பிறரது வாழ்க்கை அனுபவங்களின் வழியே துக்கத்தை மறக்கும் அகவயமானவனின் கதை! நித்தம் ஒரு வானம் -ரா கார்த்திக்

 




நித்தம் ஒரு வானம்


நித்தம் ஒரு வானம் 










நித்தம் ஒரு வானம்

இயக்கம் – ரா கார்த்திக்

பாடல் – கோபி சுந்தர்

பின்னணி தரண் குமார்

பாடல்கள் கிருத்திகா நெல்சன்

படத்தில் பாடல்கள் தனியாக தனியிசை ஆல்பம் போல இருக்கிறது. அதனால் அதை தனியாக நிதானமாக பாடல் வரிகளை அசைபோட்டு கேட்கலாம்.

அகவயமான இளைஞர் வாழ்க்கை, திருமணம் நின்றுபோனதால் எப்படி பிரச்னைகளுக்குள்ளாகிறது. அதை அவன் எப்படி எதிர்கொண்டு மீள்கிறான் என்பதே கதை.

ஓசிடி உள்ள அதிகம் பேசாத ஆள். அவனுக்கும் காதல் வருகிறது. அவனை மணக்க பெண் சம்மதிக்கிறாள். ஆனால் அவளது காதல் மீண்டும் மனதிற்குள் வரும்போது என்னாகிறது? அர்ஜூனை விட்டு கல்யாணப் பெண் தனது முன்னாள் காதலனைத் தேடி செல்கிறாள். இந்த நேரத்தில் அர்ஜூன் கிடைத்த கல்யாண வாழ்க்கையும் கைவிட்டு போகிறது என நொந்துபோகிறான். அந்த மன அழுத்த த்திலிருந்து தப்ப உறவினரான மருத்துவரின் உதவியை நாடுகிறான். அவர் அவனுக்கு இரண்டு ஜோடியின் கதைகளைக் கொடுக்கிறார். அந்த கதைகளை படிக்கிறான். அதில் இறுதிப்பக்கங்கள் இல்லை. அதைத் தேடி மேற்குவங்கம், இமாச்சல் பிரதேசம் என இரு மாநிலங்களுக்கு பயணிக்கிறான். உண்மையை அவன் கண்டுபிடித்தானா என்பதே கதை.

அசோக் செல்வன் நடித்துள்ள படம். நேர்த்தியான காட்சி அமைப்புகளால் ஆள் பார்க்க அழகாகவும் தெரிகிறார். நடிக்கவும் செய்கிறார். அப்புறம் என்ன?  சிவாத்மிகா, சிவதா, அபர்ணா பாலமுரளி, இஷா ரெப்பா அனைத்து பெண் பாத்திரங்களும் சிறப்பாக உள்ளன. அபர்ணாவுக்கு காட்சிகள் சற்று அதிகம் என்பதாலும் அவரின் உயரிய காதல் லட்சியத்தாலும் மனம் கவர்கிறார். சிவாத்மிகாவுக்கு வசனங்கள் குறைவு என்றாலும் உடல்மொழி, பார்வை வழியாகவே நடிக்கிறார்.

வீரா -  மீனாட்சி, மதி – பிரபா  என இருவரின் கதைகள்,அ தன் முடிவு தேடி அர்ஜூன் செல்கிறான். அவன் கூடவே சுபத்ரா என்ற பெண்ணும் வருகிறாள். ஒருவகையில் ஒருவனது மனச்சோர்வுக்கு நம்பிக்கை அளிக்கிற படம். அதனால் படம் தமிழ்நாடு கடந்து மேற்குவங்கம், இமாச்சல் என செல்லும்போதே நமக்கு உற்சாகமாகிறது. கதையால் அல்ல, காட்டப்படும் காட்சிகளால்….

பொதுவாக பயணம் செய்வதன் மூலம் நிறைய மனிதர்களை சந்திக்கலாம். அந்த அனுபவங்கள் நம் வாழ்க்கையை மாற்றும். பிரச்னைகளை பயப்படாமல் அணுகுவோம். இந்த வகையில் படத்தைப் பார்க்கலாம். அர்ஜூனுக்கு பிரச்னை என்பது அவன் காதலித்ததை விட அவனை காதலிப்பதாக கூறிய பெண் கைவிட்டு போவதுதான் சங்கடமாகிறது. மற்றபடி அவன் தனக்கு பிடித்தது போல வாழ்கிறான். ஓசிடி பிரச்னை அவனுக்கு இருக்கிறது. இதைதாண்டி அவனை குறை சொல்ல ஏதுமில்லை. இதனால் பயணங்களின் வழியாக அவன் கற்பது என்பது சோகங்களை தாண்டி வந்து நிகழ்காலத்தில் வாழ வேண்டும் என்பது மட்டும்தான். அதை இயக்குநர் காட்சிரீதியாக கூறியிருக்கிறார்.

இந்த படத்தை நீங்கள் பார்த்து விட்டால் தெலுங்கில் வந்த எவடே சுப்ரமணியம், மலையாளத்தில் வந்த நார்த் 24 காதம் என்ற படங்களையும் பார்த்துவிட்டால் மனநிறைவு கிடைத்துவிடும்.

காட்சி அனுபவத்திற்காக…

கோமாளிமேடை டீம்


கருத்துகள்