முருகேசன்களின் வாழ்வில் நிறைந்துள்ள பல்வேறு உணர்ச்சிப்போராட்டங்கள் - மாயம் - பெருமாள் முருகன்

 







பெருமாள் முருகன்

மாயம் பெருமாள் முருகன்

மாயம் - பெருமாள் முருகன்

சிறுகதைகள் 

காலச்சுவடு


நூலின் தலைப்பை முருகேசனின் கதைகள் என்றே கூட சொல்லிவிடலாம். தவறில்லை. அனைத்து கதைகளிலும் நாயகன், கதை நாயகன் முருகேசுதான். பெரும்பான்மையான கதைகள் திருமணமாகும் முயற்சி, திருமணம், திருமணமான பிறகு வாழ்க்கை என திருமணத்தை மையமாக கொண்டுள்ளது.  மொத்தம் இருபது கதைகள், மாயம் என்ற நூல்தொகுப்பில் உள்ளன.

பரிகாரம் என்பது, மாயவாத கதை என்றால் இதுமட்டுமே. மற்ற கதைகள் அனைத்துமே எளிமையான வாசகங்களால் அமைந்த கதைகள். அதன் முடிவு கூட பெரியளவு அதிர்ச்சி, மகிழ்ச்சி என முடிவதில்லை. சீரான தன்மையில் உணர்ச்சிகளையும் மெல்ல பரப்பி காவிரி நீர் போல சலசலத்து செல்கிறது. பரிகாரம் கதை, ஜோதிடத்தால் மனதுக்குள் ஏற்பட்ட பதற்றம், பீதி எப்படி ஒருவனை பித்தாக்குகிறது என்பதை கூறுகிறது. இந்தக் கதை அதன் வார்த்தைகள், கதையின் போக்கு என்ற வகையில் ஈர்ப்பானதாக உள்ளது.

காதல், காமம், குற்றவுணர்ச்சி, பொறாமை, இரக்கம், விரக்தி ஆகிய உணர்வுகளை இக்கதைகளில் ஆசிரியர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். பெரும்பாலான பாத்திரங்கள் மேற்சொன்ன உணர்ச்சிகளை கதைகளில் வெளிப்படுத்துகின்றனர்.

வீராப்பு கதை, கதையின் தொடக்கத்தில் முருகேசு நட்புகளோடு பழகாமல் வேலை, அது முடிந்தால் வீடு என சென்றுவிடுகிறான். ஏன் அப்படி செல்கிறான் என்பதை சொல்லும் கதை. எதிர்பார்ப்பு, ஆசை அதை உடைத்துப்போடும் நடைமுறை பிரச்னைகளை இந்தக் கதையில் நாம் அறிய முடிகிறது.

கடைக்குட்டி, நுங்கு, போதும் என்ற மூன்று கதைகளுமே தொகுப்பில் அமர்க்களமாக அமைந்துவிட்டன. இவை மூன்றுமே முருகேசுவுக்கு திருமணம் செய்வது தொடர்பானவைதான். ஆனால் இதில் வரும் கதாபாத்திரங்கள் மையப் பொருளைக் கடந்து நிறைய உணர்வுகளை ஊட்டக்கூடியவையாக மாறுகின்றன. கடைக்குட்டி என்ற கதையில் கடைசி மகனுக்கு கல்யாணம் செய்யவேண்டும் என அவனது அப்பா முயல்கிறார். மகனுக்கு எந்த பிரச்னையும் இல்லாதபடி மாமியார் வீடு இருக்கவேண்டும் என நினைக்கிறார். இதனால் சில சம்பந்தங்கள் தட்டிப்போகின்றன. அத்தோடு முருகேசின் அப்பாவிற்கு அவரது மனைவி கூட கிடைக்காமல் போவதாக நினைக்கிறார். இதன் காரணமாக அவரது மனதில் எழும் வன்மம்தான் இறுதியாக வெளிப்பட்டு நம்மை திகைக்க வைக்கிறது. இந்தியர்கள் பெரும்பாலும் அம்மா பிள்ளை என்று கூறப்படுவதால் அம்மா  பாசம் அதில் வேறுபாடாக தெரியவில்லை. ஆனால், கணவர் , மனைவி உறவு என்பதில் பிள்ளைகள் பிறந்தபிறகு ஏற்படும் இடைவெளி இருக்கிறதே.. அதை கதை பதிவு செய்துள்ளது.

