இன்ஸ்டன்டாக மகிழ்ச்சி பெற கொலை செய்யவேண்டும்!

 











நிகழ்கணத்தில் வாழவேண்டும் என்று எனது நண்பர் சொல்லுவார். அவர் தனது மனைவி, குழந்தையோடு வாழ்வதால் துறவு நிலையில் இதைக் கூறியிருக்க வேண்டும். பரவாயில்லை. நான் அவளைப் பார்த்தேன். அழகான புட்டம் . எனவே அவளை முயன்றேன் என்று சொல்லிய கைதி வல்லுறவு செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டிருந்தார். ஒரு நகரில் ஏற்கெனவே இதுபோல நிறைய சரித்திர சாதனைகளை செய்திருந்தார். அதுவும் இல்லாமல் டிவி சேனல் ஒன்றின் விளையாட்டு நிகழ்ச்சியில் வேறு கலந்துகொண்டிருந்தார். டிவியில் முகம் பார்த்தே காவல்துறை அவருக்கு கைவிலங்கு பூட்டியது.

கேரி கில்மோரின் ஐக்யூ அதிகம். ஆனால் கூட காவல்துறையிடம் மாட்டிக்கொண்டார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, நான் எதையும் திட்டமிடுவதில்லை. சிறந்த திருடன் கிடையாது. அதிகம் பொறுமை கிடையாது. அதிகம் கோபப்படுவேன். நான் பேராசைக்காரன் கிடையாது. யோசிப்பது, திட்டமிடுவது ஆகியவற்றை பல்லாண்டுகளுக்கு முன்பே கைவிட்டுவிட்டேன். என் மனதில் நிறைய விஷயங்கள் இருந்தன என்றார் .

சைக்கோபாத்கள் பிறர் செய்யும் வன்முறையை விட கொடூரமான உறுதியான மனதோடு வன்முறையை செய்வார்கள். நிச்சயம் மகிழ் திருமேனி உருவாக்கும் வன்முறை, வல்லுறவு காட்சிகளை விட மோசமானவை அவை. கேரி கில்மோர், ஒருமுறை சிறையில் இருந்தார். அப்போது அவரது நண்பர் ஒருவரை சக கைதியான பில் தாக்கி அவரின் பணத்தை கொள்ளையடித்தார்.  இதை நண்பர் கேரி கில்மோரிடம் சொன்னார். கேரி கில்மோர், பில்லைக் கண்காணித்தார். பில் ஒருமுறை கால்பந்து விளையாட்டு ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார். கேரி கில்மோர் சுத்தி ஒன்றை எடுத்து சென்று  உச்சி மண்டையில் நச்சென இறக்கினார். இதற்காக, கேரியை தனிமையாக  நான்கு மாதங்கள் வைத்திருந்தனர்.  கேரி, தான்தான் கில்லின் கபாலத்தை பிளந்ததாக சிறையில் உள்ளவர்கள் அனைவருக்கும் தகவல் சொன்னார். இதனால் கேரியின் தண்டனை கூடியது. அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கொன்றது உண்மைதானே அதைதான் பிறருக்கு சொன்னேன் என்றார். கொலை செய்தது பற்றி சைக்கோபாத்கள் உளவியலாளர்களிடம் கூறும்போது, சாரு நிவேதிதா கீரை ஆய்வதைப் பற்றி சுவாரசியமாக எழுதுவாரே அதுபோலத்தான்  நிதானமாக சொல்லுவார்கள். அதில் ஒரு இசையைப் போன்ற லயம் இருக்கும். அனுபவித்த இன்பத்தை கூறுவது போல…

