சமூக விதிகளை மதிக்காத சைக்கோபாத் கொலையாளிகள்!
சமூகத்தில் விதிகள், நெறிமுறைகளை
பின்பற்றி நடப்பதற்கு சோசியலைசேஷன் என்று பெயர். இது ஒரு சிக்கலான செயல்முறை. நடைமுறையில்
விதிகள் எப்படி கடைபிடிக்கப்படுகின்றன என்பதே முக்கியமானது. அவை என்னென்ன என்று பார்ப்போமா, குழந்தை வளர்ப்பு, பள்ளி, சமூக அனுபவங்கள், மதரீதியான
சடங்குகள், விழாக்கள் ஆகியவை இதில் அடங்கும். பொதுவாக ஒருவர் வாழ்ந்த வந்த சமூகத்தின்
பண்பாடு அடிப்படையில் எதை செய்யவேண்டும் கூடாது என்பது தெளிவாக மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் சைக்கோபாத்களைப் பொறுத்தவரை தனது மனதில் உள்ள சமூக விதிகளை புறக்கணித்து தனது
நலன்களுக்கு ஏற்பட ஒரு செயலைச் செய்வார்கள். இவர்களுக்கு குற்ற உணர்ச்சி என்பது அணுவளவும்
இருக்காது. சமூக விரோத செயல்களான கொள்ளை, கொலை என எதுவும் இந்த மனநிலையில் சைக்கோபாத்களுக்கு
சாத்தியமே.
சிறுவயதில் ஒருவர் செய்யும்
செயல், அதனால் ஏற்படும் பின்விளைவுகள், தண்டனை ஆகியவை அவரது பிற்கால வாழ்க்கையை மாற்றும்.
இந்த வகையில், சைக்கோபாத்களுக்கு மனதில் அறவுணர்வு இருக்காது. வங்கியை கொள்ளையடிக்க
வேண்டும் என்றால் யோசித்த வேகத்தில் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். அதனால் என்னாகும்,
காவல்துறை துரத்தும், வாழ்க்கை நாசமாகும் என்ற தொலைநோக்கு அளவுக்கு யோசிக்கமாட்டார்கள்.
பணத்தை கொள்ளையடிப்போம். பிறகு மற்ற விஷயங்களைப் பார்ப்போம் என யோசிப்பார்கள்.
சைக்கோபாத்களிடம் உள்ள
ஆச்சரியமான விஷயம், அவர்களின் கவனம்தான். தனக்கு என்ன வேண்டுமோ அந்த விஷயம் மீது முழு
கவனத்தையும் செலுத்துவார்கள். இந்த வகையில் பலருக்கும் ஈடுபாடு ஏற்பட்டு விடும். குறிப்பாக
பெண்களுக்கு. தாங்கள் சொல்வதை இவர் காது கொடுத்து கவனிக்கிறார் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது.
எளிதாக நச்சான உறவில் விழுந்து மாட்டிக்கொள்கிறார்கள். சைக்கோபாத்கள் செய்யும் செயலின்
பின்விளைவுகளை அறியாதவர்கள் என்பது உண்மை. ஆனால் அவர்கள் தங்கள் இலக்கை என்னவோ அதன்
மீது முழுகவனம் கொண்டிருப்பார்கள்.
சைக்கோபாத்களை அடையாளப்படுத்திய
சினிமாக்களைப் பார்ப்போம். குட்ஃபெல்லாஸ், மிசரி, பசிஃபிக் ஹைட்ஸ், ஸ்லீப்பிங் வித்
எ எனிமி, இன் பிராட் டேலைட், லவ், லைஸ் அண்ட் மர்டர், ஸ்மால் சேக்ரிஃபைஸ், கேப் ஃபியர்,
இன் எ சைல்ட்ஸ் நேம் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் புகழ்பெற்றவை. டிவி தொடர்கள் என்று எடுத்துக்கொண்டால் நிறைய வந்துள்ளன.
இப்போது ஓடிடிகளில் எடுக்கும் படங்கள், தொடர்களில் கொலை, கொள்ளை பற்றியவையே அதிகம். அடால்ஃப் ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின், மூன்றாம் ரிச்சர்ட்,
சதாம் உசேன் ஆகியோரது உந்துதலில் கொலைகளை பெரியளவு செய்ய திட்டமிடும் அரசியல் கட்சிகள்
தனிமனிதர்கள் பெருகி வருகின்றனர்.
திரைப்படங்களில் சைக்கோபாத்களை
காண்பிப்பது மனநல குறைறபாடு கொண்டவர்களுக்கு தாங்கள் தனிமைப்படுத்தப் படுகிறோம் என்ற
உணர்வு குறைய உதவுகிறது. அடுத்து பொதுமக்களுக்கு மனநல குறைபாடு கொண்டவர்களின் அறிகுறிகள்,
நடத்தைகளை அறிந்து சற்று உஷாராக இருக்க வாய்ப்பு
கிடைக்கிறது. சைக்கோபாத்கள், கொலைகளை செய்த காலத்தை விடவும் நவீனகாலம் நிறைய ஆபத்துகளைக்
கொண்டதாக உள்ளது. தற்போதைய காலத்தில் குற்றம் செய்பவர்கள் தங்களால் பாதிக்கப்படுபவர்களிலிருந்து
மிகவும் தனித்தவர்களாக இருக்கிறார்கள். கருணை, மனிதநேயம் என ஏதுமில்லாதிருப்பது ஒட்டுமொத்த
சமூகத்திற்கே ஆபத்தானதாக எதிர்காலத்தில் மாறலாம். பிறரின் நலன்களுக்கான பொறுப்பை யாரும்
ஏற்பதில்லை.
