முஸ்லீம்களின் தேசப்பற்றை நிரூபிக்க கட்டாயப்படுத்தும் படம்- கட்கம் - கிருஷ்ணவம்சி

 












கட்கம்

தெலுங்கு

இயக்குநர் – கிருஷ்ண வம்சி

இசை ராக்ஸ்டார் டிஎஸ்பி

ஒளிப்பதிவு எஸ்கேஏ பூபதி

எடிட்டிங் - ஶ்ரீகர் பிரசாத்



ரவிதேஜா, ஶ்ரீகாந்த் மேகா, பிரகாஷ்ராஜ், தேஜ். சங்கீதா, சோனாலி பிந்த்ரே

முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது. அப்படி தீவிரவாதிகளாக இருந்தால் அவர்களை ஜெய் பஜ்ரங்பலி என்று சொல்லி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றால் தீவிரவாதத்தை அழித்தே விடலாம் என்று சொல்லியிருக்கிற படம்.

படத்தில் தொடக்க காட்சியே தீவிரவாதிகளை அறிமுகப்படுத்தி விடுகிறார்கள். இதனால் படம் எந்த கோணத்தில் போகப்போகிறது என புரிந்துகொண்டுவிடலாம். தீவிரவாதி மசூத், அவரை விடுவிக்க தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை திட்டமிடுகிறார்கள். இதை தலைமை தாங்கி நடத்துபவர் அசார். அசார் யார் என்பது படத்தில் முக்கியமான திருப்புமுனை காட்சி.

கோட்டி, சினிமா நாயகனாக முயல்பவர். அவரின் தொடக்க காட்சிகள் பல்வேறு சினிமா ஸ்டூடியோக்களிலிருந்து செக்யூரிட்டிகளால் வெளியே தள்ளப்படுவதிலிருந்து தொடங்குகிறது. கோட்டி நடிகர் என்றால் அவரது நண்பர் இயக்குநராக முயல்கிறார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். வாடகை கூட கொடுக்க முடியாத நிலை. இவர்களுக்கு பணக்கஷ்டம் ஏற்படும்போதெல்லாம் உதவுவது ஆட்டோ டிரைவரான அம்ஜத் பாய்தான். கோட்டி, அம்ஜத், இயக்குநர் தோழன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்களை இணைக்கும் முக்கியமான ஆள், ராணுவத்தில் வேலை செய்யும் நண்பன்.

படத்தில் முக்கியமான பாத்திரம், கோட்டி – ரவிதேஜாவுக்கு நிகராக நடிப்பில் சாதிப்பவர் அம்ஜத் பாயாக நடித்துள்ள பிரகாஷ்ராஜ்தான். மதம் சார்ந்த புனித தன்மையைக் காப்பதோடு, இந்தியாவையும் நேசிக்கும் மனிதர். இவர் எப்படி இருக்கிறாரோ இதற்கு எதிர்ப்பதமாக உதவி கமிஷனர் ராதா கிருஷ்ணன் வருகிறார். இவரது கடந்தகாலத்தில் தனக்கு நெருக்கமான காதலியை தீவிரவாதத்திற்கு பறி கொடுத்திருக்கிறார். அதனால் தீவிரவாதம், பாகிஸ்தான் என எவனாவது வாயைத் திறந்தாலே துப்பாக்கியை உள்ளே வைத்து அழுத்தி சுட்டுவிடும் கோபம் கொள்கிறார்.

இவர் கொடுக்கும் ஊக்கத்தால்தான் கோட்டியின் நண்பர், ராணுவத்தில் வேலைக்கு சேர்கிறார். அவர் வழியே ராதாகிருஷ்ணா கோட்டி, அம்ஜத் பாய், இயக்குநர் நண்பர் என அனைவருக்கும் அறிமுகமாகிறார்.

படம் நெடுக ராதாகிருஷ்ணா, மன அழுத்தம் கொண்டவராகவே இருக்கிறார். எப்போதும் வெறித்த பார்வை, கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சுடுவதற்கு குல்லா போட்ட தீவிரவாதிகளை தேடுகிறார். அவருக்கு தனது வேலையை செய்வதைக் கடந்து காதலியை தீவிரவாத த்திற்கு பறிகொடுத்துவிட்ட குற்றவுணர்ச்சி அதிகமாக இருக்கிறது. ராதாகிருஷ்ணா, ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பதற்கு முன்னர் கைது செய்த அம்ஜத்துடன் பேசும் உரையாடல் காட்சியை இங்கு உதாரணமாக கொள்ளலாம்.

மசூதிக்குள் தீவிரவாதி ஒளிந்துகொள்ளும் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சியை பார்க்கும்போது இந்திராகாந்தி புனித கோவிலில் ஒளிந்துகொண்ட காலிஸ்தான் தீவிரவாதிகளை, ராணுவத்தை அனுப்பி சுட்டுக்கொன்ற சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு நேர்ந்த மோசமான பின்விளைவுகள் நினைவுக்கு வந்தன.