தொண்ணூறுகளில் நடந்த கதை இது. அப்போது இளம்பெண் ஒருத்தி, தனது கணவரை சுட்டுக்கொன்றுவிட்டதாக தகவல் கிடைத்து காவல்துறை அங்கு சென்று விசாரித்தது. ரோக்ஸ் என்ற  பெண், டாக் என்ற தனது கணவரை சுட்டுக்கொன்றிருந்தார். எனக்கு எனது கணவனைப் பிடிக்கும் ஆனால் சுட்டுக்கொல்லும்படி ஆகிவிட்டது என்று சொன்னார். பிறகு விசாரித்த போதுதான் டாக் என்பவர் மோசமான சைக்கோபாத் என தெரிய வந்தது. அவர் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகம் நடத்தினார். அங்குள்ள பெண்களை வல்லுறவு செய்தவர், அதன் நினைவாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டார். நிறைய மணம் செய்துகொண்ட ஆள். ஃபேன்டசியாக சூழலை உருவாக்கி உடை உடுத்தி வல்லுறவு செய்வதுதான் டாக்கின் பாணி. பல பெண்கள் வன்முறையை சித்திரவதையைப் பொறுக்க முடியாமல் ஓடிவிட்டனர். வன்முறை, பிறரை கட்டுப்படுத்துவது இல்லாமல் டாக்கால் உடலுறவு கொள்ள முடியவில்லை. வன்முறை, வல்லுறவு பற்றி காவல்துறைக்கு டாக் பற்றி நிறைய புகார்கள் வந்தாலும் அவரை சிறைக்கு தள்ள உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

எந்த புகாரும் சொல்லாமல் தன்னோடு வாழ்வதற்கான பெண்ணை டாக் தேடி வந்தார். எசகுபிசகாக ரோக்ஸ் எப்படியோ மாட்டிக்கொண்டார். ஒருமுறை நாய்களுக்கு உணவுக்காகும் செலவு பற்றி ஏதோ சாடை பேசினார் ரோக்ஸ். அவரை கூட்டிச்சென்று ஒரு அறையில் தள்ளி, துப்பாக்கியின் பின்பக்கமாக மண்டையில் அடித்தார் டாக். பிறகு அவருக்கு விருப்பமான நாய் ஒன்றை ரோக்ஸின் கண்முன்னே சுட்டுக்கொன்று, நீ பேசினால் அடுத்து உன் கதி இதுதான் என மிரட்டினார்.

விவாதம் நடைபெறும்போது ஏற்படும் கட்டுக்கடங்காத கோபம், வன்மம், பயம் ஆகியவையே குற்றங்களுக்கு முக்கியமான காரணங்கள். மத்திய வயது மனிதர் ஒருவர் தனது பிள்ளையை முன்னாள் மனைவியிடம் கொடுக்குமாறு தீர்ப்பு வந்துவிட, கோபத்தில் கத்தியை எடுத்துச்சென்று மனைவியை, அவளுக்கு வாதாடிய வழக்குரைஞரை குத்திவிட்டார். ஒருமுறை அல்ல பலமுறை… பிறகுதான் கோபத்தால் தான் செய்த செயலின் விளைவு புரிந்து அமைதியானார். இப்படி வன்முறையில் அவர் ஈடுபடக் காரணம், தான் வாதத்தில் தோற்றுப்போய்விட்டோம் என்பதை உணர்ந்த விரக்தியடைந்ததால்தான்.

மது, போதைப்பொருட்கள் காரணமாக உணர்ச்சி மேலோங்கிய நிலையில்தான் வன்முறைக் குற்றங்கள் நடைபெறுகின்றன. டேட்டிங் போக முடியவில்லை. வேலையை இழந்துவிட்டேன். காதலி திட்டிவிட்டாள், காதல் பிரிவு ஆகியவற்றுக்கு கூட பிறரை காரால் இடித்துக்கொல்வது, கத்தியால் கழுத்தை அறுப்பது, முகம் தெரியாத ஒருவரை அடித்து உதைப்பது என வன்முறை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. விசாரணையில் மனநிலை சரியில்லை அதனால்தான் இப்படி செய்தேன். மற்றபடி நான் புழு பூச்சிக்கு கூட கெட்டது செய்தது இல்லை என்று சொல்லுவார்கள்.

images - bored panda


கருத்துகள்