புவியியல் - கனிமங்களை அறிவோம்
இரும்பு (Iron)
பூமியின் அடிப்பரப்பில் இரும்புத்தாது 5 சதவீதம் உள்ளது. இரும்புத்தாது தனியாக கிடைப்பது அரிது. பெரும்பாலும் நிக்கலுடன் சேர்ந்துதான் கிடைக்கிறது. 7.5 சதவீதம் நிக்கல் கலந்த இரும்பின் பெயர், காமாசைட் (Kamacite). 50 சதவீத நிக்கல் கலந்துள்ள இரும்பிற்கு, டேனைட் (Taenite) என்று பெயர். இந்த வகைக்குள் வராமல் உள்ள இரும்பு நிக்கல் கலவைக்கு டெட்ராடேனைட் (Tetrataenite) என்று பெயர். இந்த வகை தாதுவை விண்கற்களில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேற்கூறிய தாது வகைகள் துகள்களாக அல்லது வட்ட வடிவில் கிடைக்கின்றன. நிலவு மற்றும் சூரியனில் இரும்புத்தாது இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிஸ்மத் (Bismuth)
பிஸ்மத், மத்திய காலத்திலிருந்தே மக்களின் பயன்பாட்டில் உள்ளது. 1450ஆம் ஆண்டு ஜெர்மானிய துறவி பாசில் வேலன்டைன் (Basil Valentine), பிஸ்மத் உலோகத்தை முதன்முதலில் குறிப்பிட்டார். பளபளப்பான, வளையக்கூடிய தன்மை கொண்டது.பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கிறது. தகரம், காரீயம், செம்பு ஆகியவற்றுடன் சேர்ந்து தாதுவாக கிடைக்கிறது. இதனை பிற உலோகங்களோடு இணைத்து உலோக வார்ப்புகளைச் செய்கிறார்கள். தொடக்கத்தில், பிஸ்மத் உப்புகளை செரிமான பிரச்னைக்கு மருந்தாக பயன்படுத்தினர்.இதனை பிற உலோகங்களுடன் கலந்து திடப்படுத்தும்போது சிறிது விரிவடைகிறது.
------------------------------------------------------------------------------------------
ஆன்டிமோனி (Antimony)
8ஆம் நூற்றாண்டு தொடங்கி ஆன்டிமோனியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனால், இதனை விஞ்ஞானிகள் உலோகமாக அங்கீகரித்தது 1748ஆம் ஆண்டு தான். கிரிஸ்டல் வடிவமாக கிடைப்பது அரிது. பளபளப்பான வெள்ளை நிறத்தில் கிடைக்கும். இதில் குறைந்தளவில் ஆர்சனிக் வேதிப்பொருள் காணப்படுகிறது. பிற உலோகங்களோடு இணைந்து (Alloy) பொருட்களாக மாறும்போது அதனை வலிமையாக்குகிறது.
காரீயத்துடன் இணைத்து, தோட்டாக்கள், வாகன பாகங்கள், கேபிள்களின் மேற்பூச்சு ஆகியவற்றுக்குப் பயன்படுத்துகின்றனர். தகரம், காரீயத்துடன் கலப்பு உலோகமாக மாற்றும்போது இந்த உலோக கலவைக்கு, பாபிட் உலோகம் (Babbitt) என்று பெயர். இதனைப் பயன்படுத்தி இயந்திரத்தின் உருளைகளைச் செய்கிறார்கள். இந்த உலோகம் உராய்வு எதிர்ப்புத் திறன் கொண்டது. ஆன்டிமோனியைத் திடப்படுத்தும்போது, சற்றே விரிவடைகிறது.
கிராபைட் (Graphite)
வைரத்தைப் போலவே கார்பனின் மற்றொரு வடிவம்தான், கிராபைட். கிரேக்க வார்த்தையான கிராபெய்ன் (Graphein)என்பதற்கு, எழுத என்று பொருள். இதிலிருந்துதான் கிராபைட் என்ற வார்த்தை உருவானது. கிரேக்க வார்த்தைக்கு, எழுத என்று பொருள். கிராபைட், கரும்பழுப்பு முதல் கருப்பு நிறம் வரையில் கிடைக்கிறது. கிராபைட்டின் மென்மை என்பது அதிலுள்ள கார்பன் அணுக்களைப் பொறுத்து மாறும். 1575ஆம் ஆண்டு தொடங்கி கிராபைட் பென்சில்கள் நடைமுறையில் உள்ளது.
அகான்தைட் (Acanthite)
வெள்ளியைப் பெறுவதற்கான முக்கிய தாது, அகான்தைட். இது, சில்வர் சல்ஃபைட் (வெள்ளியுடன் சல்ஃபர் கலந்துள்ள கலவை) ஆகும். கிரேக்க வார்த்தையான அகன்தா (Akantha), என்பதிலிருந்து அகன்தைட் என்ற வார்த்தை வந்தது. அகன்தா என்பதற்கு, முள் என்று பொருள். அகன்தைட்டின் கிரிஸ்டல் வடிவம் முள்ளைப்போலவே இருக்கும். வெள்ளி, கலேனா, பைராகைரைட், ப்ரௌஸ்டைட் ஆகிய உலோகங்களோடு இணைந்து கிடைக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக