மனமுதிர்ச்சி அடைந்தவர்களால் குற்றங்களைச் செய்யமுடியாது!

 









குறிப்பிட்ட இடைவெளியில் ஒருவர் பிறருக்கு தெரியாதபடி குற்றங்களை செய்து வரலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அவர் வேறு வாழ்க்கையை வாழலாம். அவருக்கு மனைவி, குழந்தைகள் இருக்கலாம். விடுமுறை என்றால் காரை எடுத்துக்கொண்டு முருகன் கோவிலுக்கு போகலாம். புனித தலங்களுக்கு செல்லலாம். ஆனால் தான் செய்யும் குற்றச்செயல்கள் என்பது பாதிக்கப்படாதபடி தனியாக வைத்துக்கொண்டு இயங்குபவர்களாக இருப்பார்கள்.

வெளியில் உள்ள பல்வேறு அழுத்தங்களுக்கு பணிந்துவிடாதபடி குற்றவாளிகளின் செயல்பாடு இருக்கும். இவர்கள் தங்களின் இரக்கமில்லாத இயல்பு, கொலை செய்யும் பண்பு ஆகியவற்றை மறைத்து தனிப்பட்ட ஒழுக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதற்கு மூளையில் அவர்களுக்கென தனி கட்டுப்பாடு இருக்கிறது என விசாரணையில் கூறியிருக்கிறார்கள். இந்தக் கருத்தை 1966ஆம் ஆண்டு ரோட்டர் என்ற உளவியலாளர் லோகஸ் ஆஃப் கன்ட்ரோல் என்ற வார்த்தை மூலம் குறிப்பிட்டு வரையறை செய்தார்.

வெளி உலகத்தில் ஏற்படும் தாக்கத்திலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதில் குற்றவாளிகள் திறமையாக செயல்பட்டனர் என்பது உண்மை. குற்றவாளிகள், குற்றவாளிகள் அல்லாதோரை விட உள்மன ஆற்றல் அடிப்படையில் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு வாழ்வது பற்றிய கருத்துகளை லீஃப்கோர்ட், லாட்விக் ஆகியோர் தங்களது கருத்தாக முன்வைத்தனர். மற்றபடி லோகஸ் கன்ட்ரோல் பற்றிய தெளிவான கருத்துகள் கிடைக்கவில்லை.

பிரச்னைகளை பிறரின் பார்வையில் இருந்து பார்ப்பது என்று கூறுவார்கள். அந்த முறையில் பார்ப்பது குற்றவாளிகளுக்கு கடினமானது. அவர்களுக்கு பிறரின் வருத்தம், துயரம், இடர்ப்பாடுகள் மீது பெரிய அக்கறை இருக்காது. உணர்ச்சிகளைப் பற்றி கவலைப்படாமல் கல்லைப் போல இருப்பார்கள். சமூகம் சார்ந்த பிரச்னைகளைப் பற்றி அறிய மாட்டார்கள். அப்படி தெரிந்துகொண்டாலும் அதற்கு தீர்வு தேடுவதில் முனைப்பு காட்டமாட்டார்கள். திருடுவது ஒருவரின் இயல்பு என்றாலும் அதற்கான வாயப்புகள் கிடைப்பது பற்றியும் பேசித்தானே ஆக வேண்டும். ஒரு வீட்டிலுள்ளவர்கள் அனைவருமே வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அங்கு வீட்டை பாதுகாக்கவென யாரும் இருக்க மாட்டார்கள். சிலர் வீட்டை பூட்டிவிட்டு வேறு இடத்திற்கு வேலைக்காக செல்பவர்கள், அங்கு திரும்ப வருவதற்கு அதிக காலம் ஆகும். இதனால் திருடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. இப்படி திருடுவதற்கான வாய்ப்பு என்ற தலைப்பில் உளவியலாளர்கள் எல்.இ. கோகென், ஃபெல்சன் ஆகியோர் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை எழுதி வெளியிட்டனர்.

