கொலைகார மகனைப் பற்றி புரிந்துகொள்ளத் தொடங்கிய தந்தையின் கதை!

 ஒருவரின் மனதில் பிறர் மீது ஏற்படும் வன்மம் கொலை செய்வதற்கு ஏற்றதாக எப்படி மாறுகிறது என்பதை உளவியலாளர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். அதற்கென சில கோட்பாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

கற்பனை

தனக்குப் பிடித்தது போல கற்பனைகளை ஒருவர் கற்பனை செய்துகொள்வது, இதன் மூலம் மகிழ்ச்சி அடைவது.

தனிமையில் இருப்பது

நினைவுகளில் இருந்து தனிமையில் இருப்பது. தனக்கு பிடிக்காத உணர்வுகள், நினைவுகளில் இருந்து ஒருவர் தனியாக இருப்பது.

அதுவேறு இதுவேறு

இரட்டை சிந்தனைகள் என்று சொல்வார்கள். தனது சிந்தனை, ஆசை, கோபம் என அனைத்தையும் தனித்தனியே பிரித்து வைத்துக்கொண்டு வாழ்வது.

எப்போதும் பகல் கனவு கண்டுகொண்டே இருப்பது, தனியாக இருப்பது, கூச்ச சுபாவம் கொண்டவர்களாக பயந்த இயல்புடையவர்களாக இருப்பதெல்லாம் அவர்களின் மனநிலையை பாதிக்கிறது. இவர்கள் வெகு நாட்களாக கற்பனை கொண்ட விஷயங்களை நிஜத்தில் செய்துபார்க்க நினைத்தால், அங்குதான் குற்றங்கள் நடக்கின்றன. இதை டெட் பண்டி கூட கூறியிருக்கிறார். கற்பனை விஷயங்களை மனதில் தனி இடத்தில் வைத்திருக்கிறேன் என்றார். இப்படி பெருகும் கற்பனைகளை ஒருவர் தனது மனதில் அடக்கி வைக்கும்போது அது பெரும் சக்தியாக பின்னாளில் மாறி, அவர்கள் சாதாரண வாழ்க்கையையும் ஆக்கிரமிக்கிறது. குற்றவாளி தனது நண்பர் என தெரிந்தபிறகுதான் பலருக்கும் நிறைய விஷயங்கள் தெரிய வரும்.  இதுவரை தான் பார்த்த மனிதர் வேறு, இவர் வேறு என பலரும் பதறுகிறார்கள். 

உண்மையில் அவரது நண்பராக பழகியவர் எப்போதுமே இருளான பக்கத்தை கொண்டிருந்தவர்தான். ஆனால் அதை சமநிலையாக வைத்திருந்தார். பிறர் அதன் அறிகுறிகளை பார்த்திருக்கலாம். கருத்தூன்றி கவனத்திருக்க மாட்டார்கள். இதில் சமநிலை பிறழும் மனதில்தான் பாதிப்புகள்  ஏற்படுகின்றன.

ஒருமுறை கொலை செய்து அதில் உச்சபட்சமான மகிழ்ச்சி கிடைக்கத் தொடங்கிவிட்டால் முடிந்தது. அவர்களை திரும்ப பழைய வாழ்க்கை முறைக்கு தெரபி கொடுத்து அழைத்து வருவது கடினம். அதிலேயே அவர்கள் உச்சம் தொடும்படி பல்வேறு குற்றங்களை செய்துகொண்டே செல்வார்கள். இயல்பான வாழ்க்கையில் குற்ற உணர்வு தோன்றும் இயல்பு இருந்தால் கூட அதையும் மறைத்துவிடுவார்கள். கொலைகளை செய்யும் எண்ணம் அதிகமாகி தன்னைத்தானே கொன்றுகொண்டு விடுபவர்களும் உண்டு. இவர்களை எளிதாக கண்டுபிடிக்க முடியாது.

ஜெஃப்ரி டாமரின் தந்தை லயோனல் தனது மகன் எப்படி கொலைகளை செய்தான் என்பதை தான் உணர்ந்த விதமாக எ ஃபாதர்ஸ் ஸ்டோரி என்ற நூலாக எழுதினார். அதில் தனது மகனை சரியாக புரிந்துகொள்ள முடியாதது பற்றியும் கூறியுள்ளார். பல்வேறு ஆண்களை, பெண்களை வெட்டிக் கொன்று உடல் பாகங்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்ததை காவல்துறை கண்டுபிடித்தது. குளிர்பதனப் பெட்டியில் உள்ள உறையும் பெட்டியை தனியாக பெரிதாக ஜெஃப்ரி வாங்கினார். அதைப்பற்றி கேட்டபோது, பொருட்களை அதிகம் அதில் வைத்துக்கொண்டால் செலவு குறையும் என மகன் கூறியதை நினைவுகூர்கிறார்.

 ஜெஃப், துப்பாக்கியை வைத்திருந்திருக்கிறார். மதுபான காலி பாட்டில்களில் நீரை ஊற்றி வைத்திருந்தார். சாலை விபத்தில் இறந்த நாயின் தலையை பதப்படுத்தி பயன்படுத்தும் கைத்தடியில் மாட்டியிருந்தார். பெண்களின் மீது பெரிய ஆர்வம் காட்ட்டாத மகனை ஓரினச்சேர்க்கையாளர் என தந்தை லயோனல் புரிந்துகொள்ளவில்லை. கூச்சம் என நினைத்திருக்கிறார். சிறுவனை வல்லுறவு செய்து சிறைக்கு போய் வந்தபிறகு கூட மகன் சொன்ன கதையைக் கேட்டு அவன் மீது தவறு இல்லை என நினைத்திருக்கிறார். தனது அப்பா வழி பாட்டியின் வீட்டில் தங்கி படித்தபோது, இறந்த உடல்களை அமிலம் ஊற்றி கரைத்து தடயங்களை அழித்தார். மிஞ்சிய உடல் பாகங்கள் அழுகி கடும் துர்நாற்றம் எழுந்தது. அதற்கு ஜெஃப், தான் வளர்க்கும் பூனை காரணமாக என பதில் சொன்னார். பிறகு, கோழி மீது ஆராய்ச்சி செய்கிறேன் என கூறி அப்பாவை சமாதானம் செய்தார்.

ஒரு பெட்டியை லயோனல் திறந்து பார்க்க நினைத்தார். ஆனால் அதைப் பார்க்க ஜெஃப்ரி அனுமதிக்கவில்லை. அப்போது அவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தார். அப்பெட்டியில் பாலுறவு மாத இதழ்களும், ஜெஃப்ரி வெட்டியெடுத்த நபரின் தலையும் இருந்தது. அப்போதுதான் லயோனல் தன் மகன் தொடர் கொலைகாரனாக உருவாகிவிட்டான். அவன் ஒரு குற்றவாளி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தார். ஆனால் மகனைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு அவனது கைகளில் ரத்தக்கறை படிந்துவிட்டது.     

 

 

 

 


கருத்துகள்