கொலையாளியின் இனம்புரியாத வசீகரம்

 











சைக்கோபதி செக்லிஸ்டை ஒருவர் பயன்படுத்தினால் அதை பரிசீலிக்க தகுதிபெற்ற உளவியலாளர் தேவை. இல்லாதபோது நிறைய குழப்பங்கள் ஏற்படும். சாதாரணமாக நீங்கள் பார்ப்பவரிடம் செக்லிஸ்டில் உள்ள சில அறிகுறிகள் காணப்படலாம். அதற்காக அவர் சைக்கோபாத் ஆகிவிட மாட்டார். சைக்கோபாத் என்ற வார்த்தைக்கு கூட்டாக நிறைய அறிகுறிகள் உள்ளடங்கும்.

மயக்கும் வசீகரம்

சைக்கோபாத்கள் சூரியனுக்கு கீழே உள்ள அனைத்து விஷயங்களும் தெரியும் என நினைப்பார்கள். தான் ஒருவரை கவர வேண்டும், அவரால் காரியம் ஆக வேண்டுமென்றால் அவர்கள் துறை சார்ந்த சொற்களை, வார்த்தைகளை, ஆளுமைகளைப் பற்றி பேசுவார்கள். அவர்களது நோக்கம் எப்படியாவது ஒருவரை கவர்ந்து தான் சொன்னபடி செய்யவைக்க வேண்டும் என்பதுதான். எனவே நாடகங்களில் மனப்பாடம் செய்து குழந்தைகள் ஒப்பிப்பார்களே அப்படி பேசுவார்கள். முகத்திற்கு முன்னாடியே  புகழ்ந்து ஒருவரை வீழ்த்துவது, புகழ் வெளிச்சம் கிடைப்பதற்காக தன்னை மேதாவியாக பாவித்து பேசுவது ஆகியவற்றை செய்வார்கள்.   

எக்கோஸ் இன் தி டார்க்னெஸ் என்ற நாவலில் ஜோசப் வாம்பாக் உருவாக்கிய வில்லியல் பிராட்ஃபீல்ட் என்ற பாத்திரம் சைக்போபாத்தான். இவர் அனைவரிடமும் அவர்கள் துறை சார்ந்த இரண்டு வரிகளையாவது பேசிவிடக்கூடியவர். அதற்கு மேல் என்ன பேசுவார் என்பதை விடுங்கள். இப்படி ஒருவரின் துறை சார்ந்த பேசுவது பிறருக்கு நல்ல அபிப்ராயத்தை உண்டாக்கலாம்.  இது ஒரு சாமர்த்தியம். அதை அவர் தனது சுயநலனுக்கு பயன்படுத்திக்கொள்வார் என்பதுதான் முக்கியமான சங்கதி.

சைக்கோபாத்களின் உலகில் ஒரே ஒரு நட்சத்திரம் என்றால் அது அவர்கள்தான்.. அவர்கள் பிறர்  உருவாக்கும் எந்த விதிகளையும் பின்பற்ற மாட்டார்கள். ஏனெனில் அப்படி பின்பற்றுவதை விட அதை பின்பற்றாதபோது அவர்களுக்கு தனி கவனம் கிடைக்கிறதே? நான் எனது உலகத்திற்கான விதிகளை உருவாக்குவேன் என சைக்கோபாத்கள் செயல்படுவார்கள். திரைப்பட நடிகர்கள் நான்தான் நம்பர் 1 என போட்டி போடுகிறார்களே அதேபோல்தான் இவர்களும் இருப்பார்கள். தங்களுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் பெற்றோர், உறவினர், நண்பர்கள் என இவர்களே காரணம் என வாதிடுவார்கள். நீதிமன்றத்தில் குற்றம் செய்ததற்கான வழக்கு இருந்தால், வழக்குரைஞர்களை தவறு என்று சொல்லி திட்டுவார்கள்.

