எனக்கு தெரிந்த நபர் நல்லவர் கிடையாதா? - இருளான பக்கம் கொண்ட மனிதர்கள்

 









கொலையாளிகளை  ஒருவர் புரிந்துகொண்டு அவரைப் பிடிக்க அவருக்கு நெருக்கமானவர்கள் உதவி னால் எளிதாக காரியம் முடியும். இதற்கு நாம் அணுக வேண்டியது, கொலையாளிகளின் கூட்டாளிகள் அதாவது நண்பர்கள், உறவினர்கள், அவருடன் வேலை செய்தவர்கள், காதலர்கள், மனைவி என வரையறுக்கலாம். கூடவே கொலையாளியால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் கூட இந்த வகையில் சேர்க்கலாம். இவர்களை சரியான படி விசாரித்தாலே குற்றவாளி பற்றிய கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும்.

சிறப்பாக யாரும் அறியாமல் கொலை செய்பவர்கள் தங்களை அறியாமல் செய்யும் தவறுகள் நிறையவே உண்டு. அதை உடன் இருப்பவர்கள்தான் அடையாளம் கண்டு கொலையாளிகளுக்கு கூறுவார்கள். திருத்திக்கொள்வதற்கல்ல. பொதுவாக மனித மனம் குறிப்பிட்ட பாணியில் இயங்கும். நாம் வாங்கும் பொருட்கள், பழக்கம், செய்யும் செயல்கள் அனைத்தும் குறிப்பிட்ட பாணியில் அமைந்துவிடும். எண்ணங்களை அடிப்படையாக கொண்டதே நமது செயல்பாடுகள். அதன் பிரதிபலிப்பாக நமது உடைகள், தேர்ந்தெடுக்கும்பை, பயன்படுத்தும் பொருட்கள் அமையும்.

 தொடர் கொலைகாரர்கள் தங்களின் செயல்பாட்டை பிறருக்கு அதாவது குடும்பத்தினருக்கு தெரியாமல்தான் செய்து வருகிறார்கள். கொலைமனம் தனி என்றால் அன்பு மனமும் தனிதான். குடும்பத்தில் அவருக்கான பொறுப்பை சரியாக நிறைவேற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவருக்கான தனிப்பட்ட மகிழ்ச்சியாக கொலை செய்வதைக் கொண்டிருப்பார்கள். இப்படி தொடர் கொலைகாரர் என ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டால் ஊடகங்கள் உடனே தொடர்புடையவரின் வீட்டை முற்றுகையிட்டு குடும்ப உறுப்பினர்களை அவமானப்படுத்த தொடங்குவார்கள். இது அனைத்து நாடுகளிலும் நடக்கும் பொதுவான விஷயம்தான்.

குடும்பத்தில் ஒருவர் தொடர் கொலைகாரர் என்பதே பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். யாரும் அதை எளிதாக தெரிந்துகொண்டுவிட முடியாது. காரணம். அந்தளவு அவர்களின் நடவடிக்கை இருக்கும். குடும்ப உறவுகளுக்குமே காவல்துறையின் மூலமாகவே கொலையாளி என்பவர் யார் என தெரிந்திருக்கும். பெரும்பாலும் அவர்கள் சொல்லும் வாதங்கள்,உண்மை என்றாலுமே ஒட்டுமொத்தமாகவே குற்றவாளிகளாகவே பார்ப்பார்கள். எனவே பெரும்பாலும் அவர்க்ள ஊடகங்களிடம் பேசாமல் இருப்பார்கள். சிலர் விதிவிலக்காக தான் கண்ட அறிகுறிகளை நீதிமன்றத்தில் ஊடகங்களிடம் பேச ஒப்புக்கொள்வார்கள்.  