திருட்டு எப்படி நடைபெறுகிறது? வீட்டில் உள்ளவர்கள் அங்கு இல்லாமல் இருக்கலாம். அல்லது அந்த வீடு தனியாக திருடுவதற்கு வசதியான தன்மையில் அமைந்திருக்கலாம். உதாரணமாக வீட்டின் அருகே மரம் வளர்ந்து நிற்பது, நாய் இல்லாமல் இருப்பது, லாக்கருக்கான அலாரம் இல்லாமல் இருப்பது ஆகியவற்றைக் கூறலாம். இப்படி இருந்தாலும் திருட்டைச் செய்வதற்கான உத்திகளை வகுத்து திருடர்கள் சாதிக்கிறார்கள். ஒருவகையில் இது திருடர்களுக்கு மனதளவில் சவாலை தருகிறது. இதனால் உந்தப்பட்டு நடைபெறும் குற்றசெயல்கள் நிறையவே உண்டு. திருடர்கள் தங்களது தொழிலில் மெல்ல தனித்துவத்தைப் பெறுவது காலப்போக்கில் நடைபெறும் ஒன்று.

கொள்ளை, போதைப்பொருட்களை பயன்படுத்துவது, கொள்ளையடிப்பதில் காலப்போக்கில் அடையும் திறமை ஆகியவை திருடர்களுக்கு குற்றச் செயல்பாட்டில் வசீகரத்தை ஏற்படுத்துகிறது. குற்றம், தண்டனை என்றெல்லாம் அவர்களை நினைப்பதில்லை. திருட்டுக் குற்றங்களை தொடர்ந்து செய்கிறார்கள்.   

இன்னொரு விஷயத்தைப் பார்ப்போம். குற்றம் செய்ய வாய்ப்பிருக்கும்போது கூட சிலர் குற்றங்களை செய்யாமல் இருக்கிறார்களே அதற்கு என்ன காரணம்? அதற்கும் சில கோட்பாடுகளை உளவியலாளர்கள் கூறுகிறார்கள். குற்றங்களை செய்வதற்கு துணிச்சல் தேவை. குறிப்பிட்ட நேரத்திற்குள் வேகமாக செயல்படவேண்டும். சிலர் பிறர் செய்யும் தவறுகளை வெளிப்படையாக பாராட்டாவிட்டாலும் கூட மனதிற்குள் சபாஷ் சொல்லிக்கொள்வார்கள். ஏனெனில் இவர்களால் அந்த சூழ்நிலையில் சமாளித்து குற்றத்தை அதாவது திருட்டை செய்திருக்க முடியாது. ஆனால் இன்னொருவர் சாதித்திருக்கிறாரே என்ற ஆச்சரியம் அவருக்கு இருக்கும்.

சிறுவயதில் அனைவரும் ஏதோ ஒரு விதமாக அடுத்தவரிடம் இருக்கும் பொருளுக்கு ஆசைப்பட்டிருப்போம். வாய்ப்பு கிடைத்தால் சுருட்டி ஏப்பம் விட்டிருப்போம். ஆனால் பெரியவர்களான பிறகு அந்த பழைய சம்பவத்தை நினைக்கும்போது ஒரு சங்கோஜம், கூச்சம், குற்றவுணர்ச்சி தோன்றுகிறது. ஏன்? அறம் சார்ந்த கோட்பாடுதான் இதற்கு காரணம். ஒருவர் வளர்கிறார் என்றால் உடல் மட்டுமல்ல மனமும் வளர்கிறது. அதோடு திருட்டு, கொள்ளை, பிறர் பொருட்களை அபகரிப்பது தவறு என்ற கருத்து பல்வேறு விதமாக மனதில் பதிய வைக்கப்படுகிறது. இப்படி அறக்கோட்பாடு ஒருவரின் மனதில் பதியவில்லை. அல்லது அவர் வளர்த்துக்கொள்ள இயலவில்லை. மனதளவில் வளர்ச்சி பெறவில்லை என்றால், அவர் குற்றம் செய்வதற்கு தயங்கமாட்டார். தான் செய்வது குற்றம் என்றே உணராதவரை என்ன சொல்லி திருத்துவது? பியாகெட், கோஹ்ல்பெர்க் ஆகிய உளவியலாளர்கள் இந்த சிந்தனையை உருவாக்கி எழுதினர்.


கருத்துகள்