சூரியனைப் போற்றுவதென்பது.. புதிய மின்னூல் வெளியீடு - இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளம்

 






குங்குமம் வார இதழில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என முதலில் நினைக்கவில்லை. கோகுலவாச நவநீதன் தலைமை உதவி ஆசிரியராக இருந்த காலம் அது. திரு.முருகன் அப்போது குழும இதழ்களின் முதன்மை ஆசிரியர். அவர்தான் என்னை முத்தாரம் இதழுக்கான உதவி ஆசிரியராக தேர்ந்தெடுத்தார். குறைந்த சம்பளம், ஏராளமான வேலைகள் எனக்கு பரிசாக கிடைத்தன. 

எனக்கு அன்றிருந்த பெரிய மகிழ்ச்சி, வெள்ளி மலரில் சினிமா கட்டுரைகள், தொடர் எழுதிக்கொண்டிருந்த எனது வழிகாட்டியாக நினைத்த திரு. கே.என்.சிவராமன் சாரை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பும், காலை வணக்கம் சொல்லும்போது அவரின் முகத்தை பார்க்க முடியும் என்ற மனநிறைவும்தான்.  

மொழிபெயர்ப்பு என்பது நானாக முனைந்து கற்றுக்கொண்டதுதான். அதில் நிறைய பிழைகள் உண்டு. தவறுகள் உண்டு. முத்தாரத்தில் உதவி ஆசிரியராக இருந்தபோதும் கூட எனது பெயரில் கட்டுரை வருவது கடினமாக இருந்தது. அதற்கென வெளியில் இருந்து வரும் பல்வேறு தகவல்களை படித்து சரிபார்த்து போட்டால் போதும் என்பதும் முதன்மை ஆசிரியரின் உத்தரவு. குங்குமத்தில் பணியாற்றியவரான இன்னொரு நபர் உடல்நிலை குறைவால் விடுப்பு எடுக்கத் தொடங்க, குங்குமத்தில் கடிதங்களை எழுதி தரும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. குங்குமத்தில் கடிதம் எழுதவேனும் வாய்ப்பு கிடைக்கிறதே என்று ஒற்றை மகிழ்ச்சி. 

மற்றபடி முத்தாரத்தில் பெயர் வராது, தினகரன் கல்வி மலர், குங்குமச் சிமிழ் வேலை வழிகாட்டி, சூரியன் பதிப்பகம், தினகரன் நாளிதழில் மருத்துவத் துணுக்குகள் என வேலை பளுவுடன் பணியாற்றிய எதிலும் எனது பெயர் வராது. அப்படி பெயரை போடலாம் என்று கூட யாரும் என்னை பரிந்துரைக்கவில்லை. 

பிறகு காலம் மாறியது. குங்குமத்தின் முதன்மை ஆசிரியராக கே.என்.சிவராமன் பொறுப்பேற்றார். அவர்தான் என்னை தனியாக அழைத்துப் பேசி, கையில் மொழிபெயர்க்கவென தான் சேமித்து வைத்த ஆங்கில நாளேடுகளைக் கொடுத்தார். கட்டுரைகளை எழுதினேன். பிறகு சில மாதங்கள் கழித்து எனது பெயர் குங்குமம் இதழில் நிருபர் என வெளியானது. உண்மையில் உதவி ஆசிரியர் என்ற தலைப்பில்தான் வரவேண்டும். ஏனெனில் நான் நிருபராக வெளியே சென்று எந்த வேலையும் செய்யவில்லை. மேசையில் அமர்ந்து மொழிபெயர்ப்பதும், குழும இதழ்களுக்கான ஜோக், சிறுகதை, கட்டுரைகளுக்கான கணக்கு வழக்குகளை பஞ்சாயத்து செய்து ஆவணங்களை தயார் செய்துகொண்டிருந்தேன். குங்குமத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிறைய கட்டுரைகளை ஒன்றரை ஆண்டுகள் எழுதினேன். அதில் அவ்வப்போது சேமித்து வைத்த எட்டு கட்டுரைகளை இந்த சூரியனைப் போற்றுவதென்பது... நூலில் வாசிக்கலாம். 

நூலை இலவசமாக வாசிக்கலாம். வணிகரீதியாகப் பயன்படுத்தக்கூடாது. 

இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் வாசியுங்கள். நன்றி,







https://archive.org/details/suriyanai


தலைப்பு - ரூமியின் கவிதைகளிலிருந்து பெறப்பட்டது. 

ஆக்கமும் தொகுப்பும் 


அன்பரசு சண்முகம்


அட்டைப்படம் - பின்டிரெஸ்ட்


அட்டைப்பட வடிவமைப்பு


AU STUDIO


நன்றி

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

கணியம் சீனிவாசன்

ஃப்ரீதமிழ் இபுக்ஸ் குழுவினர்


கருத்துகள்