எட்மண்ட் கெம்பரின் சகோதரி, தனது சகோதரர் இளமையில் தனது பொம்மைகளின் தலையை மட்டும் வெட்டி எறிவது, பூனையில் கழுத்தை நாசூக்காக வெட்டிக்கொல்வது ஆகியவற்றை பார்த்தார். பிறகு, அவர் தொடர்கொலைகளில் ஒருவர் கொல்லப்படும் முறையை நாளிதழில் படித்தபோது அவரது சகோதரர் நினைவுக்கு வந்திருக்கிறார். எட்மண்ட் தன்னைத்தானே கொல்வதை நாடகம் போல நடத்தி சகோதரியை அதில் நடிக்க வைத்திருக்கிறார். எட்மண்டின் கண்ணைக் கட்டி அவரை கொண்டுவந்து நாற்காலியில் அவரது சகோதரி ஆலின் உட்கார வைப்பார். பிறகு மின்சாரம் அல்லது விஷவாயு மூலம் எட்மண்ட் கொல்லப்பட்டதாக நடிப்பார்.

ஆலின் தனது சகோதரர் வாழும் அறைக்கு சென்றபோது ஏராளமான துப்பாக்கிகளை அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தார். கூடவே கைவிலங்குகளும் இருந்தன. எட்மண்ட் சிறைக்கு சென்று காப்பகத்தில் அடைக்கப்பட்டு அங்கிருந்து வெளியே வந்தவர், தன்னை ஏராளமான கேள்விகளைக் கேட்ட அம்மாவைக் கொன்றார். ஒருமுறை கெம்பரின் சகோதரி, டீச்சருக்கு முத்தம் கொடுப்பது பற்றிக் கேட்க, நான் பெண்களுக்கு முத்தம் கொடுப்பதற்கு முன்னால் அவர்களைக் கொன்றுவிடுவேன் என திகில் ஊட்டியிருக்கிறார். சகோதரி நீதிமன்ற விசாரணையில் கூறிய தகவல்கள்தான் இவை. காவல்துறையினருக்கு இதுபற்றி முன்னமே கூறியிருந்தால் உயிர்களின் இழப்பைத் தடுத்திருக்கலாம்.

அடுத்து கிரகாம் பற்றி பார்ப்போம். இவர்தான் பிணங்களை அறையில் அடுக்கி வைத்து வாழ்ந்தவர். இவரைப் பற்றிய தகவல்களை காவல்துறை சேகரிக்கும்போது பெண்தோழிகள், காதலிகள், அம்மா ஆகியோரை விசாரித்தது. இதில் காதலியான பாவ்லா சொன்ன தகவல்கள் கிராமின் மனநிலையை தெளிவாக காட்டுவது போல அமைந்துள்ள குறிப்பு எனலாம். கிரகாம், அழுகிய நாற்றம் அடிக்கும் அறையை எப்போதும் எட்டிப்பார்க்க கூடாது என பாவ்லாவிடம் கூறியிருந்தார். மேலும் அவர், பாலாவுடன் உடலுறவு கொள்ளும்போது கழுத்தை நெரித்தபடிதான் இருந்தார். சிலசமயங்களில் உடலுறவின்போது தான் மூச்சுத் திணறி இறந்துவிடுவோமோ என்று கூட பாவ்லா நினைத்திருக்கிறார். சிலசமயங்களில் போதை மருந்துகளை கொடுத்து கழுத்தில் கத்தி வைத்துக்கூட பாவ்லாவை வல்லுறவு செய்திருக்கிறார் கிரகாம். அவரின் இன்னொரு காதலியான மேரி, உடலுறவு கொள்ளும்போடு தனது கழுத்தை கிரகாம் நெரிப்பதை அனுபவித்திருக்கிறார். வீட்டின் கூரையில் பிணங்களின் சில பாகங்களை பார்த்ததாக காவல் துறையில் கூறினார். அவரது வளர்ப்பு அம்மா, கிரகாம் எழுதப்படிக்க கற்பதில் மெதுவாக இருந்தான். அவனுக்கு சரி தவறு என்பதை வேறுபடுத்தி பார்க்கத் தெரியாது என்று கூறினார். இவர் கிரகாமை இரண்டு வயது தொடங்கி ஏழு வயது வரை வளர்த்தார்.

