர்!




மேரி அன்னிங், இங்கிலாந்தைச் சேர்ந்த புதைப்படிம சேகரிப்பாளர். விற்பனைக்காக, கடல் சார்ந்த ஆயிரக்கணக்கான அரிய உயிரினங்களின் புதைப்படிமங்களைக் கண்டறிந்தார். முறையான கல்வி இல்லாதபோதும், சுய ஆர்வத்தால் புதைப்படிம அறிவை வளர்த்துக்கொண்டார். மேரியின் பல்வேறு புதைப்படிம கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம், அவர் வாழும் காலத்தில் கிடைக்கவில்லை. 

1799 

இங்கிலாந்தின் கடற்கரையோர நகரமான லைம் ரெஜிஸ்(Lyme Regis) பகுதியில் பிறந்தார். தந்தை ரிச்சர்ட் ஆன்னிங்,தச்சு வேலைகளை செய்து வந்தார். மனைவி, மேரி மூர். பிறந்த 10 பிள்ளைகளில் மேரியும், ஜோசப் மட்டுமே நோய்களைத் தாங்கி வளர்ந்தனர். 

1811

மேரியின் தம்பி ஜோசப், புதைப் படிமங்களை சேகரிக்கும்போது இக்தியோசரஸ் விலங்கின் (Ichthyosaurus) மண்டையோட்டைக் கண்டுபிடித்தான். சில மாதங்களுக்குப் பிறகு மேரி அதன் மீதங்களை கண்டுபிடித்தார். தந்தை 1810ஆம் ஆண்டு இறந்துவிட, குடும்பத்திற்காக மேரி புதைப்படிம வணிகத்தில் இறங்கினார். 

1821

6.1 மீட்டர் நீளமுள்ள  இக்தியோசொரஸ் பிளாட்டிடன் (Ichthyosaurus platydon) என்ற கடல் உயிரின புதைப்படிமத்தை கண்டுபிடித்தார். தற்போது இதற்கு,  டெம்னோடோன்டோசொரஸ் பிளாட்டிடன் (Temnodontosaurus platyodon) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 1980இல்தான் மேரி, ஜோசப் ஆகியோர் இதைக் கண்டுபிடித்தனர் என அறிவியல் உலகம் ஏற்றது.

1823

டிசம்பர் 10 அன்று, ப்ளேசியோசாரஸ் (Plesiosaurus) புதைப்படிமத்தின் முழுவடிவத்தைக்  கண்டுபிடித்தார். இதுபற்றி புவியியல் சங்கத்தில் வெளியான ஆய்வறிக்கையில் கூட மேரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. புதைப்படிமங்களைக் கண்டுபிடித்து விற்பதில் மேரிக்கு மெல்ல புகழ் கிடைக்கத் தொடங்கியது. 

1826

மேரி, புதைப்படிமங்களை சேகரித்து விற்றதொகையில் வீடு ஒன்றை விலைக்கு வாங்கினார். இதன் முன்புறத்தில் ஆன்னிங் ஃபாசில் டிபோட்(Anning fossil depot.) என்ற கடையைத் தொடங்கினார். இக்கடை பிரபலமாகத் தொடங்க, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலிருந்து புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மேரியின் கடைக்கு வரத் தொடங்கினர். 

1828

பெலிம்னைட் உயிரினத்தின் (Belemnite) புதைப்படிமத்தை கண்டறிந்தார். இங்கிலாந்தில் இதுவரை யாரும் கண்டறியாத டெரோசரை (Pterosaur) மேரி அடையாளம் கண்டார். அன்று ஜெர்மனிக்கு வெளியே அடையாளம் காணப்பட்ட விலங்கின புதைப்படிமம் இதுவே. டெரோசரின் பேரினம், டைமார்போடன் (Dimorphodon) 

1829

வாயில் கொக்கி, பக்கவாட்டில் துடுப்பு, இறக்கைகள்  கொண்ட புதைப்படிமம் ஒன்றைக் கண்டறிந்தார். இதனை மீன் என மேரி கருதினார்.  பின்னாளில் அறிவியலாளர்கள் மீன் என உறுதிப்படுத்தி சிமாரா (Chimaera) என அழைத்தனர். 

1830

மேரிக்கு பொருளாதார ரீதியாக உதவ, அவரது நண்பரும் புவியியலாளருமான ஹென்றி டி லா பெச்செ முடிவுசெய்தார். இதற்காக வரைந்த ஓவியத்தின் பெயர், துரியா ஆன்டிகுயர் - எ மோர் ஆன்சியன்ட் டோர்செட் ('Duria Antiquior - A More Ancient Dorset'). இந்த ஓவிய வடிவத்திற்கு பேலியோ ஆர்ட் (Palaeo art) என்று பெயர்.

1838

மேரிக்கு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை வழங்க லண்டன் புவியியல் சங்கம் மற்றும் பிரிட்டிஷ்  அறிவியல் மேம்பாட்டுச்சங்கமும் இணைந்து தீர்மானித்து வழங்கத் தொடங்கின. 

1840

மேரியின் பிளேசியோசாரஸ்(Plesiosaurus) படிம கண்டுபிடிப்பால் ஊக்கம் பெற்று புவியியலாளர்  தாமஸ் ஹாக்கின்ஸ்  எழுதிய நூலின் பெயர், கிரேட் சீ டிராகன்ஸ் (The Great sea Dragons)

1841

ஸ்விட்சர்லாந்து நாட்டு படிம ஆராய்ச்சியாளர் லூயிஸ் அகாசிஸ்(Louis Agassiz) இரண்டு மீன் இனங்களுக்கு மேரி ஆன்னிங்கின் பெயரை சூட்டினார். 1841 ஆம் ஆண்டில், அக்ரோடஸ் அன்னிங்கியே  (Acrodus anningiae), 1844 ஆம் ஆண்டில் பெலனோஸ்டோமஸ் அன்னிங்கியே (Belenostomus anningiae) என பெயரிட்டார். 

1847

மார்ச் 9ஆம் தேதி, 47  வயதில் மார்பக புற்றுநோய் பாதிப்பால் மேரி மறைந்தார். அப்போது புவியியல் சங்கம் (Geological Society of London), தனது காலாண்டிதழில் மேரி ஆன்னிங் பற்றிய இரங்கல் செய்தியை முதன்முறையாக வெளியிட்டது.  

வாய்மொழி

”இந்த உலகம் என்னை கருணையின்றி பயன்படுத்திக்கொள்கிறது. இதனால் நான் அனைவரையும் சந்தேகமாக பார்த்து வருகிறேன்.”  

”எனது விசுவாசமான நாய் இறந்துபோனதற்காக சோகமாக உள்ளேன் என்று கூறுவதைப் பார்த்து நீங்கள் சிரிக்கலாம். மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் நாய் கீழே விழுந்து இறப்பதைப் பார்த்தேன். எனக்கும் கூட அதே விதி உருவாக வாய்ப்பிருந்த்து. ”



Images -
Mighty girl

வலைத்தளங்கள், மேற்கோள் நூல்கள்

https://en.wikipedia.org/wiki/Mary_Anning

Mary anning dossil hunter - sally m walker

https://www.nhm.ac.uk/discover/mary-anning-unsung-hero.html

https://www.livescience.com/who-was-mary-anning.html

https://www.bbc.co.uk/bitesize/topics/zd8fv9q/articles/zf6vb82

https://www.lymeregismuseum.co.uk/collection/mary-anning/

https://www.famousscientists.org/mary-anning/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்