தற்கொலை செய்யத் தூண்டும் பேயை எதிர்கொள்ளும் அம்மாவும் மகனும் - பூதாக்காலம் - ராகுல் சதாசிவன்

 



பூதாக்காலம் மலையாளம் 

பூதாக்காலம் ஷான் நிகாம்,ரேவதி

பூதாக்காலம் ஷான் நிகாம், ரேவதி






பூதாக்காலம்

ஷான் நிகாம், ரேவதி

 

பேய்ப்படம். ஆனால் அதை முடிந்தவரை எளிமையாக எடுத்து நம் முன் காட்டியிருக்கிறார்கள்.

வினு, அப்பா இல்லாத பையன். பி ஃபார்ம் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார். அவரது அம்மா ஆஷா, குழந்தைகளுக்கான ஆசிரியையாக இருக்கிறார். வீட்டிற்கான வருமானம், அம்மாவின் ஆசிரியர் பணி மூலமே கிடைக்கிறது. வீட்டில் ரேவதியின் அம்மா, சக்கர நாற்காலியில் முடமாகி வாழ்ந்து வருகிறார். இவர்கள் உள்ள வீடு சற்று அசாதாரணமான தன்மையில் இருக்கிறது.

வினு, மருத்துவம் சார்ந்து படித்தாலும் நினைத்த வேலை கிடைக்கமாட்டேன்கிறது. அவரது நண்பர்கள் கிடைத்த வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு முதலில் அப்படி செல்வது விருப்பமில்லை. ஆனால் பொருளாதார நெருக்கடி அவனை அந்த வேலைக்கும் கூட செல்ல நிர்பந்திக்கிறது.  இந்த நேரத்தில் அவனுக்கு உள்ள பெண் தோழியுடனும் எதிர்பார்த்தது போல உறவு செல்லவில்லை. புகைப்பிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் அதிகமாகிறது. இந்த நேரத்தில் ஆஷாவுக்கு மகன் தனது கணவர் போலவே மதுவால் அடிமையாகி இறந்துவிடுவானோ  பயமாகிறது.

ஆஷாவின் அம்மா, உடல் நலம் சரியில்லாமல் கிடந்து ஒருநாள் இறந்துபோகிறார். பிறகு  வினு, ஆஷா என இருவருக்குமே உறவு சரியில்லாமல் போகிறது. வினுவுக்கு அந்த வீட்டில் தங்களோடு வேறு யாரோ இருப்பது போல தோன்றுகிறது. அதை அவன் அம்மாவிடம் சொல்கிறான். ஆனால் அவள் நம்பவில்லை. அவள் மட்டுமல்ல வினுவின் பெண் தோழி, வினுவின் சித்தப்பா, சித்தப்பா கூட்டிவரும் மனநல ஆலோசகர் என யாருமே வினுவின் பேச்சைக் கேட்பதில்லை. மது, புகைப்பழக்கம், தூக்கமின்மையால் தோன்றும்  மாயக்காட்சியால் வினு அப்படி கூறுகிறான் என நினைக்கிறார்கள். அதையே சொல்லுகிறார்கள்.

உண்மையில் என்ன நடந்தது என மனநல ஆலோசகர் விசாரணை செய்கிறார். அதில் அவர் தெரிந்துகொள்ளும் விஷயங்கள்தான் படமே….

படம் முழுக்க ஷான் நிகம், ரேவதி ஆகியோரின் நடிப்பை மட்டுமே நம்பியிருக்கிறது. படத்தில் வேறு பாத்திரங்களும் கூட குறைவுதான். மகனை நினைத்து இயலாமையில் அழுவது, மன அழுத்த மருந்துகளை சாப்பிடுவது, மகன் சொன்ன விஷயங்களை நேரடியாக பார்க்கும்போது ஏற்படும்  அதிர்ச்சி ஆகியவற்றை ரேவதி சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் சிறப்பாக நடித்த காரணத்திற்காக ரேவதிக்கு மாநில அரசின் விருது கிடைத்துள்ளது முக்கியமான செய்தி.

ராகுல் சதாசிவனின் இயக்கத்தில் படம் கச்சிதமாக உள்ளது. படத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன ஆன்மாவை நிழல் போல காட்டியிருப்பது நல்ல ஐடியா. நிழலாக, வெளிச்சம் இல்லாமல் காட்டியே பயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் படத்தில் சிறப்பாகவே வந்திருக்கிறது.

ஷான் நிகம், படத்தை தயாரித்து நடித்து இருக்கிறார். நடிப்பில் சிறப்பாக செய்திருக்கிறார். அறையில் கதவு பூட்டிக்கொள்ள பயத்தில் மூலையில் சரிந்தபடி உள்ள காட்சி நடிப்புக்கு சான்று. கோபி சுந்தரின் இசையும் படத்தின் இயல்புக்கு நியாயம் செய்திருக்கிறது.

தற்கொலை வலை

 கோமாளிமேடை டீம்

 



கருத்துகள்