கில்மோர் குடும்பத்தின் கதையை எடுத்துக்கொள்வோம். கில்மோர் தனக்கு பிடித்தமான பொருட்களை வாங்க நினைத்த சாதாரண மனிதர், ஆனால் வாங்குவதற்கான காசு கிடைக்கவில்லை. எனவே அதற்காகவே கோபமாகி இரண்டு பேர்களைக் கொன்றார். அப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகியிருந்தன. ஷாட் இன் தி ஹார்ட் என்ற பெயரில் கேரி கில்மோரின் கொலைகளைப் பற்றிய தகவல்களை அவரது சகோதரரே நூலாக எழுதி வெளியிட்டார். கேரி கில்மோர் சிறுவயதில் புத்திசாலித்தனமான வசீகரமான பிள்ளைதான். ஆனால் அவரது அப்பா ஃபிராங்க் காரணமாக மனநிலை சிக்கலுக்குள்ளாகி கொலைகாரரானார். கேரி கில்மோரின் அம்மா, பெஸி. ஃபிராங்கிற்கு நிறைய மனைவிகள் பிள்ளைகள் உண்டு. அதில் பெஸியும் ஒருவர்.

பெஸிக்கு பேய், பிசாசு ஆகியவற்றில் நம்பிக்கை இருந்தது.சிறுவயதில் ஓஜா போர்டு ஒன்றில் பேய்களை வரவைத்து பேசியபோது, அவரது குடும்பத்தில் பேயின் தாக்குதல் உண்டு என தெரிந்துகொண்டார். அதிலிருந்து அவரது உள்மனதில் பேய் பற்றிய பயன் இருந்தது. பெஸியின் மகன் ஃபே இந்த முறையில் பாதிக்கப்பட்டு இறந்தான். பிறகு கேரி கில்மோர் பேயால் பாதிக்கப்பட்டான என பெஸி நம்பினார். ஃபிராங், நிறைய குடித்தார். குடித்தபிறகு வீட்டுக்கு வந்து ஆசையோடு பிள்ளைகளை அடித்து உதைத்தார். அப்போதும் பிள்ளைகள் அப்பாவை விரும்புகிறேன் காதலிக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். மாற்றிச்சொன்னால் அடி உதைகள் இன்னும் அதிகரிக்கும்.  

இப்படித்தான் கேரி கில்மோர் மனதிற்குள் வன்முறை நுழைந்தது. பெஸியும் குழந்தைகளை நெருக்கமாக பாசமாகவெல்லாம் வளர்க்கவில்லை. தன்னை தொடக்கூடாது, அணைத்துக் கொள்ளக்கூடாது என கட்டுப்பாடுகளை விதைத்தார. இதனால் பிள்ளைகள் மெல்ல வீட்டிலேயே தனிமரமாக மாறினர்.  சிறை சென்று வந்தவரை மீண்டும் அவருக்கு விருப்பமான ஓவியப் பள்ளியில் சேர்த்தபோதும் அங்கு கல்வி கற்கும் நிலையில் அவர் இல்லை. குடிநோயாளியாக மாறியவர், வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கவும் துணிந்திருந்தார். தொடக்கத்தில் கல்வி மீது ஆர்வம் கொண்ட பிள்ளைதான். ஆனால் குடும்பத்தில் இருந்த நிலைமைகள் அவரை சிதைக்க, ஒருகட்டத்தில் அவர் கொண்ட கோபம், சூழல்களைப் பொறுக்க முடியாமல் தன்னைத்தானே அழித்துக்கொள்ளத் தொடங்கினார்.

