ஓஷியானா நாட்டில் ஒரே கட்சி நடத்தும் சர்வாதிகார அரசியல் கோமாளித்தனங்கள்- 1984 -ஜார்ஜ் ஆர்வெல் க.நா.சு

 















1984

ஜார்ஜ் ஆர்வெல்

 தமிழில் க.நா.சு

ஓஷியானா என்ற சர்வாதிகார நாடு. அங்கு ஒரே கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. முத்தண்ணாதான் அதன் நிரந்தர தலைவர். அந்த கட்சி உருவாக்கும் கொள்கை, போர், எதிரிகளைப் பற்றிய பிரசாரம், மக்களின் அவலமான வாழ்க்கை, பொய்யான வளர்ச்சி பிரசாரம் என பல்வேறு விஷயங்களை அங்கதமாக கூறும் நாவல்தான் 1984.

வின்ஸ்டன் என்ற அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்தான் நாவல் நாயகன். இவன்தான் கதையை நாடு எப்படி செயல்படுகிறது என்பதை நமக்கு விளக்குகிறான். இவனது காதலியாக வரும் ஜூலியா தனது உடல் மூலம் புரட்சிக்கு எதிரான வகையில் செயல்படுகிறாள். அது எப்படி என்பதை நாவல் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஒருவகையில் இந்த நூல் குறிப்பிட்ட கொள்கைகளை வலியுறுத்தி, கோஷம் போடும் கோரஸ் பாடும் கட்சிகளை சர்வாதிகாரத்தை கேலி செய்கிறது. தனிப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அரசு எந்தளவு தலையிட்டு அவர்களை கட்டுப்படுத்துகிறது என்பதை விவரிக்கும் இடங்கள் பீதியூட்டுகின்றன. ஏறத்தாழ வளர்ந்த,வளரும் நாடுகளில் கண்காணிப்பு பொருட்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையை கருத்தில் கொண்டு ஜார்ஜ் ஆர்வெல்லின் எழுத்தை க.நா.சுவின் மொழிபெயர்ப்பில் படிக்கும்போது பயம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.

வீட்டில், அலுவலகத்தில் என டெலிஸ்க்ரீன் எனும் கருவியின் இயக்கம், செயல்பாடு மக்களைக் கட்டுப்படுத்துகிறது. கேமரா கிடையாது. டெலிஸ்க்ரீனில் அன்றாட செயல்பாடுகள் ரேடியோ நிகழ்ச்சிகள் போல ஒளி, ஒலியோடு தொடங்கும். அதை மக்கள் அப்படியே பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் கைது, அடி உதை என அனைத்துமே உண்டு. நாவல் எழுதப்பட்ட காலத்தில் செய்தியை மாற்றி எழுத பேசினால் போதும் என எழுத்தாளர் யோசித்திருக்கிறார். சரிதான். இன்று கூகுள் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வந்துவிட்டது. எனவே நிறைய விஷயங்களை எளிதாக பொருத்திப் பார்த்து புரிந்துகொள்ள முடியும்.

நாவலின் முக்கியப் பகுதிகளாக வதைத்து விசாரணை செய்யும் கடைசிப் பகுதிகளில் கொள்கை, கோட்பாடு பற்றி பேசப்படுவது சிறப்பாக உள்ளது. அடுத்து 1984ஆம் ஆண்டு என டயரியில் வின்ஸ்டன் எழுதும் விஷயங்கள் நன்றாக உள்ளன.  மேற்கு நாடுகளோ, மூன்றாம் உலக நாடுகளோ அனைத்து நாடுகளிலும் நடைபெறும் அரசியல் கொள்கை கோமாளித்தனங்களை நாவல் பகடியாக அணுகினாலும் அதை ஆணித்தரமாக சொல்லிவிடுகிறது. நாவலைப் படிப்பவர்கள் புன்னகையுடன்தான் அதை படிப்பார்கள். தமிழ்மொழியில் செம்மையாக க.நா.சு மொழிபெயர்த்திருக்கிறார். இதில் நம் கவனத்தை சற்றே உறுத்துவது முத்தண்ணா என்ற பெயர்தான். ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று தெரியவில்லை. வின்ஸ்டன், பார்சன்ஸ், ஜூலியா, ஓப்ரியன், காரிங்டன் என அனைத்து பெயர்களும் ஒருவிதம் என்றால், முத்தண்ணா தமிழ்நாட்டு அரசியலை நினைவுபடுத்த வைக்கப்பட்ட பெயரா என்று தெரியவில்லை.

சர்வாதிகார அரசியலை கேலி செய்வதோடு எப்படியெல்லாம் மக்கள் மனதை குறிப்பாக கண்காணிப்பு அரசியல் மூலம் ஒற்றர்களை உருவாக்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்கிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார் ஆசிரியர். கூடவே டைம்ஸ் பத்திரிக்கையின் தலையங்கத்தையே மாற்றி எழுதி அச்சிட்டு வெளியிடுவது என சில சமாச்சாரங்கள் வருகின்றன. அதை நீங்கள் படித்தால்தான் அதில் உள்ள நுட்பங்களை உணர முடியும்.

மறக்க முடியாத அரசியல் அங்கதம்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்