 இப்போது ஜாக் என்பவரைப் பற்றி பார்ப்போம்.. இவர் பல்வேறு திருட்டுகள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு  வந்தார். அப்போது வயது 38. தனது அம்மாவை அழகானவள் என்று சொன்னவர், ஐந்து வயதில் அம்மாவின் நகையைத் திருடி விற்கத் தொடங்கினார். பிறகு என்ன முரண்பாடு ஏற்பட்டதோ வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். பெண்களை அடிப்பதும் தாக்குவதும் தனக்கு பிடிக்கும் என காவல்துறை விசாரணையில் கூறியவர், ஆண்களை அறவே வெறுத்தார். உலகில் ஆண் என்றால் அது நான் மட்டுமே பிற ஆண்கள் அனைவருமே சாகவேண்டும். நானே அவர்களைக் கொல்லுவேன் என ஆக்ரோஷமாக பேசினார். நடக்குமா இல்லையா என்று தெரியாத விஷயங்களைக் க்கூட உண்மை போல ஜாக் பேசிக் கொண்டிருந்தார். நீச்சல் வீரராக மாறுவேன் என்று அவர் சொன்னபோது, சிறை உணவை இஷ்டத்திற்கு சாப்பிட்டு உடல் பருமனாக இருந்தார். குழந்தையைப் பெற்று தனியாக வளர்த்தவேண்டும் என்ற ஆசையை வேறு வைத்திருந்தார்.

சைக்கோபாத்களுக்கு பெரிதாக வலி என்பதைத் தவிர உணர்ச்சிகளே இருக்காது. பிறர் காயப்பட்டார்கள் என்றால் கூட அதைப்பற்றியெல்லாம் கவலையே பட மாட்டார்கள். டெட் பண்டி இதுபற்றி, நான் செய்த விஷயங்கள் எல்லாம் இறந்த காலத்தைச் சேர்ந்தவை. அதைப்பற்றிய எந்த உணர்ச்சியும் என்னைப் பாதிக்கவில்லை. கடந்தகாலத்தை நான் தொடவே விரும்புகிறேன். அது உண்மை கிடையாது. வெறும் கனவுதான் என்று பேசினார். கொன்றவர்களைப் பற்றி குற்றவுணர்ச்சி இல்லையா என்று கேட்டதற்கு, அதெல்லாம் சமூகம் நம் உடல்களைக் கட்டுப்படுத்த செய்யும் தந்திரம். ஆரோக்கியத்திற்கு கேடானது. அது ஒரு மாயை கூட என்று அசராது சொன்னார்.

குற்றவுணர்ச்சி, பரிவுணர்வு, கருணை என்றெல்லாம் சொன்னால் அதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு பெரிதாக கவலையே இருக்காது. அப்படி செய்த செயல்களுக்கும் பிறரை காரணம் என சுட்டிக்காட்டுவார்கள். அபோட் என்பவர் இப்படித்தான் கொலை முயற்சி  குற்றங்களுக்கு சிறையில் இருந்தார். அவர் எழுத்தாளர் நார்மன் மெயிலருடன் சேர்ந்து இன் தி பெல்லி ஆஃப் தி பீஸ்ட் என்ற நூலை எழுதி பிரபலமானார். அதன் வழியாக அவருக்கு பிணை கிடைத்தது. நியூயார்க் ஹோட்டலில் சாப்பிடும்போது, அங்கு வேலை செய்த ரிச்சர்ட் ஆடன் என்பவரை கத்தியால் குத்தி கொன்றார். இதற்காக சிறை செல்லவேண்டிய நிர்பந்தம் உருவானது. அது ஒரு விபத்து. அவரை நான்தான் கத்தியால் குத்தினேன் என ஊடகங்களிடம் பேட்டி கொடுத்தார் அபோட்.

 

 புகைப்படங்கள் - ஃபைன் ஆர்ட் அமெரிக்கா 

 

 

 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்