சிறையிலும், காப்பகங்களிலும் அதிக நாட்களைக் கழித்தார் கேரி. சிறையில் அல்லது வெளியில் உள்ள மனிதர்களை அவரால் முன்மாதிரிகளாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அப்பாவால் காயப்பட்டு உடைந்த மனதை பிறர் மீது காட்டும் வன்முறை மட்டுமே சீராக்கும் என கேரி தவறான முடிவை எடுத்தார். அதுவே அவரது வாழ்க்கையை வீழ்த்தியது.

ஆபத்து அறியாத தோழி

சியாட்டில் கிரிசிஸ் கிளினிக். அங்குதான் ஆன் ரூல் என்ற இளம்பெண் வேலை செய்துகொண்டிருந்தார். அதாவது ரூல் தன்னார்வலராக அங்கு பணியாற்றி கொண்டிருந்தார். அவருடன் மாணவராக இருந்த இளைஞர் பேசிக்கொண்டு வேலைகளை செய்து வந்தார். இளைஞர் கிளினிக்கில் வேலை செய்தபடியே உளவியல் பட்டப்படிப்பை படித்து வந்தார். அந்த வேலைக்கு அவருக்கு சம்பளம் உண்டு. அந்த இளைஞர் நறுவிசமான ஆள். போனில் அழைப்புகளை ஏற்று பதில்களை சொல்லியபடி இருப்பார். அழைப்புகள் இல்லாதபோது பட்டப்படிப்பு நூல்களை படித்துக்கொண்டு இருப்பார். உளவியல் படிப்பை முடித்துவிட்டு சட்டக்கல்லூரி செல்வதே இளைஞரின் லட்சியம். படிப்பிலும் சோடை போகாமல் படித்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஆன் ரூலுக்கு, அந்த இளைஞன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவரை நம்பி தனது வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களையெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார். இருவருக்குமான பிணைப்பு அந்தளவு நெருக்கமாக இருந்தது. நான் அவனுடன் பேசும்போது அவன் அதை ஆர்வமாக முழு கவனம் கொடுத்து கேட்பான். எப்போதும் அசிரத்தையாக இருந்தது இல்லை என்றவர், அந்த இளைஞர் பற்றி தி ஸ்ட்ரேஞ்சர் பிசைட் மீ என்ற நூலை எழுதினார். அந்த வசீகரமான இளைஞரின் பெயர், குற்ற உலகைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அறிந்ததுதான் டெட் பண்டி. டெட் பண்டியை குற்றவாளி என காவல்துறை விசாரித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போதும் டெட், ஆன் ரூலை தனக்கு உதவி செய்ய சாட்சி சொல்ல அழைத்தார். ஆனால் ஆன் ரூலுக்கு காவல்துறை முன்வைத்த ஆதாரங்களில் குழப்பம் இருந்தது. தன்னிடம் நன்றாக பழகினான்தான் என்றாலும் வெளியில் எப்படியோ என்ற குழப்பம், நிறைய கொலைகளைப் பற்றிய ஆதாரங்களையும், பெண்களின் உடலில் பற்களால் கடித்த தடயங்களும் பார்த்தபோது ரூலுக்கு டெட் பண்டிகொலைகாரன் என உறுதியாக தோன்றிவிட்டது.

நீதிமன்றத்தில் ஆன் ரூல் தனக்காக உதவுவாள் என டெட் பண்டி நினைத்தார். ஆனால் அவள் நிலைமையை புரிந்துகொண்டாள். உண்மையில் டெட் பண்டி தான் எப்படிப்பட்டவன் என்பதை முழுக்க வெளிப்படுத்தவில்லை. அதனால் ஆன் ரூலுக்கு அவன் நல்லவன் என்ற பிம்பமே மனதில் இருந்தது. ஆனால் கொலைகளில் பெண்களின் நிலைமையைப் பார்த்தபோது டெட்டின் மீதிருந்த நம்பிக்கை உடைந்தது. அதற்குப் பிறகுதான், வழக்கில் தான் பார்த்த விஷயங்களை மையமாக வைத்து நூலை எழுதினாள். 

 

 


கருத்துகள்