பழமரங்களைத் தேடி பசியில் அலைந்து தவிக்கும் யானைகள்! - ஆப்பிரிக்க சூழல் அவலக் கதை

 


















பசியோ பசி! - ஆப்பிரிக்க யானைகளின் அவலநிலை



மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது, காபோன் நாடு. இங்குள்ள லோப் தேசியப்பூங்கா  4,921 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இப்பகுதி, 1946ஆம் ஆண்டு நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இப்பூங்காவிலுள்ள பருவ மழைக்காட்டில் அதிக எண்ணிக்கையிலான காட்டு யானைகள் வாழ்கின்றன. 

காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருவதால், யானையின் முக்கிய உணவான பழங்கள் கிடைப்பது குறைந்துவிட்டது. இதனால், வேறுவழியில்லாத யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு பசியைத் தீர்த்துக்கொள்கின்றன.  உலகளவில், ஆப்பிரிக்காவில், மட்டுமே 70 சதவீத யானைகள் வாழ்கின்றன. ஆப்பிரிக்க சாவன்னா யானைகளை விட, காபோன் பருவ மழைக்காடுகளில் வாழும் யானைகள் அளவில் சிறியவை. இந்த யானைகளின் எண்ணிக்கையும் பத்தாண்டுகளுக்கு மேல் தொடரும் வேட்டைகளால் குறைந்து வருகிறது. இம்மழைக்காடுகளில் உள்ள பெரும்பாலான மரங்கள், யானைகளின் சாணத்தினால் முளைத்தவைதான். காடுகளிலுள்ள சிலவகை பழங்களை யானைகளை தவிர  பிற விலங்கினங்கள் உண்டு செரிமானம் செய்யமுடியாது. இயற்கையாகவே பழங்கள் அவ்வாறு அமைந்துள்ளன. 

1986-2018 காலகட்டத்தில் செய்த ஆய்வில், காபோனிலுள்ள காட்டில் 81 சதவீத பழமரங்கள் குறைந்துவிட்டன என்று தெரிய வந்துள்ளது.  இதனால் யானைகளுக்கு தேவையான பழங்கள் கிடைக்கவில்லை. இங்குள்ள, ஆம்பலோகார்பும் புரோசீரம் (Omphalocarpum procerum) என்ற பசுமை மாறா மரத்தின் பழங்களை யானை விரும்பி உண்ணுகிறது.  யானையின் சாணம் வழியாகவே இந்த மரத்தின் விதைகள் காட்டில் விழுந்து முளைக்கின்றன. யானைகள் விரும்பிச் சாப்பிடும் பழம், விதைகள் இவை தான்: பென்டாகிளித்ரா மேக்ரோபைலா (Pentaclethra macrophylla), டிரிகோஸ்சைபா அகுமினாடா (Trichoscypha acuminata), நாகிளியா லாடிபோலா (Nauclea latifolia), ஸ்ட்ரைச்னோஸ் கான்கோலானா, நாகிளியா டிடெரிசி (Nauclea diderrichii), சாகோகுளோட்டிஸ் காபோனென்சிஸ் (Sacoglottis gabonensis)    

யானைகள் புரோசீரம் மரத்தின் பழங்களை சாப்பிட இயலாத நெருக்கடி உருவாகும்போது, அந்த  தாவர இனம் காடுகளிலிருந்து மெல்ல அழியத் தொடங்குகிறது. ”லோப் தேசியப்பூங்காவில் மனிதர்களின்  இடையூறு பெரியளவு கிடையாது. ஆனால் காலநிலை மாற்றத்தால் இங்கு வாழும் யானைகளும், மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார் ஸ்காட்லாந்திலுள்ள ஸ்டிர்லிங் பல்கலைக்கழக சூழல் அறிவியலாளர் ராபின் வொய்டாக். 1987ஆம் ஆண்டு, பத்து பழமரங்களைத் தேடினால் ஒருமரத்திலேனும் சாப்பிடுவதற்கான பழங்களை யானைகள் பெற்று வந்தன. ஆனால் 2018ஆம் ஆண்டில் யானைகள்,  50 பழமரங்களைத் தேடி அலைந்தால்தான் பழங்கள் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.


National geographic uk may 2022

https://theconversation.com/fruit-famine-is-causing-elephants-to-go-hungry-in-gabon-152757

 


கருத்துகள்