சைக்கோபாத்களுக்கான மருத்துவ திட்டம்

 வருமுன் காப்போம் என்ற கதையை படித்திருக்கிறீர்களா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்த வாசகத்தை மனதால் உணர்ந்தால் போதும். சிறுவயதில் ஒருவரின் குற்ற அறிகுறிகளை ஆராய்ந்தால் அவரை எளிதாக சிகிச்சை பெறச் செய்து எதிர்காலத்தில் வளர்ந்து இளைஞராகி செய்யும் குற்றங்களையேனும் தடுக்கலாம். குறைந்தபட்சம் குற்ற சதவீதத்தையேனும்  குறைக்கலாம் அல்லவா?

உளவியல் சிகிச்சை என்பது குழந்தையின், சிறுவர்களின் மனநிலைக்கானது மட்டுமல்ல. அவர்களது குடும்ப சமூக உறவுகளை மேம்படுத்தவும்தான். மனநல சிகிச்சை அளிக்கும்போது அதன் பாதியில் கூட சிலர் சைக்கோபதி அறிகுறிகளைக் கொண்டவர் சிறப்பாக குணமடைகிறார் என மகிழ்ச்சியாக கூறுவதுண்டு. உண்மையில் அப்படி கூறுபவர், பிரச்னையை சரியாக கையாளும் திறமை கொண்டவராக இருக்கவேண்டும். அல்லது நண்பர், கணவர் திருந்திவிட்டார் முன்னேற்றம் தெரிகிறது என்பவர் தனது தேவையைக் குறைத்துக்கொண்டவராக இருக்கவேண்டும். ஏறத்தாழ தன்னையே தியாகம் செய்துவிட்டார் எனலாம்.

சைக்கோபதி நபர்களை சரியான பாதையில் திருப்ப நிறைய திட்டங்கள், சிகிச்சைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இதில் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவில்லை. சிகிச்சைகள் பற்றிய குறிப்புகளை பார்த்தாலும் கூட அதிலும் நம்பிக்கைக்குரியதாக ஏதும் தென்படவில்லை. சைக்கோபாத்களுக்கு குறிப்பிட்ட வயதில் அவர்களின் இயல்புகள் மாற்றம் பெறுகின்றன. இதன் அர்த்தம், சிகிச்சையும் கூட அதைப் புரிந்துகொண்டு மாற்றம் பெற வேண்டும் என்பதுதான்.

சைக்கோபாத்களுக்கு சிகிச்சை திட்டத்தில் நிறைய அரசு அமைப்புகளின் தலையீடு உள்ளன. அவை இல்லாமல் முழுமையாக சைக்கோபாத்களை குணமாக்கும் வகையில் உருவாக்கும் திட்டங்கள், அதே இயல்பில் நிறைவேற்றப்பட வேண்டும்.

சைக்கோபாத் கைதிகள் சிலர். தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்படி இருக்கும் விதமாகவே நன்றாகத்தானே இருக்கிறது என்றெல்லாம் கம்பி கட்டுவார்கள். ஆனால் அதையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்டால் அவர்கள் மனதில் உள்ள பிரச்னையை தீர்க்க முடியாது. அதன் விளைவாக சமூகத்தில் ஏற்படும் சீர்குலைவை சரிசெய்ய முடியாது. மருத்துவர்களில் சிலர் கூட சைக்கோபாத்களை குணப்படுத்த முடியாது என முன்முடிவுகளோடு இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை எப்படி நடைபெறும் என்பதை தனியாக கூற வேண்டுமா என்ன?

 

உளவியலாளர் ராபர்ட் ஹரேவை அழைத்த கனடா அரசு, தொடர் கொலைகாரர்களை சீர்திருத்தும்படியான மருத்துவ திட்டங்களை உருவாக்க கோரியது. பழைய மருத்துவ முறைகள் கொலைகாரர்களை சரிசெய்வதற்கான அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை. அடுத்து, அவர்களின் வன்முறை செயல்பாடுகள் குறைய வேண்டிய அழுத்தமும் மருத்துவத் திட்டங்களுக்கு இருந்தது. கனடா அரசு தயாரித்து தர கூறிய மருத்துவத் திட்டம் என்பது பரிசோதனை அடிப்படையிலானதுதான். ராபர்ட் ஹரே அப்படி ஒரு திட்டத்தை தயாரித்து வழங்கினார்.  இந்த திட்டத்தில் பிறரை தான் திருந்திவிட்டேன் என சைக்கோபாத்கள் கூறுவதை விட அவர்களின் குண இயல்புகளுக்கு அவர்களே காரணம் என்று சொல்லும்படியான அம்சங்கள் இணைக்கப்பட்டன.

சிறையில் கைதிகளை அடைத்து வைத்து பராமரிப்பது என்பது அரசுக்கு அதிக செலவு பிடிக்கும் வேலை. ஆனால் அதேசமயம், அவர்களை விரைவில் வெளியே விட்டுவிடுவதும் கூட மக்களுக்கு நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளை தரலாம். திட்டங்களை அரசியல், பொருளாதார, இனக்குழு அடிப்படையில் மாற்றங்களை செய்யாமல் இருந்தாலே சைக்கோபாத்களை  சரியான இயல்பில் கட்டுப்படுத்தி வைத்திருக்க இயலும்.


கருத்துகள்