வாழ்க்கையின் போக்கிலேயே வாழ்ந்தால் ... உல்லாசம் - ஷான் நிகாம், பவித்ரா லட்சுமி
உல்லாசம்
மலையாளம்
ஷான் நிகம்,
பவித்ரா லட்சுமி
லட்சியத்தைக்
கொண்ட துயரங்களா, இலக்கைப் பற்றி கவலைப்படாத மகிழ்ச்சியா என இரு வேறுபட்ட விஷயங்களைப்
பற்றி பேச முயல்கிற படம்தான் உல்லாசம்.
ஹாரி மேனன்
என்ற இளைஞரும், யாரிடமும் அதிகமாக பேசாத கர்ப்பிணிகளைக் கண்டால் மட்டும் மனம் பதைபதைக்கிற
இளம்பெண்ணும் ஊட்டியில் சந்திக்கிறார்கள். மோதல் தொடங்கினால் காதலாகத் தானே மாற வேண்டும்.
அந்த வகையில் காதல் ஆகிறது. ஆனால் இதில் இளம்பெண், ஹாரி மீது நம்பிக்கை வராமல் தன்னைப்
பற்றிய எந்த விஷயங்களையும் கூறுவதில்லை. ஹாரிக்கு அந்த பெண்ணை திரும்ப சந்திக்க ஆசையிருக்கிறது.
மனதில் காதலும் இருக்கிறது. ஆனால், அவள் எங்கே இருக்கிறாள் என்று கூட தெரியாது. ஹாரி
கோவையிலும், இளம்பெண் கேரளாவுக்குமாக பிரிந்து செல்கிறார்கள்.
இருவரும்
பிறகு சந்தித்தார்களா இல்லையா என்பதே கதை. ஹாரியாக ஷான் நிகம் நடித்திருக்கிறார். படம்
நெடுக ஷானின் இளமைத் துடிப்பும் நடிப்பும்தான்
படத்தை காப்பாற்றுகிறது. இதில், நிமா என்ற பாத்திரத்தில் பவித்ரா லட்சுமி நடித்திருக்கிறார்.
மாடல் போல தோற்றமிருந்தாலும் இந்த படத்திற்கு அவரின் பங்களிப்பு என்பதே குறைவு. எப்போதும்
சோகமாகவே இருப்பது போன்ற தோற்றம் அவருக்கு இருக்கிறது. நிமா அலெக்ஸ் பாத்திரத்திற்கு
பவித்ரா லட்சுமி சரியான தேர்வா என்றால் இல்லை
என்பதே பதிலாக இருக்கும்.
சிற்பங்களை,
கைவினைப் பொருட்களை செய்து விற்பதே ஹாரியின் வேலை. அதை அவர் மகிழ்ச்சியுடன் செய்கிறார்.
பல்வேறு நகரங்களுக்குச் சென்று சுற்றி வருவதே முக்கியமான வேலை. புகைப்படங்கள் எடுப்பது,
சிற்பங்கள் செய்வது என சுற்றி வருபவன் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணத்தில்
நிமாவை சந்திக்கிறான். இருவரும் சண்டை போட்டுக்கொண்டதில் ரயிலை தவறவிடுகிறார்கள். பிறகு,
பழங்குடிகளின் திருமண விழாவில் பங்கேற்று சந்தோஷமாக நடனமாடுகிறார்கள். பிறகு மேட்டுப்பாளையம்
செல்லும் வழியில் சில விஷயங்களைப் பகிர்கிறார்கள். ஆனால் தங்களைப் பற்றிய உண்மைகளை
சொல்வதில்லை. இதில் ஹாரி தனது வீடு எங்கே இருக்கும் என்பது வரையில் நிமாவுக்கு தகவல்
சொல்கிறான். ஆனால் நிமா அதை பொருட்படுத்துவதில்லை.
நிமாவுக்கு
மனதில் காதல் வந்தபோதும் கூட ஹாரிக்கு அதை சொல்வதில்லை. ஆனால் அவளுக்கு சில பிரச்னைகள் உள்ளன. அதை அவள்
மறைத்துவிடுகிறாள். இறுதியாக அவளுக்கு முடிவெடுக்க நெருக்கடியாகும்போது மகிழ்ச்சியான வாழ்க்கையா, நெருக்கடியான பணி வாழ்க்கையா
என எதைத் தேர்ந்தெடுக்கிறாள் என்பதே இறுதிக்காட்சி.