நுங்கு கதையும் கூட அப்பா, மகன் ஆகியோர் நெருக்கமாக இருந்து திருமணம் சார்ந்து பிரச்னை வரும்போது பிரிவதைப் பற்றி பேசுகிறது. இதில் அமைதியாக இருக்கும் மகன் பழிவாங்க நுட்பமாக செய்யும் வேலை அவனது அப்பாவை எப்படி தாக்கி உருக்குலைக்கிறது என்பதே இறுதிப்பகுதி. அப்பா, மகன் பாசம் உறுதியானதுதான். ஆனால் வெளியில் இருந்து வரும் திருமணம் சார்ந்த சமூக அழுத்தம் அவர்களது உறவை எப்படி கூறுபோடுகிறது, பலவீனப்படுத்துகிறது என்பதை ஆசிரியர் கூறுகிறார்.

 போதும் கதை, சொல்லமுடியாத காதலைப் பேசுகிறது. இதெல்லாம் தாண்டி ஒரு பெண்ணின் அருகாமை அவளை விரும்பு காதலனை எந்தளவு மகிழ்ச்சிபடுத்துக்கிறது என்பதை சொல்லுகிறது. சிறுவயதில் இருந்து காதல் இருக்கிறது. ஆனால் அதை சொன்னாலும் ஈடேற வாய்ப்பு குறைவு. அதனாலென்ன என  அந்தப் பெண் சொல்லுவது எப்படி என முருகேசுவுக்கு புரியவில்லை என்றாலும் கூட திருமணநாளில் தான் காதலித்து மணம் செய்ய நினைத்த பெண்ணின் அருகே அமர்ந்து சாப்பிடுவது அவனுக்கு மனதளவில் பெரும் நிறைவை அளிக்கிறது. ஒருவகையில் அவன் அந்த பெண்ணை மணம்செய்தாலும் கூட இப்படித்தானே அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவான் என முருகேசு நினைத்துக்கொள்கிறான். அந்த நினைவை புகைப்படமாக எடுத்து வைத்துக்கொள்கிறான்.

பசி, இந்த சிறுகதை வயிற்றுப்பசி, காமம் என இரண்டையும் பேசுகிறது. ஆனால் இந்த இரண்டுமே சூழல்களால், அழுத்தங்களால் கட்டுப்படுத்தப்பட்டு அலட்சியப்படுத்தப்பட்டால் எப்படியிருக்கும் என்பதை விவரிக்கிறது. கணவன் ஓரிடம், மனைவி ஓரிடம் என வாழ்கிறார்கள் பொருளாதார அழுத்தம் அந்தளவு மனித மனங்களை, உடல்களைபுரிந்துகொள்ள முடியாதபடி பிரிக்கிறது. இதன் விளைவாக கணவன், மனைவி சந்திக்கும் வாய்ப்பு என்பது விழாக்களை காரணம் காட்டித்தான். மனைவி அரசு வேலை என்றாலும் கூட வீடு என்றால் நிறைய வேலைகளை செய்ய நெருக்கடி கொடுக்கும்போது, அவளுக்கு கணவன் என்றாலும் கூற புகுந்தவீட்டிற்கு ஊருக்கு வர கடினமாக இருக்கிறது. அடிப்படையில் இதன் காரணம், கணவன் அவளை வெறும் உடலாக பார்ப்பதுதான். இந்த விஷயம், கல்யாண வீட்டடில் தனி அறை கேட்கும்போது, வெளிப்படுகிறது. அந்த நேரத்தில் பசியோடு இருந்த மனைவிக்கு பசி கூட தணிந்துபோகிறது. அங்கிருந்து கிளம்பினால் போதும் என நினைக்கிறாள். அப்போதுதான் கணவன் வந்து அவளை கூடியிருக்க நினைக்கிறான். இந்த நேரத்தில் அவள் என்ன செய்தாள் என்பதுதான் இறுதிப்பகுதி.


கருத்துகள்