மார்க்சிய கொள்கை அடிப்படையில் சமூக குற்றங்களைக் காணலாம்!

 












மார்க்சிய கொள்கை வழியில் கோணத்தில் குற்றத்தைப் பார்ப்பது பற்றி படித்தோம். அதிலும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. முதலாளித்துவ சமூகம் என்றால் குற்றம் செய்பவர்கள் அனைவருமே அந்த கருத்தில் உடன்பாடு கொண்டவர்களா, அனைத்து பிரிவினரும் குற்றம் செய்கிறார்களா என நிறைய கேள்விகளும் அதில் உண்டு.

நடைமுறை யதார்த்தம் சார்ந்து கருத்துகளைப் புரிந்துகொள்வது, கருத்துகளின் அர்த்தம் அறிவது, அதிலிருந்து கற்றுக்கொள்வது, கற்றதும், பெற்றதுமான அனுபவங்களிலிருந்து ஆளுமையை உருவாக்கிக் கொள்வது ஆகியவை முக்கியமானவை. அதிகாரம், பணபலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்கள்தான் சட்டங்களை உருவாக்குகிறார்கள். நேரடியாக உண்மையை எதிர்கொள்வது கடினம் என்பதால் நாம் அதை வேறுவேறு பெயர்கள் கொண்டு அழைக்கிறோம். உண்மையில் அதிகாரமும், பணபலமும் கொண்ட சிறுகுழுக்கள்தான் சமூகம் இயங்குவதற்கான விதிகளை வகுக்கிறார்கள். வெளியிடுவதும், நடைமுறைப்படுத்துவதும் வேறு வேறு அமைப்புகள், ஆட்கள். இப்படி அமைக்கும் சட்ட அமைப்பில் ஒருவரைக் கொல்வது என்பது சட்டப்படி ஏற்புடையதாகவும் உள்ளன. போதைப்பொருட்களை விற்பது, பெண்களை ஆபாச படம் எடுப்பது, வல்லுறவு செய்வது ஆகியவற்றில் குற்றவாளிகளை காவல்துறை கொன்றால் அதற்கு லட்டு கொடுத்து சந்தோஷப்படும் அளவுக்கு மக்களின் மனநிலை மாறிவிட்டது. இதை லெஜிமேட் கில்லிங் என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் இதெல்லாம் மனநிலை சார்ந்து உள்ள உணர்ச்சிவேக முடிவுகள்தான். இப்படி எடுக்கும் முடிவுகளால் நீண்டகால நோக்கில் எந்த நன்மையும் கிடையாது. 

சமூகத்தில் அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்துகொண்டு அதன் சட்ட திட்டங்களை மாற்ற முயலும் நபர்களை மாரல் என்டர்ப்ரீனர் என்று அடையாளமிட்டு உளவியலாளர் பெக்கர் கூறினார். மேற்கு நாடுகளில் 1960ஆம் ஆண்டுகளில் பணக்காரர்களின் கருத்துகளே சமூகத்தில் பெரிதும் மதிப்புக்குரியவையாக இருந்தன.  இவர்கள் சட்ட ரீதியான மாற்றங்களுக்கு முன்னரே தனக்கு பிடித்தது போல கருத்துகளை பரவலாக்கி வந்தனர்.

குற்றம் நடைபெறுகிறது என்றால், அதற்கான அடிப்படை நோக்கத்தை பற்றி ஆராய்வதே முக்கியமானது. லட்சியம் அதாவது, காரணம் இல்லாத குற்றம் என்பது உலகில் நடைபெறுவது இல்லை. காலகட்டம் பொறுத்து குற்றம், அதற்கான தண்டனை என்பது மாறிக்கொண்டே வருகிறது. பொருளாதார வல்லுநர், சீசர் பெக்காரியா, ஒருவர் செய்யும் குற்றத்தின் தீவிரத்தன்மை, பாதிப்புக்கு பொருத்தமாக தண்டனைகளை வழங்கவேண்டும் என்று கூறினார். லாபம் மற்றும் வலி என்பது குற்றச்சம்பவங்களில் ஒருவருக்கு கிடைக்கிறது. இவை இரண்டுமே சமநிலை கொண்டதாக உள்ளது என தத்துவவாதி ஜெர்மி பென்தாம் கூறியுள்ளார். ஆகமொத்தம் இவர்களின் கருத்துகளிலிருந்து நாம் அறியவேண்டியது என்னவென்றால், ஒருவர் செய்யும் தீமையால் ஏற்படும் பாதிப்பு, விளைவுக்கு சற்றும் குறையாமல் முடிந்தவரை அதிகரிக்கும்படியான இயல்பை தண்டனைகள் கொண்டிருக்கவேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

குற்றவியல் துறை சார்ந்த முக்கியமான கருத்துகள பெக்காரியா, பென்தாம் ஆகிய இரு தத்துவவாதிகள்தான் கூறினர். இவர்களுக்கு அன்று நிறைய மதிப்பிருந்தது. எழுபது, எண்பதுகளில்தான் பெக்காரியா, பென்தாம் ஆகியோர் உருவாக்கிய கொள்கைகளுக்கு பதிப்பு 1970ஆம் ஆண்டில் மதிப்பு குறைந்தது.

