15 வயது சிறுமியைக் காக்க மாஃபியா குழுக்களோடு போராடும் அடியாள்! தி என்ஃபோர்சர்

 











தி என்ஃபோர்சர் 2022




மாஃபியா கும்பலில் வேலை செய்யும் அடியாள், அதற்கு எதிராக திரும்பினால் என்னாகும்….

படத்தின் கதையில் புதிய விஷயம் ஒன்றுமில்லை. ஏராளமான படங்களில் பார்த்த கதைதான். அண்டானியோ பண்டாரஸ் நடித்திருக்கிறார் என்பதே படம் பார்ப்பதற்கு முக்கியமான காரணம். பாராகுடா என்ற கூலிப்படை ஆளாக நடித்திருக்கிறார்.

கொலை, வெட்டுக்குத்து, மிரட்டல் வேலைகளை செய்து வருபவர் பாராகுடா. இவர் மனைவி ஓவியக்கண்காட்சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மகள் பள்ளி ஒன்றில் படிக்கிறாள். ஆனால் இவர்கள் யாருக்கும் பாராகுடா செய்யும் பாவ வேலை பிடிக்கவில்லை. ஆனால் பாராகுடா அதைவிட்டு வெளியே வரமுடியாத சிக்கலில் இருக்கிறார். இந்த நிலையில் ரிக்கி என்ற தெருச்சண்டை போடும் இளைஞரை சந்திக்கிறார். அதாவது, பாராகுடாவின் பெண் முதலாளி புதிய அடியாளை தனது நிறுவனத்திற்கு கொண்டு வர நினைக்கிறார். இதற்காக தெருச்சண்டை போடும் ரிக்கியை த் தேர்ந்தெடுக்கிறார். இவர், அவருக்கு விசுவாசமாக நடந்துகொண்டாரா, பாராகுடாவின் தனிப்பட்ட வாழ்க்கை என்னவானது என்பதே கதை.

படத்தில் வன்முறையை விட மனிதர்களுக்கு இடையிலான பாச, நட்பு உணர்வுகளுக்கே இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். படத்தில் அன்டானியோ பண்டாரஸூக்கு அதிக சண்டைக்காட்சிகளோ, அடிதடியோ ஏதுமில்லை. அனைத்தையும் ரிக்கி பாத்திரத்தில் நடித்துள்ள இளைஞர் பார்த்துக்கொள்கிறார்.

பாராகுடா, ரிக்கி என இருவருக்கும் இடையில் அதிக உரையாடல்களே கிடையாது. ஆனால் இருவரும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பதுதான் படத்தின் முக்கியமான இடம்.

பாராகுடாவின் மகள்,அ வளது பிறந்தநாளுக்கு கூட தனது அப்பாவை பார்க்க கூடாது என நினைக்கிறாள். ஆனால் அப்பா அப்படி இருந்துவிடமுடியுமா? மகளுக்கு தன் மீது வருத்தம் இருந்தாலும் பணம் என்பது அல்டிமேட்தானே எனவே, மகளுக்கு பிறந்தநாள் பரிசாக பணத்தை கவரில் போட்டு கையில் திணிக்கிறார். அப்போது அவர் முகத்தில் தெரியும் வருத்தம், துயரம் போதும்… சிறந்த நடிகர் என்பதை நிரூபணம் செய்கிறார்.

அடிதடியான, ரத்தம் பார்க்கும் ஆட்கள் என்றாலும் கூட மனதுக்கு தவறு என தெரியும் ஒன்றை ஏற்காத ஆளாக பாராகுடா இருக்கிறார். இதனால்தான் அவர் சிறுமிகளை வைத்து ஆபாச வீடியோ எடுக்கும் கறுப்பின ஆளை தடுக்க நினைக்கிறார். ஆனால் பாராகுடாவின் முதலாளிக்கு காசு மட்டுமே முக்கியம். ஒருவன் சிறுமிகளை அழித்தால் என்ன, இளம்பெண்களை அழித்தால் என்ன என்று இருக்கிறார்.

பாராகுடாவுக்கு யாரையும் காப்பாற்ற வேண்டும் என்று லட்சியம் எல்லாம் கிடையாது. ஆனால் அவருக்கு தனது ஆதரவற்ற பில்லி என்ற பதினைந்து வயது சிறுமியைப் பார்த்தவுடன் தனது பெண்ணாகவே நினைக்கத் தொடங்கிவிடுகிறார். இதனால் அவளை ஆபாச பட கும்பலிடமிருந்து காப்பாற்ற தனது இளம் நண்பன் ரிக்கியையும் நாடுகிறான். அவனுக்கும் மெல்ல பாராகுடாவை பிடிக்கத் தொடங்குகிறது. ஏறத்தாழ அவர், அவனின் அப்பாவின் வயது கொண்டவர். இதனால்தான் இறுதிக் காட்சியில் தனது  கை உடைந்த நிலையிலும் பாராகுடாவை காப்பாற்ற முனைகிறான்.

இறுதிக் காட்சியில் பில்லி கேட்கும் அந்த கேள்வியே பாராகுடா இறந்துவிட்டதற்கு சமம்தான். தான் செய்த செயல்களுக்கான தண்டனையை ஏற்றபடி பாராகுடா கடற்கரையில் அமர்கிறார். அவர் மகளுக்கு கொடுத்த பரிசு, தனது இளம் நண்பன் ரிக்கிக்கு கொடுத்த அன்பளிப்பு என்ன என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.   

வன்முறை எனும் இருபுறமும் கூரான கத்தி

கோமாளிமேடை டீம்

initial release: 22 September 2022
Director: Richard Hughes
Music director: Giorgio Giampà
Production companies: Born to Burn FilmsMORE
Production design: Jonathan McKinstry

கருத்துகள்