போலி கொலையாளியைக் கண்டுபிடிக்கும் மர்ம கொலைகாரன்! தி மேன் ஃபிரம் டொர்னாடோ

 



















மேன் ஃபிரம் டொர்னாடோ

இயக்கம் பேட்ரிக் ஹியூகெஸ்

கெவின் ஹார்ட், வூடி ஹெரால்சன்

நெட் பிளிக்ஸ்


காமெடியை மையமாக கொண்ட சண்டைப்படம்.

குறிப்பிட்ட அழிவு ஆயுதத்தை தூண்டிவிட்டு அழிவு வேலையை செய்து காசு பார்க்க ஒரு கூட்டம் ஆசைப்படுகிறது. அதற்கு உதவும் கூலிப்படையைச் சேர்ந்த ஆள், மேன் ஃபிரம் டொர்னாடோ. இவர் நிறைய ஆட்களை சித்திரவதை செய்து விஷயங்களை கறப்பதில் வல்லவர் என இன்ட்ரோ கொடுக்கிறார்கள். ஆனால் அவர் சொல்லும் கதையும், நடந்துகொள்ளும் முறையுமே பலருக்கும் மூத்திரத்தை முட்டிக்கொண்டு வரச்செய்துவிடும் ரகத்தில் உள்ளது. இவரின் அடையாளத்தை இன்னொருவர் பயன்படுத்தி சிக்கலை ஏற்படுத்திவிட, மேன் ஃபிரம டொர்னாடோ கோபம் கொண்டு எவட்ரா நுவ்வு என துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு தனது ரெமுனரேஷனைத் தடுத்து ரெபுடேஷனைக் கெடுத்தவனை அழிக்க கிளம்புகிறார். படிக்க கதை சீரியசாக இருந்தாலும் படம் முழுக்க காமெடிதான்.

மேன் ஃபிரம் டொர்னாடோ , சீரியசான ஆள். பணம் சேர்க்கத்தான் கூலிப்படை வேலையை செய்கிறார். அதில் இடையில் புகுந்து கலாய்த்து காரியத்தை கெடுக்கும் ஆள். டெடி. இவர் ஜிம்மில் வேலை செய்யும் மார்க்கெட்டிங் ஆள். ஆனால் சொல்லும் ஐடியாக்கள் அனைத்தும் சொதப்பி வைக்க தனது நண்பரின் ஜிம் வேலையைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாதபடி போகிறது. இந்த நேரத்தில் அவரது மனைவிக்கு பிறந்த நாள் வருகிறது. அவர் சரியான வேலைக்கு போகாத காரணத்தால் மனைவி லோரி அதிருப்தியில் இருக்கிறார். அவரை பிறந்தநாளுக்காக ஓரிடத்திற்கு கூட்டிச்சென்று அசத்த நினைக்கிறார். ஆனால் போகும் அட்ரசை தவறாக புரிந்துகொண்டுவிடுகிறார். அங்கிருந்துதான் படம் வேகமெடுக்கிறது. படம் ஜாலியான படம் என்பதால் அனைத்திற்கும் லாஜிக் பார்க்காதீர்கள். மேஜிக் மிஸ் ஆகிவிடும்.  

ரணகளத்திலும் கிளுகிளுப்பாக பேசியும், உடல்மொழியிலும் நம்மை ஆசுவாசப்படுத்துகிறார் கெவின் ஹார்ட். அவர்தான் டெடியாக நடித்து நம்மை மகிழ்விக்கிறார். படம் முடிந்து இறுதியில் எழுத்துகள் வரும்போதும்  சாது மிரண்டால் சித்திக் போல காமெடி நீள்கிறது.

ஒருவர் சீரியசாக எதையும் நேர்த்தியாக செய்பவர். இன்னொருவர் எப்போதும் ஜாலியாக இருப்பவர். அத்தனையையும் கெடுத்து வைப்பவர் என்பதுதான் பெரும்பாலும் இரட்டையர் காம்போவாக இருக்கும். இதில் ஆட்கள் மாறுவார்கள். ஆனால் கான்செப்ட் ஒன்றுதான். அதேரகத்தில் அமைந்த படம்தான் இது.

உலகமெல்லாம் உள்ள கூலிப்படை ஆள்கள் வந்து  மேன் ஃபிரம் டொர்னாடோவை அடிப்பது, விமானத்தில் நடைபெறும் சண்டைக்காட்சி, நான்கு கைதிகளை டெடி விசாரிக்கும் காட்சி ஆகியவற்றை சிறப்பானதாக கருதலாம். நன்றாக எடுத்திருக்கிறார். அக்காட்சியில் நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

லட்சியத்தை அடைய ஓடு….

கோமாளிமேடை டீம்


கருத்துகள்