அந்த காட்சியில் அம்ஜத் சொல்லுவது எளிய யோசனைதான். செருப்போடு மசூதிக்குள் வரக்கூடாது என்று. அந்த இடத்தில் ராதாகிருஷ்ணா, எதற்கு தான் அப்படி வந்தேன் என்று சொல்லியிருந்தால் புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர் அந்த இடத்தில் நடந்துகொள்வது மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவே உள்ளது.

தேசியவாதம், ஒற்றுமை என்ற உணர்வை வலுக்கட்டாயமாக உருவாக்கும் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு. சில இடங்களில் இந்திய தேசியக்கொடி பெரிதாக வைக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடி சொல்வதை விட அம்ஜத் பாயின் செயல்பாடு முக்கியமானதாக தோன்றுகிறது.  படத்தில் கோட்டி – ரவிதேஜாவுக்கு ஜோடி வேண்டுமென்ற நிலையில் சங்கீதாவை வரவைத்து காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவரால் பெரிதாக எந்த பிரயோஜனமும் இல்லை.

படத்தில் அசார் யார் என்று தெரிந்தபிறகு பார்வையாளர்களுக்கு தெரிய வேண்டியது முஸ்லீமான (குறிப்பிட்ட ஒழுக்க முறைகளை கொண்ட) அம்ஜத் பாய், இவ்வளவு காலம் வாழ்ந்த நாட்டின் பக்கம் நிற்பாரா, அல்லது தொலைந்துவிட்ட உறவு வந்துவிட்டது. அதை இழக்க கூடாது என முடிவெடுப்பாரா என்பதுதான்.

படத்தில் பாடல் உருப்படியாக இருக்கிறது என்றால் அது நுவ்வே நுவ்வே நுவ்வு என்ற சோனாலி பிந்த்ரே வரும் பாடல்தான். படத்தின் தேசியவாத அழுத்தத்திற்கு சற்று ஆறுதல்.  சோனாலி பிந்த்ரே போலீஸ் கமிஷனரின் மகள். அவருக்கு அப்பாவின் வேலையில் உள்ள ரிஸ்க் கூடவா தெரியாது? தீவிரவாதிகளைப் பிடிக்கச் செல்லும்போது கூடவே செல்கிறார். அப்போதே நமக்கு  தெரிந்துவிடுகிறது. முடிந்தது கதை என. இதில் தீவிரவாதி கொன்றான் என அவன் மீது வன்மம் கொள்வதை விட முட்டாள்தனமாக நடந்துகொண்டது காதலி என உணர்ந்தால் ராதாகிருஷ்ணா சற்று இயல்பாக வாழ்ந்திருக்க முடியும். 

படத்தில் அம்ஜத் பாய் மட்டும்தான் நடிப்பு என்ற அளவில் சற்று நியாயம் செய்திருக்கிறார். பிறர் சூழலால், தங்களுக்கு ஏற்பட்ட முந்தைய அனுபவங்களால் உந்தப்பட்டால் அம்ஜத்பாய் எப்போதும் பிறருக்கு உள்ளே இருக்கும் மனிதநேயத்தை உணர்கிறார். கிரிக்கெட் போட்டியில் வென்ற பாக். அணிக்காக கோஷம் எழுப்பும் சிறுகுழுவை அம்ஜத், கோட்டி, ராதா ஆகியோர் தாக்குவதும் பிறகு நிலைமை புரிந்துகொண்டு அம்ஜத் நண்பர்களைத் தடுக்கும் காட்சியும் உதாரணமாக சொல்லலாம். 





படத்தின் முடிவு வலதுசாரி அரசியல்வாதிகள் செய்யும் கும்பல் படுகொலையை ஒத்திருக்கிறது. கொல்லப்படுவது தீவிரவாதி. அவன் இஸ்லாம் மத த்தைச் சேர்ந்தவன். அவனைக் கொல்லுங்கள் என்று சொல்லுவது, காவல்துறையினரை கட்டாயப்படுத்தி கோஷம் போடுவது காவியுடை அணிந்த இந்துகள்…..

தீவிரவாதியை கொல்லும் போலீஸ் அதிகாரியைத்தான் நேர்மையான அதிகாரி என ராணுவத்தில் பணியாற்றும் நண்பர் கூறியிருப்பார். தனது கடமை, நீதிமன்றத்தின் உரிமை ஆகியவற்றை பற்றி கவலைப்படாதவராக ராதாகிருஷ்ணா எப்படி மாறிவிடுகிறார்? தனது சொந்த வாழ்க்கை விருப்பு வெறுப்புகளை வேலையில் காட்டுபவர் எப்படி சரியான அரசு அதிகாரியாக அதுவும் காவல் பணியைச் செய்பவராக இருக்க முடியும்?

முஸ்லீம்களுக்கான அமிலச்சோதனை

கோமாளிமேடை டீம்

மாஸ் மகாராஜாவான  ரவிதேஜாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நேரத்தில் கட்கம் படத்தைப் பார்த்து அதைப்பற்றி எழுதுகிறோம். தற்செயலாக நடந்த விஷயம் இது. இந்த படம் ஆந்திர மாநில அரசின் நந்தி விருதுகளைப் பெற்றிருக்கிறது.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்