ரஷ்ய கடத்தல் ஆயுதங்களை விற்கும் தேசத்துரோகியை துரத்தும் சிஐடி ராபின் - மார்வின் - வேதாள வேட்டை - முத்து காமிக்ஸ்

 















# திருப்பூர் புத்தகத் திருவிழா 2023

# தமிழக அரசு - பின்னல் புக் ட்ரஸ்ட் 


சிஐடி ராபின் ஆடும் 

வேதாள வேட்டை 

முத்து காமிக்ஸ் 

ரூ. 50

கதை - மோரெட்டி மிக்னாகோ

ஓவியம் - ஃபியோரென்டினி - பஸ்டிச்சி - பேசானி

மூலக்கதை - செர்ஜியோ போனெல்லி நிறுவனம் 


காமிக்ஸ் கதையின் தொடக்கம். அதில் ஒருவர் இன்னொருவரிடம் ஆயுதம் வாங்க வந்திருக்கிறார். போலிச்சரக்கு கொடுத்து தன்னை ஏமாற்ற வேண்டாம் என சொல்லுகிறார். ஒருவர் பெர்ரி, இவர்தான் ஆயுதத்தை ஸோம்பி என்பவருக்கு விற்கிறார். ஸோம்பி ஒரு கொலைகாரர் . அவரை ராபின், மார்வின் ஆகிய டிடெக்டிவ்கள் கைது செய்யத் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆயுதத்தை ஸோம்பி பெர்ரியிடம் பணம் கொடுத்து வாங்கும் தொலைவில் சற்றுத் தள்ளி அவர்களை ராபின் - மார்வின் இணை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறது.  

இவர்களுக்கு இடையில் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் ஸோம்பி, நெற்றியில் தோட்டாவை வாங்கிக்கொண்டு சாகிறான். பெர்ரிக்கு தோட்டாக்காயம் பட்டு வாழ்வா சாவா என்ற நிலை. அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஆயுதங்களை ராபின் - மார்வின் இணை பெருமையாக பறிமுதல் செய்கிறது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் எப்படிப்பட்ட விவகாரத்தில் நுழைந்திருக்கிறோம் என்று....

இதற்கடுத்து, மூன்று கொள்ளையர்கள் ஜான் அஸ்டர் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரது நாயை சுட்டுக்கொன்று மனைவியை துப்பாக்கி முனையில் வைத்திருக்கிறார்கள். அவர்களது நோக்கம், அஸ்டர் மேலாளராக இருக்கும் வங்கியை கொள்ளையடிப்பதுதான். ஆனால் திட்டத்தின் இடையே அஸ்டரின் மனைவி தப்பிக்க  முயல, மூன்றாவதாக வீட்டில் இருந்த மொட்டை நபர் க்ளெண்டாவை தொண்டையில் சுட்டுக்கொல்கிறார். பிறகு, அவரும் உடல்நலக்குறைவால் தள்ளாடி சாலையைக் கடப்பவர், காரில் விழுந்து இறந்து போகிறார். 

இந்த வழக்கு ராபின் - மார்வின் கைக்கு வருகிறது. இருவரும் வழக்கு பற்றி ஆராயும்போது மருத்துவமனையில் உள்ள பெர்ரியும் உள்ளே வருகிறார். உண்மையில் ஆயுதம் விற்ற பெர்ரி யார், அவருக்கு ஆயுதங்கள் எப்படி கிடைத்தன, வங்கி கொள்ளையில் அஸ்டரின் பங்கு உண்டா இல்லை என்ற கேள்விக்கு விடை தேடுகிறீர்களா? அப்போது நிச்சயம் நீங்கள் வேதாள வேட்டை காமிக்ஸை வாங்கி வாசித்தே ஆக வேண்டும். 

காமிக்ஸில் க்ளென்டா தப்பி ஓடும் காட்சியும், அவர் சுடப்படும் காட்சியும் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. காவல்துறையினர், தோட்டாவின் கோணத்தை வைத்து எப்படி க்ளெண்டா கொலை செய்யப்பட்டாள் என யூகிப்பதும் சிறந்த பகுதி. 

அமெரிக்கா உள்நாட்டு காவல்துறை, ராணுவம் ஆகியவற்றுக்கு இடையிலான உரசல் உறவு, அமெரிக்காவில் எளிதாக கடத்தி விற்கப்படும் ரஷ்ய ஆயுதங்கள் பற்றி விவரித்திருக்கிறார்கள். மருத்துவமனையில் இருந்து தப்பிக்க முயலும் பெர்ரி, கூலிக்கொலைகாரன் சண்டையை படங்களாக பார்க்கையில் வியப்பு ஏற்படுகிறது. சவப்பெட்டி செய்யுமிடத்தில் ஷான், மடோக் ஆகியவற்றை போலீசார் தாக்கும் காட்சிகளுக்கான படங்கள் சிறப்பாக உள்ளன. 

வங்கி மேலாளராக உள்ள ஜான் ஆஸ்டர், கர்னல் கோனன் ஆகியோரை வாசகர்களாக நாம் எதிர்கொள்ளும்போதே, ஏதோ வினோதமாக இருக்கிறதே என தோன்றுகிறது. ஆனால் இறுதியில் அந்த வினோதமான தன்மை ஏற்படுத்தும் கோர விளைவுகளை நாம் வேதாள வேட்டையில் பார்க்கிறோம். தன்னை எதிலும் ஈடுபடுத்திக்கொள்ளாதபடி ஆயுதங்களை விற்றுக்கொண்டு பிறரை அதிகாரம் செய்துகொண்டு வாழும் கர்னல் கோனன், ஸ்டைலான வில்லன். 

இறுதியில் வில்லனின் பக்கமிருந்தே ஒரு நபர், காவல்துறைக்கு உதவுவது நாம் எதிர்பார்க்காத ஒன்று. 

சாகசமான திரில்லர் காமிக்ஸ் கதை. சிஐடி ராபின், - மார்வின் இணையை ரசித்துப் படிப்பீர்கள் என்றால் நூலை நம்பி வாங்கலாம். 

கோமாளிமேடை டீம் 


சென்னையில் 2022ஆம்ஆண்டு முத்து காமிக்ஸ் எதையும் வாங்க முடியவில்லை என்ற குறை இருந்தது. இந்த ஆண்டு திருப்பூரில் ராபினின் கதையை வாங்கியதில் மனக்குறை நீங்கியது. நன்றி முத்து காமிக்ஸ்....

50, 65, 70 ரகங்களில் நிறைய கதைகள் உள்ளன. ஒப்பீட்டளவில் டெக்ஸ் வில்லர் நிறைய இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டார். ....



https://lion-muthucomics.com/51-cid-robin











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்