வெறுப்பை, குரோதத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சித்திரங்கள்! கொமோரா - லஷ்மி சரவணக்குமார்

 




கொமோரா நாவல்

கொமோரா - லஷ்மி சரவணக்குமார்






கொமோரா

லஷ்மி சரவணக்குமார்

கிழக்கு பதிப்பகம்

 

வாழ்க்கையில் துயரம், அவமானம், துரோகம் ஆகியவற்றை மட்டுமே சந்தித்து வளர்ந்த கதிர் என்ற இளைஞனின் வாழ்க்கைப்பாடே கதையின் முக்கியமான மையம்.

கம்போடியாவில் நடைபெற்ற கம்யூனிச படுகொலைகளை பின்னணியாக வைத்து நாவல் எழுதப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்துவரும் கோவிந்தசாமி, உணவகம் ஒன்றை நடத்துகிறார். ஆனால் கம்போடிய உள்நாட்டு புரட்சிப்படை போரில் வெற்றிபெற, வெளிநாட்டு மக்கள் அனைவரும் விசாரணை என்ற பெயரில் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதில் இருந்து தப்பி மீண்டு வரும் அழகர்சாமி என்ற சிறுவன் என்னவானான், அவனது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பது கிளைக்கதை.

நாவலில் கதை நடைபெறும் இடம், நிகழ்ச்சி எல்லாமே முன் பின்னாக அமைந்துள்ளது. ஆனால் படித்து முடித்தபிறகு அனைத்துமே மனதில் கோவையாக கோத்துக்கொள்ளலாம்.

நாவலில் வரும் பல்வேறு விஷயங்கள் வாசிப்பவர்களை தீவிரமாக அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. கதிர், கிறிஸ்துவ விடுதியில் வல்லுறவு செய்யப்படுவது, பசியால் கோழி திருடி கடுமையாக அடிக்கப்படுவது, அப்பாவால் வல்லுறவு செய்யப்படுவது, பள்ளியில் மாணவனைத் தாக்குவது, விபச்சார தரகராக மாறுவது, கஞ்சாவை சிறைக்குள் விற்பது, செல்வத்தின் கழுத்தறுபட்ட நிகழ்ச்சியை பார்ப்பது, வாயில் நீர் ஊற்றுவது,  என நாவலில் நடைபெறும் செயல்கள் அனைத்துமே சற்று பதற்றம் தருபவைதான். பலதும் சாதாரண உலகிற்கு தெரிந்தும் தெரியாதவைதான்.

நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் அனைத்துமே வலுவானவை. விடுதி பராமரிப்பாளரான ரோஸி, சுப்புராஜின் மனைவி சுதா, வியர்வை மணக்கும் பேச்சி, ராணி, மீனா, காதலி சத்யா, முருகனின் மனைவி சக்தி என இவர்கள்தான் கதிரை இயக்குகிறார்கள். புத்தி சொல்லுகிறார்கள். அவனை துயரத்திலிருந்து தேற்றுகிறார்கள்.

கதிர் – சத்யா காதல் கதையில் பாதி படிக்கும்போதே கதையின் துயர முடிவு தெரிந்துவிடுகிறது. சாதி சார்ந்த இரு வீதிகளுக்குமான குரோதம் முதலிலேயே எழுத்தாளர் சொல்லிவிடுகிறார். அப்புறம் காதல் எங்கே ஈடேறப்போகிறது?

 கொமோரா நாவல், மனித வாழ்க்கையில் வன்முறை, தண்டனை, மன்னித்தல் ஆகியவற்றை தீவிரமாக பல்வேறு வகையான கதாபாத்திரங்களின் வழியே ஆராய்கிறது. உண்மையில் கதிர், ரோஸி ஆன்ட்டி மூலம் கிருபா என மாறியிருந்தால் நிலைமை வேறாக இருக்கும். ஆனால் பைபிளில் உள்ள ஏசுவின் வசனங்களைப் படித்து மனப்பாடம் செய்து பரிசு பெற்றவன், கீழ்மையில் தேய்வதும், உழல்வதும் தனது நிலையை அவன் அப்பாவுடன் ஒப்பிட்டு கொலை செய்ய முடியாமல் தடுமாறுவதுமான காட்சி திறம்பட எழுதப்பட்டுள்ளது.

ஆன்ட்ரூ சாமியின் குரல் கதைக்குள் வருவது மறுபடியும் ரோஸி ஆன்ட்டியின் இயல்பில்தான். அவர் கதிர் செய்யும் செயல்களை கைவிடுமாறு கூறுவதில்லை. ஆனால் அவன் தன்னை உணரவேண்டும் என நினைக்கிறார். அதையே கூறுகிறார். செய்யும் விஷயங்களை உளப்பூர்வமாக உணர்ந்தால் நிறைய விஷயங்களை செய்யமுடியாத குற்றவுணர்ச்சி ஏற்படும் என்பதுதான் அடிப்படையான விஷயம்.   

கதிர் வன்முறை வழியாக தன்னை உணர கடந்துபோக நினைக்கிறான். புனிதராகவெல்லாம் ஆகவில்லை. தன்னை அவன் வெளிப்படையாக முன்வைப்பது அவன் சந்திக்கும் பெண்களான சுதா, பேச்சிக்கு கூட அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவகையில் உடலுறவு என்பதை அவன், தன்னை உணரும் செயலாக நினைக்கிறான். ஆனால் தீ எரிய அதில் நெய் வார்ப்பது போலத்தான் உடலுறவில் ஈடுபட ஈடுபட அந்த எண்ணம் நெருப்பாய் உடலைத் தகிக்கிறது.

இறுதிப்பகுதியாக கம்போடியாவில் சென்று படுகொலை நடந்த இடங்களை அவன் சுற்றிப்பார்த்து தனது முன்னோர்களை நினைத்து கண்ணீர் சிந்துவதோடு நாவல் நிறைவு பெறுகிறது. 380 பக்க நாவல். படிக்கத் தொடங்கினால் குற்ற உலகின் ஈர்ப்பினால் வேகமாக படிப்பீர்கள். கதிரை அவனது வாழ்வை நேரடியாக பார்க்கும் இயல்பில் எழுத்தாளர் ல.ச.கு எழுதியிருக்கிறார்.

துயரமுற்ற ஆன்மாவின் வாதை

கோமாளிமேடை டீம்

 வேறு விமர்சனங்கள்....

 https://dineshrajeshwari.blogspot.com/2018/03/blog-post_38.html

https://www.yaavarum.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/

நூலை வாங்க..

https://www.amazon.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-Tamil-%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-ebook/dp/B087QQ6BKN

கருத்துகள்