முகவரி கொடுக்காமல்
செல்லும் காட்சி, தமிழில் ஜேஜே என்ற படம் வந்தது அல்லவா, அதை நினைவுபடுத்துகிறது. காட்சி
அழகியலாக படம் இருந்தாலும் ஷான் ரஹ்மானின் பாடல், கோபி சுந்தரின் பின்னணி இசை படத்தை
தூக்கி நிறுத்த முயன்றாலும் இறுதியாக நிமா பேசும் வசனமும், ஹாரி அதற்கு ஒத்துக்கொள்வதுமான
கருத்துகள் படம் அதுவரை பேசிய சொல்லிய அனைத்து விஷயங்களையும் கீழே சாய்த்து விடுகிறது.
ஹாரி கலை
உணர்வு கொண்டவன். தாயை இழந்த குற்றவுணர்ச்சியோடு பல்வேறு நகரங்களில் மலைப்பாங்கான இடங்களில்
சுற்றி வருகிறான். அதேசமயம் தனது சம்பாத்தியத்தையும் இப்படி செல்லும் பயணங்களில் பெறுகிறான்.
தான் செய்யும் விஷயங்களை மகிழ்ச்சியாக செய்கிறான். இப்படி செல்லும் பயணங்களில்தான்
தாயை இயற்கையாக பார்க்கிறான். பிரச்னையில் இருக்கும் மனிதர்களுக்கு தன்னால் முடிந்த
உதவியையும் செய்கிறான். ஹாரியின் உலகம் வண்ணங்களால் நிறைந்தது.
இதற்கு நேர்மாறான
லட்சியவாதம் என நினைத்துக்கொள்ளும் நிமா அலெக்ஸின் உலகம். மருத்துவராக நியோ எனும் மருத்துவமனையில்
வேலை செய்கிறார். இவரின் அப்பா, பணி ஓய்வு
பெற்றவர். தனக்கு பிடித்தாற் போல ஓய்வு வாழ்க்கையை வாழ்கிறார்.
நியோ மருத்துவமனையில்
இயக்குநராக உள்ளவரை நிச்சயம் செய்துகொண்டிருக்கிறாள் நிமா அலெக்ஸ். உணவகத்தில் சாப்பிடலாம்
என நினைத்து செல்பவளை, ஏன் லேட் எனறு கேட்டு உணவு சாப்பிடக்கூட கேட்காமல் திட்டுகிறார்
வருங்கால கணவர். கண்கலங்க பசியில் சோர்ந்துபோய்
அமைதியாக வசவுகளை கேட்டுக்கொண்டு நிற்கிறாள்.
இப்படி உள்ளவளான
நிமா, சந்தோஷமாக வாழும் ஹாரிக்கு சொல்ல என்ன
செய்தியிருக்கிறது? ஆனால் பேசுகிறாள். லட்சியம்
வேண்டும், குடும்பம் வேண்டும் என வசனம் ஒன்றைப் பேசுகிறாள். ஒருவகையில் அவள் குறிப்பாக
தனது எண்ணை எழுதிக்கொடுத்த நூலை ஹாரி தொலைத்துவிட்டான் என்பதை உணர்கிறாள். பிறகுதான்
இந்த விரக்தியான பேச்சு. இறுதியாக தனக்கு குடும்பம் இருக்கிறது என ஹாரி சொல்வதும் பொருத்தமாக
இல்லை. ஹாரி தான் செய்யும் வேலை, அதற்கான உழைப்பு என அனைத்திலும் சந்தோஷமாகவே இருக்கிறான்.
ஆனால் அவனுக்கு இருக்கும் குற்றவுணர்ச்சி, அம்மாவை தவறவிட்டுவிட்டோமே என்பதுதான். ஆனால்
அதை அவன் காதல் மூலம் பதிலீடாக நீக்கிக்கொள்வதில்லை.
அதேநேரம்
குடும்பம் உள்ள, மருத்துவத் தொழில் உள்ள நிமா அலெக்ஸ் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்றால்
பணி சார்ந்த அழுத்தம் தவிர எதிர்கால கணவர் கொடுக்கும் வசை, வதை அதிகமாக உள்ளது. இந்த
நிலையில் அவர் ஹாரிக்கு அறிவுரை சொல்ல என்ன அடிப்படைத் தகுதி இருப்பதாக இயக்குநர் நினைக்கிறார்
என்று புரியவில்லை..
பயணத்தில் மட்டும் உல்லாசம்
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக