அல வைகுந்தபுரத்தின் தொடர்ச்சியாக கதையை உருவாக்கினால்... தமாக்கா - ரவிதேஜா, ஶ்ரீலீலா

 















தமாக்கா

ரவிதேஜா, ஶ்ரீலீலா, தணிகெலா பரணி

பின்னணி இசை, பாடல்கள் – பீம்ஸ் சிசிரிரோலியோ


பீப்பிள்ஸ் மார்ட் எனும் நிறுவனத்தின் தலைவர் இயக்குநர், புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். அப்போது, அவர் கலந்துகொள்ளும் நிறுவன சந்திப்பில் தான் இரண்டு மாதங்கள்தான் உயிருடன் இருப்பேன் என கூறிவிடுகிறார். இதனால் அவரது நிறுவனத்தை வாங்க ரௌடி தொழிலதிபர் முயல்கிறார். அவரது முயற்சியை பீப்பிள்ஸ் மார்ட் நிறுவனத்தின் தலைவரின் மகன், ஆனந்த் சக்ரவர்த்தி தடுக்க நினைக்கிறார்.  இவரைப் போலவே உருவத்தில் உள்ளவர் ஸ்வாமி. இவர் டயப்பர் நிறுவனத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வேலை தேடி வருகிறார். ஸ்வாமிக்கும், ஆனந்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே கதை.

அல வைகுந்தபுரம்லோ படத்தில் வரும் பண்டு எனும் அல்லு அர்ஜூன் பாத்திரத்தை யோசித்துக் கொள்ளுங்கள். அவர் பிறந்த இடம் வேறு. ஆனால் வாழும் இடம் வேறு. இரண்டு இடங்களிலும் அவருக்கு பாசம் வேண்டும். அவர் யாரையும் விட்டுக்கொடுக்க முடியாது. அதே பாத்திரத்தைத்தான் ரவிதேஜா எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். அதிலும் அல வைகுந்தபுரத்தில் வரும் நடிகர்களையே திரும்ப நடிக்க வைத்து அதே அதிர்வை மனதில் உருவாக்க நினைத்திருக்கிறார்கள். ஆனால் அப்படியேதும் உருவாகவில்லை.

படத்தில் ஈர்ப்பான விஷயம் ரவிதேஜா மட்டுமே. உன்கிட்ட இருக்கிற வில்லன் வெளியே வந்தா எனக்குள்ள இருந்து ஹீரோ வெளியே வருவான் எனத்தொடங்கும் முதல் ஃபைட் தொடங்கி அவரின் மாஸ் ராஜ்யம்தான். இதற்கு ஏற்ப, இசையை அனுபவித்து கொடுத்திருக்கிறார் பீம்ஸ் சிசிரிரோலியோ.. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ரவிதேஜாவின் படத்திற்கு இசை அமைக்கிறார். சும்மாவா… இசை வாத்தியங்களை அடித்து நொறுக்கியிருக்கிறார். பாடல், பின்னணி இசை என எல்லாமே செம மசாலா… மாஸ் மாஸ் ராஜா என வரும் நாயக துதி பாடல் வரிகள் எல்லாமே பவர் பன்ச்சாக உள்ளன. நடிகரின் ரசிகனாக இசை அமைப்பாளர் இருந்தால் எப்படி இருக்கும் பாடல்கள் என்பதற்கு, இந்த படத்தின் ஆல்பமே சாட்சி.

ஶ்ரீலீலாவுக்கு ஆக்சன் ஹீரோ படத்தில் என்ன வாய்ப்பு இருந்துவிடப் போகிறது? எனவே பாடல்களில் ஆடுவதன் மூலமே மனசை சுண்டி இழுக்கிறார். ஶ்ரீலீலாவை விட அவரின் அப்பா ராவ் ரமேஷ்,  ட்ரைவரான ஹைப்பர் ஆதிக்கு நடிக்க நகைச்சுவை செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.

 

இரு குடும்பத்திற்கு ஒரே பிள்ளை என வளர்த்த குடும்பம்,  சில ஆண்டுகள் வளர்ப்பு பிள்ளையாக பார்த்துக்கொண்ட குடும்பம் என ஒரு கான்செப்ட் சொல்லுகிறார்கள். இதை ஒருவர் நடைமுறையில் எப்படி காப்பாற்றுவது என தெரியவில்லை. ஆனால் இந்த கான்செப்டை வைத்து குடும்ப சென்டிமெண்ட் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் அதை ஏற்றுக்கொள்ளலாம்.

படத்தில் பெரிய முரண்பாடுகளோ, திருப்பங்களோ கிடையாது. ஜேபி என்பவரைத் தவிர்த்து இன்னொரு எதிரி இருக்கிறார் என சொல்வதற்கு முன்னரே, விவேக் ஆனந்தின் இடத்தைப் பிடிக்க அவரது சித்தப்பா மகன் முயல்வான் என்பதை யூகிக்க முடிகிறது.

இறுதியாக, பேசியே தனது தம்பியை திருத்துவது நம்ப முடியாத காட்சி. இருந்தாலும் அவர் சித்தப்பா மகனை தனது குடும்பம் என கூறுகிறார். கூடவே, அவர் இதுவரை தம்பிக்காக செய்த செயல்களை அவரது வளர்ப்பு அப்பா எடுத்துச்சொல்ல படம் நிறைவடைகிறது.

படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் பலவும் மேஜிக்தான். லாஜிக் தேடாதீர்கள். அப்படித்தான் இருக்கும். இருந்தாலும் டேபிள் துணியை விசிறி ரௌடிகளை பந்தாடுவது நம்பவே முடியவில்லை சாமி…. படத்தினை தயாரித்த பீப்பிள் மீடியா பேக்டரியின் லோகோதான் படம் நெடுக வருகிறது. நாயகனின் நிறுவனமே பீப்பிள் மார்ட்தான். சிறந்த விளம்பரம்...

ரவிதேஜாவின் ரசிகர்களுக்காக…

கோமாளிமேடை டீம்

Directed byTrinadha Rao Nakkina
Written byPrasanna Kumar Bezawada

கருத்துகள்