இரு அதிநாயகர்களை ஆட்டுவிக்கும் புத்திசாலி! - தி கிளாஸ் - மனோஜ் நைட் சியாமளன்
தி கிளாஸ்
இயக்கம்
- மனோஜ் நைட் சியாமளன்
நடிப்பு –
சாமுவேல் ஜாக்சன், ப்ரூஸ் வில்லிஸ், ஜேம்ஸ் மெக் அவோய், அன்யா டெய்லர் ஜாய்
எழுத்து,
இயக்கம், தயாரிப்பு – எம்.நைட் சியாமளன்
கிளாஸ் படம்
பார்க்கும் முன்னர் அன்பிரேக்கபிள், ஸ்பிளிட் ஆகிய படங்களைப் பார்ப்பது நல்லது. அப்போதுதான்
படத்தை நன்றாக புரிந்துகொள்ள முடியும். தி கிளாஸ் படத்தில் மூன்று பாத்திரங்கள் சந்திக்கிறார்கள்.
இவர்கள் யார், இவர்களில் யார் அதிக சக்தி வாய்ந்தவர் என்பதற்கான போட்டி நடைபெறுகிறது.
கெவின் என்ற
நபர் நான்கு கல்லூரி மாணவிகளை கடத்தி வைத்திருக்கிறார். இதை காவல்துறை அறிந்தாலும்
யார் கடத்தியது என்பதை அறியமுடியவில்லை. இதற்கு
இடையில் பாதுகாப்பு உபகரணங்களை விற்கும் கடையை நடத்தும் டுன் என்பவர், இந்த விவகாரத்தில்
உள்ளே வருகிறார். இவர் தனது உள்ளுணர்வு மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை
அடி வெளுக்கிறார். காவல்துறையில் பிடித்துக் கொடுக்கிறார். ஆனால் காவல்துறை டுன்னை
அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுகிறது. மேலும் அவரை பல்வேறு பட்டப் பெயர்கள்
வைத்து ஊடகங்கள் அழைக்கின்றன. காவல்துறைக்கு உள்ள நல்லப்பெயர், மரியாதை அனைத்துமே டுன்
செய்யும் அதிநாயகத்துவத்தால் சிதைகிறது. எனவே, அவரைக் கண்டுபிடிக்க ஆக்ரோஷத்துடன் அலைகிறது.
பலசாலி என்றாலும்
பலவீனம் என்பதும் இருக்குமே? அப்படியான ஒருநாளில் டுன், மாணவிகளை கடத்தி வைத்திருக்கும்
கெவின் என்பவனை தொட்டு அவன்தான் குற்றவாளி என்பதை அறிகிறார். ஆனால் அவருக்கு புரியாத
ஒன்று, கெவின் என்பவனை மட்டும் அவர் சமாளிக்கவேண்டி இருக்காது என்பதை..இன்னும் நிறைய
ஆட்களை குறிப்பாக பீஸ்ட் எனும் ராட்சதனை சந்தித்து சண்டை போடுகிறார்.
அந்த நேரத்தில்
அங்கு காவல்துறை வந்துவிட இருவருமே பிடிபடுகிறார்கள். அதேநேரத்தில் கல்லூரி மாணவிகள்
காப்பாற்றப்பட்டு விடுகிறார்கள்.
இருவரையும்
மனநிலை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.அ ங்கு ஆபத்தான மனநோயாளிகளை வைத்து பராமரிக்கிறார்கள்.
அங்குதான் எலிஜா என்ற நோயாளியும் உள்ளார். இவர், சக்கர நாற்காலியில் வாழ்கிறார். இவரது
சிறப்பு, புத்திசாலித்தனம்தான். இதற்கு பாதகமாக உடல் எலும்புகள் எளிதில் உடையும் இயல்புடையன.
அங்கு வரும்
பெண் உளவியல் மருத்துவர் டுன், கெவின் ஆகியோரை புரிந்து கொண்டு அவர்களின் பலவீனங்களுக்கு
ஏற்ப அறையில் அவர்களை கட்டுப்படுத்தும் அமைப்பை உருவாக்குகிறார். அவர் தனது மருத்துவ
நேர்காணல்களை நடத்தி இருவரும் சாதாரண மனிதர்கள் என்று திரும்பத் திரும்ப கூறுகிறார்.
