இரண்டாம் உலகப்போரில் உருவான சிண்ட்ரோம் கே! - உண்மையா, உடான்ஸா

 










இரண்டாம் உலகப்போரில் கண்டறியப்பட்ட சிண்ட்ரோம் கே என்பது நோயல்ல!


உண்மை. இரண்டாம் உலகப்போர் காலத்தில் இத்தாலி மருத்துவர்களால், சிண்ட்ரோம் கே என்ற நரம்பியல் சார்ந்த தொற்றுநோய் செய்தி உருவாக்கப்பட்டது. உண்மையில் மருத்துவர்கள்  யூதர்களை காப்பாற்ற  முயன்றே இப்படி நோய் பரவி வருவதாக பொய் சொன்னார்கள். இதன்மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யூதர்களை தற்காலிகமாக பாதுகாக்க முடிந்தது. 



9 நானாஸ் (The 9 Nanas) என்பது அமெரிக்க பெண்களின் ரகசியக் குழு!


உண்மை.  இக்குழுவினர் கெடுதலான செயல்களை ஏதும் செய்யவில்லை. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தைச் சேர்ந்த 9 பெண்கள்தான் 9 நானாஸ் என்ற ரகசியக்குழு. இவர்கள், தினமும் அதிகாலை 4 மணிக்கு பொதுவான இடத்தில் சந்தித்து, குறிப்பிட்ட அளவு காசு சேர்த்து உணவு, உடைகளை ஏழைகளுக்கு வழங்கி வந்திருக்கின்றனர். இக்குழுவினர், 30 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கணவர்களுக்குக் கூட தெரியாமல் தங்களது அறச்செயல்பாடுகளை செய்து வந்திருக்கிறார்கள். 


பாலின சமநிலை கொண்ட நாடு, ஐஸ்லாந்து!


உண்மை. உலகளவில் எடுக்கப்பட்ட பாலின சமநிலை அறிக்கையில், ஐஸ்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இதற்கடுத்து, நார்வே, ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன. 1975ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி, ஐஸ்லாந்தில் பெண்கள் சம உரிமைக்காக வேலைநிறுத்தம் செய்தனர். அடுத்த ஆண்டே அங்கு, சம ஊதியத்திற்கான சட்டம் அமலானது. 


குடல் புண்ணை உருவாக்கும் கிருமியை முதன்முறையாக கண்டறிந்தவர், ஆஸ்திரேலிய மருத்துவர்!


உண்மை. இதைக் கண்டறிந்த ஆஸ்திரேலிய மருத்துவர் பெயர், பேரி ஜேம்ஸ் மார்ஷல் (Barry James Marshall).  அவர், குடல் புண் ( peptic ulcer disease) உருவாக ஹெச். பைலரி பாக்டீரியா (Helicobacter pylori) என்ற நுண்ணுயிரி காரணம் என கண்டுபிடித்தார். ஆனால் அதை யாருமே நம்பவில்லை. அன்றைய சட்டப்படி, மனிதர்களின் மீது  சோதனை செய்ய முடியாத நிலை இருந்தது. எனவே, நுண்ணுயிரியை தனக்குள் செலுத்தி, சோதித்து உண்மையை உலகறிய வைத்தார். 2005ஆம் ஆண்டு குடல்புண் ஆராய்ச்சிக்காக, மருத்துவர் பேரி மற்றும் ஆய்வு சகாவான ராபின் வாரன் என்ற இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.


குச்சி ஐஸைக் கண்டுபிடித்தது, 11 வயதுச் சிறுவன்!


உண்மை. 1905ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன், ஃபிராங்க் எபர்சன் (Frank Epperson). இவர்தான், குச்சி ஐசைக் கண்டுபிடித்தார். பனி பொழியும் இரவில் சோடா பவுடர், ஐஸ் ஆகியவற்றை கலந்து விளையாடியவர் தற்செயலாகவே குச்சி ஐசை உருவாக்கினார். இதற்கு அவர் சூட்டிய பெயர் எப்சிகல் (Epsicle). பின்னர்தான் எளிதாக பெயர் கூறி வாங்கும்படி பாப்சிகல் (Popsicle) என்ற பெயர் சூட்டப்பட்டது.  



https://www.boredpanda.com/weird-cool-facts/?utm_source=google&utm_medium=organic&utm_campaign=organic

https://www.history.co.uk/article/syndrome-k-the-fake-ww2-disease-that-saved-jews-from-the-nazis

https://www.dailymail.co.uk/femail/article-2162905/West-Tennessee-women-secretly-delivering-cakes-underprivileged-families-30-YEARS.html

https://www.businessinsider.in/finance/news/here-are-the-top-10-countries-in-the-world-for-gender-equality/articleshow/72866431.cms

https://www.rd.com/list/weird-facts/

கருத்துகள்