ஊரே மிரளும் கனி, பாலுவாக மாறுவதற்கு காரணமான மருத்துவக் காதலி! - பாலு - கருணாகரன்

 














பாலு

இயக்கம் கருணாகரன்

இசை

பவன், ஷிரியா சரண், சுனில், ஜெயசுதா, பிரம்மானந்தம்

 

டெல்லியில் நீங்க என்ன செஞ்சுட்டிருந்தீங்க என கேட்கும் டான் டைப் கதை. ஹைதராபாத்தில் பூக்கடை வைத்து ஹோட்டல்களுக்கு பூ விற்றுக்கொண்டிருக்கும் பாலுவைக் கொல்ல டெல்லியில் இருந்து வரும் மாஃபியா டான் கான் பாய் முயல்கிறார். அவரும், உள்ளூர் தாதா நாயுடம்மா என்பவரும் இணைந்து பாலுவை கொல்ல நினைக்கிறார்கள். ஏன் இந்த வன்மம், பழிவாங்க நினைக்கிறார்கள் என்பதே முக்கியக் கதை. அவன் வீட்டிலுள்ளவர்கள் யார் என்பதையும் இயக்குநர் நிதானமாக கூறுகிறார். படத்தின் காட்சிகளை மணிசர்மா இசையால் தாங்கியிருக்கிறார். 

கனி, பாலு என இரண்டு பாத்திரம் இரண்டிலும் பிஎஸ்பிகே கலக்கியிருக்கிறார். முதல் காட்சியில் சுனிலுடன் பண்டு பாத்திரங்களுடன் வரும்போதே வசீகரிக்கிறார். பிறகுதான், அங்குள்ள தாஸ் என்பவரின் அம்மா போட்டோவை கடையில் வைத்து தண்டல் வசூலிப்பதை தடுக்கிறான். அனைத்தையும் நுட்பமாக செய்து நாயுடம்மா குழுவை ஏமாற்றுகிறான். ஏமாற்றும் பணத்தை அங்குள்ள சந்தை ஆட்களுக்கே கொடுக்கிறான். அந்த சந்தைப்பகுதி யாருடையது, ஏன் அங்கு ரவுடிக்கள் தண்டல் வசூலித்து வியாபாரிகளை மிரட்டுகிறார்கள் என்பது ஃபிளாஷ்பேக் போகவேண்டிய கதை.

ஷிரியா சரண்(பிரியா), பவன்(பாலு) காதலை விட ஃபிளாஷ்பேக் காதல் கதை (கனி, இந்து) இயல்பாக நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. கனியைப் பொறுத்தவரை கான் பாய் சொல்லும் ஆட்களைக் கொல்கிறார் என்றாலும் கூட அதெல்லாம் அவருக்கு சோறுபோடும் செஞ்சோற்று கடன் சார்ந்துதான். ஆனால் தான் கொல்லும் நபர்களை நினைத்து சிலசமயம் அவர் வருத்தப்படுகிறார். 

தன்னைப் போல பசியில் தடுமாறும் சிறுவர்களுக்கு உடனே என்ன செய்வதென தெரியாமல் கையிலிருக்கும் பணத்தை அப்படியே கொடுத்து விடுகிறார். இந்த காட்சிகள் சிறப்பாக உள்ளன. அடுத்து, தான் நேசிக்கும் பெண்ணை (இந்து) கொல்ல சென்று அவரின் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்து அவளைக் கொல்லாமல் விடும் காட்சி… பவன் கல்யாண் சிறப்பாக நடித்துள்ளார். நேகா ஓபராயும் இந்து பாத்திரத்தில் முதலில் பயந்து பிறகு தைரியம் கொண்டு நடித்திருக்கிறார். 

பவன் பேசும் சில வசனங்களும் கேட்க நன்றாக இருக்கின்றன. ரயில்வே ட்ராக்கில் தற்கொலை செய்துகொள்ள வரும் நாயகிக்கு(இந்து) சொல்லும் தைரிய வார்த்தைகள், ஷிரியா சரண் பவனின் போனை உடைத்து கீழே போட்டபிறகு பவன் பேசும் வசனம் திரும்ப நினைவில் நிற்பவை. எளிமையானவைதான். ஆனால் யோசித்தால் சிறப்பாக இருப்பதாக தோன்றுகிறது. இதே படத்தை சற்றே மாற்றி ஸ்டைலாக இருக்கும்படி பவனுக்கு உடைகளை கொடுத்து எடுத்தால் பஞ்சா (இயக்கம் - விஷ்ணுவர்தன்)என்ற படம் ரெடி. 

காதலிக்காக….

கோமாளிமேடை டீம்



கருத்துகள்