குற்றவாளிகளின் கலாசாரம்
எப்படி உருவாகிறது. வெளியிலிருந்து வரும் உந்துதலைப் பார்ப்போம்.அவர்களுக்கான அற மதிப்பீடு
உண்டா, சமூகம் சொல்லும் விதிகளை ஏற்காத திருடர்கள்கூட அவர்கள் கூட்டத்தில் சில விதிகளை
உருவாக்கி வைத்திருப்பார்கள். உண்மையில் இவை குழு எனும் அமைப்பை காக்க உதவுகிறது.
தந்தை திருடர், தாய் விபச்சாரி
எனும் நிலையில் வளரும் பிள்ளை எப்படியிருப்பான். தந்தை, தாயின் வேலைக்கு உதவும் நிலையில்
அவன் குற்றத்தின் தடங்களை அடையாளம் காண்பான். தீமையின் வசீகரத்தைத் தொடுவான். பழகுவான்.
அதை தனது வாழ்க்கையாக்கி கொள்வான். இப்படிதான் மாஃபியா வம்சாவளிகள் குற்றங்களை தொடர்கின்றனர்.
பாலியல் ரீதியான தாக்குதலை
எதிர்கொள்வது, சீரழிக்கப்படுவது, நெருக்கமான உறவுகளை பலிகொடுப்பது ஆகியவையும் ஒருவரை
தவறான பாதைகளுக்கு பழக்குகிறது. இதனால் அவர்கள் தாங்கள் அனுபவித்த வலியை பிறருக்கு
கொடுக்க தயாராகிறார்கள். ஒட்டுமொத்த சமூகத்தையே எதிரியாக பாவிக்கிறார்கள்.
மது போதைப்பொருட்களை பழகுபவர்கள்
அந்த சந்தோஷத்திற்காக கொலை, கொள்ளை செய்யத் தொடங்குகிறார்கள். இப்படி தொடங்குபவர்களுக்கு
அவர்களின் சந்தோஷமே முக்கியம்., மனதில் குற்ற உணர்வு எழுந்தாலும் அதை மழுங்கச் செய்ய
போதைப்பொருட்கள் இருக்கின்றனவே.. பிறகு கவலை என்ன?
குற்றமனம்,வ றுமை, வன்முறையான
பின்னணி, பொருளாதார அழுத்தம், போதைப்பொருட்கள் பழக்கமே குற்றங்களுக்கான அடிப்படைகள்.
வேலை செய்வதை விட ஒருவரிடம் அடித்து பிடுங்க குறைந்த நேரம்தானே ஆகும்? பணத்தை திருட
அதை சம்பாதிக்கும் அளவுக்கு நேரம் தேவையில்லை என திரிவிக்ரம் சீனிவாஸ் தனது படத்தில்
சொல்லுவார். அதேதான். எளிமையாக இருக்கிறதே,
இவ்வளவு எளிதாக பிழைத்துவிடலாம் என்றால் இதையே தொடர்வோம் என குற்றங்களை செய்கிறார்கள்.
அவ்வளவேதான். ஏன் இப்படி செய்கிறீர்கள் என உளவியலாளர்கள் கேட்டதற்கு, அதில் வேடிக்கை
அதிகம் என்று கூற கொலைகார கொள்ளையர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
சைக்கோபாத்களைப்பொறுத்தவரை
அவர்களுக்கு நட்பு என்பது எப்போதும் உதவாது. அப்படி இருந்தாலும் பிடிபட்டால் உடனே கூட்டாளிகளைப்
பற்றி தகவல் கொடுத்துவிட்டு தப்பிக்க முயல்வார்கள். விதிகள், நெறிமுறை என எதையும் பின்பற்றும்
வழக்கம் கொண்டவர்கள் அல்ல. இப்போது நான் சொன்னதை நீங்கள் கோட்பாடாக படிப்பதை விட திரைப்படமாக
பார்க்க நினைத்தால் டெரன்ஸ் மாலிக் இயக்கிய பேட் லேண்ட்ஸ் திரைப்படத்தை பார்த்துவிடுங்கள்.
படத்தில் வரும் கொலைகாரர்களில் ஆண் பாத்திரமான கிட், பெண் பாத்திரமான ஹோலி என இருவருமே சைக்கோபாத்களின் இயல்புகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.
உளவியலாளர்கள் மனநலக் குறைபாடு
கொண்டவர்கள், தொடர் கொலைகாரர்கள் என இருவரையும்
வேறுபடுத்திக்காட்டுகிறார்கள். அதாவது, சைக்கோபாத்கள் கொலைக்குற்றவாளிகளாக இருக்கும்
அவசியம் இல்லை. தொடர் கொலைகாரர்கள் வேறு வகையானவர்கள் என தங்களுக்குள் விவாதித்துக்
கொள்கிறார்கள். தங்களுக்கு எதிராக நடக்கும் எந்த சூழ்நிலையையும் வன்முறை வழியாக எதிர்கொள்ளும்
அடங்காத கோபமும் சைக்கோபாத்களை குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்துகிறது. கொலை செய்யத்தான்
போகிறோம் எதற்கு காதல், காமம் என விவாதம் செய்து நேரத்தை வீணடித்துக்கொண்டு.. என்று
நினைத்து மனதில் நினைத்த உடனே ஆட்கள் கிடைத்தால் போட்டுத்தள்ளிவிட்டு செல்வதுதான் சைக்கோபாத்களின்
பலவீனம். கேரி கில்மோர், தனது காதலியை பெட்ரோல்
பங்கில் இரண்டு நிமிடம் ரேடியோ கேட்டுக்கொண்டு இரு என்று சொல்லிவிட்டு சென்று கண்ணில் பட்ட இரு நபர்களை சுட்டுக் கொன்றுவிட்டு
வந்தார். ஏன் என்று கேட்காதீர்கள். அது அப்படித்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக