பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரிக்க நினைக்கும் எதிரியைத் தடுக்கும் சகோதரர்கள்! பாஸ் பேபி - ஃபேமிலி பிஸினஸ்

 















பாஸ் பேபி

ஃபேமிலி பிஸினஸ்



ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனத்தின் அனிமேஷன் படைப்பு. இந்த படத்தின் கதையை சரியாக உள்வாங்க பாஸ் பேபி பார்ப்பது அவசியம். அந்த படத்தின் தொடர்ச்சியாக வரும் கதைதான் ஃபேமிலி பிஸினஸ்.

இந்த அனிமேஷன் படத்தில் சகோதர ர்கள் இருவர் இருக்கிறார்கள். இதில் ஒருவர் தொழிலதிபர். பணத்தாலேயே கொழிக்கிறார். அவருக்கு குடும்பம் என்றால் பெற்றோர், மூத்த சகோதரர் இருக்கிறார். ஆனால் அவர்களை விட்டு தொழில் பரபரப்பு என தள்ளியே இருக்கிறார். இதற்கு மூத்தசகோதரர், அவரது தொழிலதிபர் தம்பி என இருவர் வாழ்க்கையிலும் நிறைய சங்கடங்கள் காரணங்களாக உள்ளன. அதை தீர்த்து இருவரும் எப்படி ஒன்றாக சேர்கிறார்கள் என்பதே கதை.

 குழந்தையாக இருப்பவர்கள் சேர்ந்து பேபி கார்ப் என்ற நிறுவனத்தை நடத்துகிறார்கள். இதை ரகசியமாக செய்து வருகிறார்கள். இதில் சாதனை குழந்தையாக ஒரு காலத்தில் இருந்தவர்தான், இப்போது தொழிலதிபராக இருக்கும் தம்பி. மூத்த சகோதரர் தொழிலில் சிறக்கவில்லை. ஆனால் அவர் மணம் செய்துகொண்டு இரு பெண் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத் தந்து வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார். அவரது மனைவிதான் வெளியில் சென்று அலுவலக வேலைகளைப் பார்த்து சம்பாதிக்கிறார்.

 மூத்த சகோதரருக்கு டபிதா, டினா என இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் டபிதாவுக்கு அப்பா என்றால் கொள்ளை இஷ்டம். ஆனால் அவள் மெல்ல தான் வளர்ந்துவிட்டேன்பா என சொல்லி அப்பாவிடமிருந்து தள்ளிப் போகிறாள். குறிப்பாக தொழிலில் சாதித்த தம்பியை தனக்கு முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு படிக்கிறாள். தன்னை முன்னுதாரணமாக அவள் கொள்ளவில்லை என அவளது அப்பா மனம் குமைகிறார். அதற்கான காரணமும் அவருக்கு தெரியவில்லை. அதேசமயம் ஒரு காலத்தில் அவர் பாசம் காட்டிய தொழிலதிபர் தம்பியை பல்வேறு முறை வீட்டுக்கு அழைத்தும் கூட அவர் வருவதில்லை. இதுவும் அவர் வருத்தமுற காரணமாக உள்ளது.

பேபி கார்ப்பில் ரகசியமாக வேலை செய்யும் சுட்டி டினா, தனது அப்பாவையும் சித்தப்பாவையும்  ஒன்று சேர்த்து கிறிஸ்மஸ் விழாவை எப்படி கொண்டாட்டமாக மாற்றுகிறாள் என்பதே கதை.

படம் நெடுக குழந்தைகளின் அட்டகாசம்தான். அகார்ன் சென்டர் எனும் பள்ளிக்கு கதை நகரும்போது மேலும் குழந்தைகளின் உலகிற்கு குழந்தையாகவே நகர்ந்துவிடுகிறோம். கதையில் திருப்புமுனையே அகார்ன் சென்டரை நடத்தும் நிறுவனர்தான். இவர், குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்கு பெற்றோர்? அவர்களுக்கு எதிராக புரட்சி செய்வோம். உலகை வெல்வோம் என குயுக்தியான கோட்பாட்டை உருவாக்குகிறார். இதன் விளைவாக குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதை பேபி கார்ப் கண்டுபிடித்து தடுத்து குடும்ப அமைப்பை எப்படி காப்பாற்றி நிலைநிறுத்துகிறது என்பதே முக்கியமான கதை.

 வில்லன் என்றால் ரைபிள் வைத்து சுடவேண்டும். கொல்லவேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. உலகை பார்க்கும் முறை சற்றே மாறினால் போதும் அந்தே.. என சொல்லி வில்லனும் தனது பெற்றோரைச் சேருவதைப் போல படத்தை  எடுத்திருக்கிறார்கள்.

டபிதா தன்னுடைய அப்பா எந்தளவு ஸ்பெஷல் என மார்கஸ் லைட் ஸ்பீடிடம் உரையாடும் காட்சியும், பாடலை மனப்பூர்வமாக பாடி மகிழ்வதுமான காட்சிகள் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன. மூத்த சகோதரர் தனது குழந்தைகளுக்கு சொல்லும் கதைகளை படத்தில் காட்சிப்பூர்வமாக அனுபவமாகவே அவர்கள் அனுபவிப்பதாக காட்டும் காட்சிகளும் பார்க்க வியப்பு தருகின்றன.  

 சந்தோஷமோ, துக்கமோ அதை பகிர்வதற்கு உங்களுக்கென ஒரு அல்லது பல அன்பு நிறைந்த உங்கள் வெற்றியில் மகிழும் மனங்கள் தேவை. அது குடும்பமாக இருக்கலாம். உறவாக இருக்கலாம். காதலாக இருக்கலாம். ஆனால் அப்படியொன்று தேவை என சொல்லுகிற படம்தான் பாஸ் பேபி ஃபேமிலி பிஸினஸ்.

பாசம் முக்கியம்.

 கோமாளிமேடை டீம்


கருத்துகள்