மாயத்தன்மையும் வசீகரமும் கொண்ட சிறுகதைகள் - சரீரம் - நரன்- சால்ட் பதிப்பகம்

 




சரீரம் -நரன்- சால்ட் பதிப்பகம்







சரீரம்

நரன்

சிறுகதைகள்

சால்ட் பதிப்பகம்

நன்றி – ஆலிவர் ஜென், திருவண்ணாமலை

 

2019ஆம் ஆண்டு வெளியான சிறுகதைகள். சரீரம் என்ற இத்தொகுப்பில் பதினோரு கதைகள் உள்ளன. நூலின் வடிவமைப்பு, கட்டமைப்பு மிகவும் கச்சிதமாக புதியதாக உள்ளன.

 அனைத்து சிறுகதைகளும் மாயத்தன்மை கொண்டுள்ளன. கதைகளை வாசிப்பவர்கள் அதிலுள்ள மாய வசீகரத்தில் இழுக்கப்படுகிறார்கள். நூலை முழுமையாக படித்து முடிக்கும் வரை அதிலிருந்து மீள முடிவதில்லை.

நூலின் முதல் கதையிலும், அமரந்தா எனும் கடைசிக்கு முந்தைய கதையிலும் அமரந்தா பாத்திரம் வருகிறது.  உடல் எனும் முதல் கதையில் சங்கரன் பார்த்த அக்காவின் உடல் எப்படி அவனை பித்து பிடிக்க வைக்கிறது என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

அமரந்தா கதையில் அவளுக்கு எப்படி உடலே பெரும் பாரமாக மாறுகிறது என்று ஆசிரியர் காட்டியிருக்கிறார்.  அமரந்தாவின் தோழன் அபு அவளின் கை பற்றி அவளோடு சென்னை பயணப்படும் நிகழ்ச்சி, கதைக்குப் பொருத்தமானதாக அழகாக இருந்தது. அந்த காட்சியை அப்படியே காண்பது போல இருக்கிறது. இரண்டு கதையில் வரும் அமரந்தாவுமே பிறரது மனதை ஆழமாக  உள்ளே பார்ப்பவர்களாக இருக்கிறார்கள்.

தொகுப்பில்  வாரணாசி சிறுகதை, சற்று தனித்துவமானது. பெண்ணின் சுதந்திரத்தை யாரும் கொடுக்கவேண்டியதில்லை. உடலின் பிரச்னைகளை சொல்லி தள்ளி வைக்காமல் பெண்ணை, அவளாக இருக்க விட்டாலே நல்லது என சொல்கிறார் ஆசிரியர். பூரணி கணவரது இறப்பின் வழியாகவும் பயணம் வழியாகவும் அடையும் சுதந்திரமும் உள்ளக் கிளர்ச்சியும் அற்புதமான ஒன்று. பூரணியின் மனநிலையை படிக்கும் வாசகரும் அடைகிறார் என்பதே முக்கியமானது.

யேசு, தேடல், சிறை ஆகிய மூன்று கதைகளும் விபரீதமான கர்மா ஒன்றை இலக்கைக் கொண்டு பயணிப்பது போலவே கதை நகர்கிறது. யேசு கதையில், முருகனை கைது செய்ய காவல்துறை முயல்கிறது. அதற்கு பயந்து அவன் கேரளத்திற்கு தப்பியோடுகிறான். ஆனாலும் இறுதியில் சொந்த ஊருக்கு வந்து அதுவும் நண்பனால் காட்டிக்கொடுக்கப்படுகிறான். ஏறத்தாழ அப்படியே யேசுவின் கதைதான். ஆனால் இதில் துரோகம், அவநம்பிக்கையும், கைவிடுதலும் புதிது. அன்றை யேசுவுக்கு படுக்கையாக சிலுவை என்றால், இங்கு  தெருவில் நிலம் படுக்கையாக துப்பாக்கித் தோட்டா, யேசுவின் உடலைத் துளைத்த ஆணியைப் போலாகிறது.

சண்முக கனிக்கு ஏற்படும் சபலம் எப்படி பல்லாண்டுகளாக அவள் கணவன் சமுத்திரம் மூலம் சிறுவனின் மனதில் ஏற்பட்ட வன்மத்தை தீர்க்க உதவுகிறது என்பதை க் காட்டுகிற சிறுகதை தேடல்.

கோபம் பழிக்குப்பழி வன்மமாக மாறினால் எத்தனை பேரின் வாழ்க்கையை அழிக்கிறது என்பதை தேடல் கதை காட்சிகளாகவே காட்டுகிறது. இரண்டு அறைகளிலும் அழுகைச் சத்தம் கேட்கிறது. உண்மையில் குழந்தையின் அழுகைதான் படிக்கும்போது நம் காதில் கேட்கத் தொடங்குகிறது. அதுதான் அழுகைதான் மனதில் பயமூட்டும்படி மெல்ல கசிந்து ஒலியின் அளவு கூடிக்கொண்டே வருகிறது.  

 சாதியில் தாழ்ந்த ஏழை ஒருவனின் மீது பணக்காரன் கொள்ளும் அசூயையும், கோபமும் அதற்கு எதிர்வினையாற்றத் துணிந்த ஏழையின் வாழ்க்கை எப்படி என்றென்றைக்குமாக குலைத்து போடுகிறது என்பதைச் சொல்லும் சிறுகதை, சிறை.

ஆதரவில்லாத பணபலம் இல்லாத எளியவனை அரசும், அதிகார வர்க்கமும் எப்படி சதுரங்க காய்களைப் போல நகர்த்தி காரியங்களை சாதித்துக்கொள்கிறார்கள். இறுதிவரை ஏழையின் வாழ்க்கை எப்படி தலைதூக்க முடியாமல் நசிந்து போகிறது என்பதற்கு லத்தி சத்தமே சாட்சி.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்