1973ஆம் ஆண்டு ரேடிகல் கிரிமினாலஜி கொள்கைகள் வெளியாயின. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் கொள்கைகளை குற்றவியல் கொள்கைகள் கொண்டிருந்தன. வசதியானவர்கள் தவறுகளை செய்யவில்லையா என்றால் தங்கள் செல்வத்தைப் பெருக்கிக்கொள்ள குற்றங்களில் ஈடுபட்டார்கள். ஏழைகள், தங்கள் வறுமைக்காக தவறுகளை செய்தார்கள். செழிப்பான மனிதர்களின் வர்க்கம், வறுமையான பிரிவினரின் குற்றங்களுக்கான தண்டனைகளை வழங்கும் இடத்தில் இருந்தார்கள். எனவே, செல்வந்தர்கள் செய்யும் தவறுகளைப் போல ஏழைகள் தவறுகள் செய்தால் அவர்களுக்கு  வழங்கப்படும் தண்டனை எப்போதும் போல அளிக்கப்பட்டது. அதில் மாற்றமே நேரவில்லை.

குற்றம் செய்தார்கள், செய்யப்படுவதில்லை என்பதைக் கடந்து அதற்கான வாய்ப்புகள், முன்னர் செய்த குற்றங்கள், வறுமை, குறைந்த சமூக அந்தஸ்து ஆகியவை காரணமாக குறிப்பிட்ட மக்களை குற்றவாளி என முத்திரை குத்துவதும் உண்டு. இதற்கு லேபிளிங் தியரி என்று பெயர். அதிகாரங்களைக் கொண்டுள்ள  மக்கள் நீதிபதி, பெற்றோர், காவல்துறை, ஆசிரியர் ஆகியோர்தான் இப்படி குற்றவாளிகளை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.

நீதிபதிகள், மருத்துவர் என பலரும் தங்கள் மனதில் சிலரை குற்றவாளிகள் என முன்முடிவாக நினைத்துக்கொள்ளும்போது அங்கு சரியா, தவறா என்ற விவாதங்கள் எழுவதில்லை. குற்றம்சாட்டப்பட்டவர் எளிதாக குற்றவாளியாக கருத்தில் கொள்ளப்படுகிறார். அவரின் வறுமை நிலையால் அதிகாரம் மிக்க நபர்களை எதிர்த்து போட்டியிட்டு வெல்வது கடினம். மனநிலை சீர்குலைவு, குடிநோயாளி, பாலியல் குற்றவாளி என பல பெயர்களில் குற்றம்சாட்டப்பட்டவர் அழைக்கப்பட்டு குற்றவாளி ஆக்கப்படுகிறார்.

குற்றம் அதன் இறந்தகாலத்தை எப்போதும் கொண்டு எதிர்காலத்தை இயக்குகிறது. ஒருமுறை குற்றம் செய்து சிறைக்கு சென்றுவிட்டால், காவல்துறையினர் அடிக்கடி வழக்கில் ஆள் சிக்கவில்லையென வீட்டு முகவரிக்கு வந்து நிற்பார்கள். வழக்கு, சிறை காரணமாக ஒருவரின் பெயர் கெட்டுவிடும். அவர் வேலைக்குச் செல்ல முடியாது. பள்ளி, கல்லூரி சென்றாலும் கூட அதை இளம் குற்றவாளி தொடரமுடியாது. குற்றவாளி உறுப்பினராக உள்ள  குடும்பமும் பிறரால் விலக்கம் செய்யப்படும்போது நேரும் சமூக அழுத்தம் தாங்க முடியாத ஒன்று.

இந்த நிலையில் விரக்திக்குள்ளான தனிநபர், தன்னை குற்றவாளி என்ற லேபிளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வார். ஏனெனில் அவருக்கு வேறு வழியே இல்லை. அதிகாரமும் தான் கூறிய அடையாளத்தில் மனிதர் பொருந்திவிட்டார் என மகிழும். பிறகும் அவர் குற்றவாளி என்பதற்கு ஏற்ப குற்றச்செயல்பாடுகளை தொடர்ச்சியாக செய்து வருவார். சமூகத்தின் இயக்கமும் தொடர்ந்து நடைபெறும். குற்றவாளி என்ற அடையாளம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எப்போதும் மாறாது. அவருக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டலோ, திருந்தி வாழ முயன்றாலோ கூட எந்த மாற்றமும் இருக்காது. அதாவது சமூகத்தின் மேல்தட்டு வர்க்கம் குற்றவாளி என்ற பிம்பத்தை அப்படியே மாறாமல் பராமரித்து வரும். அதில் மாற்றமே இருக்காது. இதை ஆய்வாளர் லெமார்ட், டேவியன்ஸ் ஆம்பிளிஃபிகேஷன் என குறிப்பிடுகிறார்.

image - revise sociology

கருத்துகள்