பழிக்குப்பழி குணம் கொண்ட கான்ஸ்டபிளுக்கு சவால் விடும் தொடர் கொலைகாரர்! கூமன் - மலையாளம்

 















கூமன்

மலையாளம்

இயக்கம் ஜீத்து ஜோசப்

நடிப்பு – ஆசிஃப் அலி, ரமேஷ் திலக்

தன்னை அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டரை பழிவாங்க நினைக்கும் கான்ஸ்டபிள் ஒருவரின் கதை.

காவல்துறையில் இயங்கும் பலரும் உடலில் ஒரு வித திமிருடன் திரிவார்கள். அனைத்து விவகாரங்களிலும் தங்களின் கருத்து முடிவாக இருக்கும் என நினைப்பவர்கள். இந்த நிலையில் இப்படி இருக்கும் நாயகனை (கிரி சங்கர்) சிலர். தேவையில்லாமல் பகைத்துக்கொண்டு சில வார்த்தைகளை சொல்லிவிடுகிறார்கள். அதனால் அவன் அவர்களை தனது அதிகாரத்தை வைத்துக்கொண்டு பழிவாங்குகிறான்.

சாதாரண மனிதர்களுக்கு இப்படியென்றால்,  புதிதாக அலுவலகத்திற்கு வரும் இன்ஸ்பெக்டர் ஹரிலால் (பாபுராஜ்) அவனை உதாசீனப்படுத்துகிறார். ஒருமுறை ஊரில் நடக்கும் கபாடி போட்டியில், அரசியல்வாதி ஒருவனை பழைய பகையில் பழிவாங்க நாயகன் நினைத்து அடிக்கிறான்.அ ப்போது இன்ஸ்பெக்டர் அவனைப் பிரித்துவிட நினைத்து தள்ளிவிட சேற்றில் விழுந்துவிடுகிறான் நாயகன்.

அதை ஊரே பார்த்து சிரிக்கிறது. வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புகிறது. இதனால் இன்ஸ்பெக்டரின் மீது இருக்கும் கோபம், வன்மமாக மாறுகிறது. இன்ஸ்பெக்டரை பழிவாங்குவதற்கு நாயகன் திருட்டை வழியாக தேர்ந்தெடுக்கிறான். ஆனால் இப்படி தேர்ந்தெடுக்கும் வழியே அவனுக்கு எப்படி பிரச்னைகளை கொண்டு வருகிறது என்பதே முக்கியக் கதை. அடுத்து இதில் வயதான, கடன் பிரச்னை உள்ளவர்கள் தூக்கிலிட்டு தற்கொலை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடக்கிறது. இதன் பின்னால் உள்ளவர்கள் கான்ஸ்டபிளான நாயகன் செய்த திருட்டு பற்றிய வீடியோக்களை அவனுக்கு அனுப்பி மிரட்டுகிறார்கள்.

தொடர் கொலைகாரனை நாயகன் கண்டுபிடித்தானா, இல்லையா என்பதுதான் கதையின் இறுதிப்பகுதி.

படத்தின் கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. கதையை நகர்த்திச் செல்வதே, ஆசிஃப் அலியின் (கிரி சங்கர்) சொல் பொறுக்க முடியாத குணமும், பழிவாங்கும் வன்ம குணமும்தான். அந்த குணத்தை வைத்து அவர் இன்ஸ்பெக்டரை பழிவாங்க முடிவு எடுக்க நினைப்பதும், அதை செயல்படுத்துவதும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

இறுதிக்காட்சியில் யார் அனைத்துக்கும் காரணம் என்று தெரியும்போது சற்று அதிர்ச்சி ஏற்படுகிறது. அதை படத்தின் இறுதிவரையில் வெளிப்படுத்தாமல் இருந்தது இயக்குநரின் சாமர்த்தியம்தான்.

படம் நிதானமாக நகர்கிற படம்தான். மெல்ல தனது பாதைக்கு வந்து சென்று சேரும்போது  ஆசிஃப் அலியைப் போலவே உண்மையை அறிவதற்கான வேகத்தை நாமும் அடைகிறோம். 

தாந்த்ரீக முறைகளை ஓரளவுக்கு புரிய வைக்க முயல்கிறார்கள். எடுத்துக்கொண்ட மையக்கருத்திற்கு பொருத்தமான காட்சிகள், தனிப்பட்ட நிலையில் சவாலை எதிர்கொண்டால் மட்டுமே இயங்கும் நாயகன் எப்படி அதை சாதிக்கிறான் என்பதே கதையில் முக்கியமானது.

படத்தில் திருடனாக (மணியன்) வருபவர் – ஜாஃபர் இடுக்கி நன்றாக நடித்திருக்கிறார். அவர் பிடிபட்டு போலீஸ்காரர்கள் அடித்து உதைக்கும்போதும் ஆசிஃப் அலியைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், ஆசிஃப் அலி அந்த  நொடியில் அவரைப் பார்க்கும் பார்வையும், கண்ணீர் விடுவதும் சிறப்பான காட்சி. படம் தொடங்கியதிலிருந்தே சவால்களை முக்கியமாக எடுத்துக்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க ஆசிஃப் அலி எடுக்கும் முயற்சிகளை சிறப்பாக இயக்குநர் அடையாளப்படுத்திவிடுகிறார். எனவே, அதில் பழுதில்லை.  பழிவாங்கும் குணம்தான் அவருக்கு  சிக்கலாக வந்து முடிகிறது. லஷ்மி என்ற பாத்திரத்தில் நடித்துள்ள ஹன்னா ரெஜி ஜோஷிக்கு திரையில் இடம் குறைவு என்றாலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதில் குறை வைக்கவில்லை. முக்கியமான திருப்புமுனை பாத்திரம்.

பழி வாங்க திருட்டு கூட ஆயுதமே…

கோமாளிமேடை டீம்

 

 

 

 

 

 

 

 



கருத்துகள்