தனித்தீவில் பனிரெண்டு பணக்காரர்களுடன் இறுதி விருந்து - தி மெனு

 















மெனு

ஆங்கிலம்

தனியாக ஒரு தீவு. அதில் ஹோவர்தன் எனும் புகழ்பெற்ற உணவகம் உள்ளது. அதனை நடத்தும் சமையல்கலைஞர் பனிரெண்டு ஜோடிகளை  தனது உணவகத்திற்கு விருந்திற்கு அழைக்கிறார். விருந்து நாள் முழுக்க நடைபெறுகிறது. அதில் விருந்தினர்கள் சந்திக்கும் பல்வேறு ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும்தான் கதை.

ஒரு உணவை நாம் சாப்பிடுகிறோம், ருசிக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிற படம், தீவிரமான தொனியில்  காட்சிகளைக் கொண்டிருந்தாலும் அவல நகைச்சுவையை அடிப்படையாக கொண்டது.

ஒருவருக்கு 1250 டாலர்கள் என்ற கட்டணத்தை ஏற்றுக்கொண்டுதான் அங்கு பலரும் வருகிறார்கள். அவர்கள் பலருமே தாங்கள் சாப்பிடுவது பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள். அதாவது சாப்பாடு பற்றிய கவனம் குறைந்தவர்கள், அல்லது அறவே கவனம் இல்லாதவர்கள்.

சமையல் குழு, தலைமை சமையல்காரரின் கைத்தட்டலுக்கு உடல் விறைத்து பிறகு இயல்பாக வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு ராணுவக்குழு போலவே இயங்குகிறார்கள். அப்படி ஒரு கச்சிதம்.

படத்தில் வரும் கைதட்டல் ஒருகட்டத்தில் ஹிப்னாடிசம் போல நமக்கும் வேலை செய்வதாக தோன்றுகிறது. படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களையும் விட இயல்பாக இருக்கும் ஒரே பாத்திரம், மார்கட் எனும் எரின்தான். இவரின் பாத்திரம் பற்றிய சஸ்பென்ஸ் ஒன்றை படம் பார்க்கும் யாவரும் இறுதியாக அறிவார்கள். அது படத்தின் போக்கிற்கு முக்கியமானது. ஆனால் அந்த பெண்ணிடம் உள்ள ஏதோவொன்று தலைமை  சமையல்காரரை சங்கடப்படுத்துகிறது. அவர் அந்த பெண்ணை அழைத்து பேசுகிறார்.  நீ யார் என்ற கேள்வியை அவர் அந்த பெண்ணிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

சமையலை அடிப்படையாக கொண்ட படம் என்றாலும் உளவியல் ரீதியாக இந்த படம் பார்வையாளர்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. உணவு முக்கியமா அல்லது அதன் மேல் செய்யும் அலங்காரம் முக்கியமா? செயல்கள் முக்கியமா அல்லது அதைச் செய்யும் மனிதர்கள் முக்கியமா? உண்மையைப் பேசாமல் மனிதர்கள் ஏன் பாசாங்கிற்கு பழகிக்கொள்கிறார்கள்? ஒரு மனிதன் பணக்காரன் என்பதால் பிற மனிதர்களை எளிதாக அவமதிக்கலாமா, தனது விருப்பத்தை பிறர் மேல் திணிக்கலாமா? வாழ்க்கையில் நாம் தேடுவது என்ன, தேடுவதில் நம்மை, இயல்பை தொலைத்து விடாமல் இருக்க முடிகிறதா?

இதெல்லாம் படம் முடிந்தபிறகு எனக்கு நானே யோசித்த விஷயங்கள்…. படம் மேற்சொன்ன கேள்விகளை காட்சி ரீதியாக மனதுக்கு நெருக்கமாக கேட்கிறது. இதன் காட்சிரீதியான குரலை எளிதாக அலட்சியப்படுத்த முடியாது.

உணவகத்தில் இருக்கும் மனிதர்களின் அணிவகுப்பே வேறுபட்ட ஒன்று. ஒருவர் வயதான தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி. இந்த தொழிலதிபர் மகள் போன்ற பெண்ணுடன் சென்று உணவகத்தில் உணவருந்தும் புகைப்படத்தை தீவில் உள்ள உணவகத்தினர் ரொட்டியில் பொரித்துக் கொடுக்கிறார்கள். இப்படி விருந்தினர்களுக்கு வழங்கும் ரொட்டியில் அவரவர் வாழ்க்கையில்  செய்த, மறக்கவேண்டிய அல்லது மறக்க விரும்பிய விஷயங்கள் புகைப்படங்களாக உள்ளன. இதைப் பார்த்து பலரும் பதறிப்போகிறார்கள். அந்த சம்பவத்தை நினைவுகூர்கிறார்கள். தொழிலதிபரைப் பார்த்து மனைவி கேட்கிறார். அந்த புகைப்படத்தில் உள்ள பெண் யார் என்று? தொழிலதிபரால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயல்கிறார். ஆனால் அங்குள்ள பணியாளர்கள் தொழிலதிபரை தடுக்கின்றனர். நான் இதை ஹேண்டில் செய்துகொள்கிறேன் என மனைவியிடம் தொழிலதிபர் சொல்லுகிறார்.

  உடனே அங்குள்ள நிர்வாகியான பெண், எந்தக் கையால் என்று கேட்கிறார். பிறகு இடது கை, மோதிர விரல் என்று சொல்ல, சமையல் கலைஞர் தனது இறைச்சி வெட்டும் கத்தியால் தொழிலதிபரின் மோதிர விரலை தறிக்கிறார். விரலில் இருந்து நழுவும் கல்யாண மோதிரத்தை தொழிலதிபரின் மனைவியிடம் நிர்வாகியான பெண்மணி அளிக்கிறார்.

இது எடுத்துக்காட்டுக்காக..

படம் நெடுக இப்படி நிறைய காட்சிகள் உள்ளன.

உண்மையில் வாழ்க்கையை அழகுறச்செய்ய எளிய விஷயங்களே போதும். குறிப்பாக கசப்பாக இருந்தாலும் உண்மையே போதுமானது. ஆனால் அதை சிலர் ஏற்க மறுக்கும்போதுதான் பிரச்னைகள், பிளவுகள், பேரழிவுகள் ஏற்படுகின்றன.

உள்ளத்துக்கான உணவு

கோமாளிமேடை டீம்

படத்தில் காட்டப்படும் உணவுகள் பற்றிய கருத்துகளை அறிய...

https://fugitives.com/the-menu-chef-julians-meals-explained-2022-horror-film-mark-mylod/

படத்தில் காட்டப்படும் காட்சிகள், குறியீடுகள், சிறப்பு அம்சங்களை ஆங்கில வலைத்தளங்கள் விளக்கியுள்ளன. அவற்றைப் படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை படம் பாருங்கள். அவல நகைச்சுவையை அனுபவித்து பார்க்கலாம். 

கருத்துகள்