அவர்களை அங்கேயே அடைத்து வைக்கும் திட்டத்துடன் இருக்கிறார். மனநிலை மருத்துவமனை அறையிலும்
கூட பீஸ்ட், டுன் என இருவரும் கடுமையான குரோதத்துடன் பார்த்துக்கொள்கின்றனர்.
வாய்ப்பு
கிடைத்தால் ஒருவரையொருவர் அழித்துவிட நினைக்கிறார்கள். 24 ஆளுமைகள் கெவினுக்கு உண்டு.
இந்த ஆளுமைகள் பிறழ்ந்து வருவது, கருத்துகளின் மாற்றத்தால்தான். பேட்ரிசியா என்ற பெண்தான்
பல்வேறு ஆளுமைகளை கட்டுப்படுத்துகிறார். இவரின்
ஆளுமையில் உள்ளவரான பீஸ்ட் கூட ஒருகட்டத்தில் தன்னை விட டுன் – ஓவர்சீயர் பலமுள்ளவரோ
என அச்சம் கொள்கிறார். இறுதியில் இவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து நின்று சண்டை போட்டார்களா,
சண்டையில் யார் வென்றது என்பதுதான் படத்தின் இறுதிக் காட்சி..
படத்தில்
வரும் உளவியலாளர் புத்திசாலியாக காட்டப்படுகிறார். ஆனால் அவரை எளிதில் எலிஜா ஏமாற்றுகிறார்
என்பது நம்புவதற்கு கடினமாக இருக்கிறது.
முதலில் கூறியபடி
தி கிளாஸ் படத்தின் நாயகன் எலிஜா தான். அதிநாயக சக்தியை உளவியல் பார்வையில் அணுகி ஆராய்ந்து படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதுதான்
தி கிளாஸ். படத்தில் பீஸ்ட் – டுன் மோதிக்கொள்ளும் சண்டைக் காட்சிகள் ஆச்சரியப்படுத்துகின்றன. மனதில் தோன்றும்
கருத்துகள்தான் பீஸ்டை கட்டுப்படுத்துகின்றன என்பதால் அவரை எலிஜா பேசியே தனது விருப்பத்திற்கு
கட்டுப்பட வைப்பது முக்கியமான காட்சி.
அதிக காட்சிகள்
இல்லாவிட்டாலும் கூட அமைதியாக இருந்தபடியே அனைவரையும் தான் நினைத்தபடி கட்டுப்படுத்தும்
பாத்திரமாக சாமுவேல் ஜாக்சன் – எலிஜாவாக நன்றாக நடித்திருக்கிறார். உடல் பலவீனமாக இருந்தாலும்
மன வலிமையை வைத்து தான் நினைத்த கருத்தை உலகம் முழுக்க சொல்லிவிட்டு செல்கிறார். இதை
உளவியல் மருத்துவர் இறுதியில்தான் புரிந்துகொள்கிறார். அங்குதான் எலிஜாவின் மிகச்சிறந்த பழிவாங்குதல் வெளியாகிறது.
உண்மையில்
படம் முடியும் இடத்தில்தான் தொடங்குவது போல முடித்திருக்கிறார் சியாமளன்.
ஜேம்ஸ் மெக்
அவோய் உடல் அளவில் தன்னை வெகுவாக மாற்றிக்கொண்டும்,
ஹெட்ஜ்விக்காக குழைந்தும் பேசி நடித்து ஆச்சரியப்படுத்துகிறார். மனநல மருத்துவமனை பணியாளர்
வரும்போது, பல்வேறு பாத்திரங்களில் மாறி மாறி நடிப்பது இவரின் நடிப்புத் திறனுக்கு
சான்று.
இவருக்கு
எதிராக நிற்கும் ப்ரூஸ் வில்லிசும் நன்றாகவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மூவரையும் விசாரிக்க அழைத்து வந்து அவர்களது சிறப்பு திறன் என கருதும் விஷயங்களை மெல்ல
உளவியலாளர் அதற்கான லாஜிக் சொல்லி உடைக்கும் இடத்தில் மேற்சொன்ன இரு நடிகர்களுமே நன்றாக
நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும், இசையும் படத்தின் மையக் கதைக்கு சிறப்பாக உதவியுள்ளன.
ஆட்டுவிப்பவனின்
ஆட்டம்
கோமாளிமேடை
டீம்
-------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக