மலிவுவிலை ட்ரெட்மில் சாதனை! - ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த காணொலி

 









முக்கியமான கண்டுபிடிப்பு விருதை பல்வேறு தொழில் நிறுவனங்களும் வழங்கத் தொடங்கியுள்ளன. இதற்கு தமிழ்நாட்டில் முக்கியமான உதாரணம். கவின்கேர். இந்த நிறுவனம், சின்னி கிருஷ்ணா என்ற தங்களது குடும்ப தொழில் முன்னோடியின் பெயரில் சுயதொழிலில் சாதிப்பவர்கள், தொழிலுக்கான ஐடியாக்களைக் கொண்டிருப்பவர்களை ஊக்குவித்து விருதுகளை வழங்குகிறார்கள்.இப்படி செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் உள்ளன.

 ஒன்று, சுயதொழில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பண உதவியும், பெரு நிறுவனத்தின் வலைப்பின்னல் வழியாக பொருட்களை விற்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. அடுத்து, பெரு நிறுவனம் பல்லாண்டுகளாக தான் செய்யும் தொழிலில் பணம் சம்பாதித்து இருக்கும். ஆனால் புதிய சிந்தனைகள், பொருட்கள் கிடைத்தால்தான் தொழில் நிறுவனங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும். இதற்கு சுயதொழில் முனைவோர்களின் சிந்தனையும், பொருட்களும் நிறுவனத்திற்கு பேருதவியாக அமையும். 

பெரு நிறுவனங்களுக்கு இப்படி வறுமையான நிலையில் உள்ள சுயதொழில் முனைவோர்களுக்கு உதவுவதன் வழியாக அவர்களுக்கு சமூக அளவில் நல்ல பெயர் கிடைக்கிறது. அதாவது, பெரு நிறுவனத்திற்கு சிறந்த நன்மதிப்பு. பிராண்டிங். அதேசமயம் இந்த முயற்சியில் அவர்களது தொழில் சாம்ராஜ்யும் சற்று முன்னே நகரும். பணம் பலரின் பாக்கெட்டில் இருக்கிறது. வங்கியில் இருக்கிறது. ஆனால் ஐடியா அது ஒருவரின் கற்பனைத்திறனில் இருக்கிறது. அதைத்தான் பொருட்களைத் தயாரித்து விற்க பயன்படுத்த வேண்டும். இந்த வகையில் பரஸ்பரம் இருதரப்பிற்கும் லாபம் உண்டு. 

ஆனந்த் மகிந்திரா, 2023ஆம் ஆண்டிற்கான கண்டுபிடிப்பு விருதை மலிவு விலையில் ட்ரெட்மில் ஒன்றைக் கண்டுபிடித்த இளைஞருக்கு அறிவித்திருக்கிறார். ஆனந்த் பதிவிட்ட காணொலியில் இளைஞர் ஒருவர் சமையலறைக்கு வருகிறார். அங்கு, பாத்திரம் கழுவும் திரவத்தை சிறிது தரையில் ஊற்றுகிறார். பிறகு குழாயைத் திறந்து அதில் நீரை கையில் பெற்று தரையில் ஊற்றுகிறார். பிறகு காலில் அந்த கலவையை ஒன்றாக்குகிறார். அவ்வளவுதான். ட்ரெட்மில் ரெடி. சமையலறையில் உள்ள கல் திண்டைப் பிடித்தபடி ட்ரெட்மில்லில் நடப்பார்களே அதுபோலவே மெதுவாக நடக்கிறார். பிறகு வேகமாக ஓடத் தொடங்குகிறார்.

பாருங்கள் எவ்வளவு எளிமையான சிந்தனை. இந்த காணொலி பதிவுக்கு பலரும் ஆச்சரியம், அதிர்ச்சி, எச்சரிக்கை என பல்வேறு விதமாக கருத்துகளை பதிந்தனர். ட்ரெட்மில் சாதனத்தை பயன்படுத்த இரு வழிகள் உண்டு. ஒன்று நீங்கள் உடற்பயிற்சி நிலையத்திற்கு ஆண்டு சந்தா கட்டி சென்றுவருவது அல்லது அந்த சாதனத்தை வீட்டில் வாங்கிப்போட்டு மறக்காமல் உடற்பயிற்சி செய்வது. இரு வழிகள் என யோசித்தது பலரும் செய்வதுதான். அப்படித்தான் உடற்பயிற்சி செய்யவேண்டுமா என்ற தேவை, இளைஞரை எப்படி யோசிக்க தூண்டியிருக்கிறது. இருக்கும் விஷயங்களை வைத்தே இப்படி செய்தால் என்ன என்று யோசிக்கிறார் இல்லையா.. அந்த புத்திசாலித்தனம்தான் தொழில்துறைக்கு முக்கியம். அதற்காகத்தான் கண்டுபிடிப்பு விருது என ஆனந்த் மகிந்திரா கூறியிருக்கிறார்.

https://www.firstpost.com/india/viral-video-man-turns-ordinary-floor-into-treadmill-with-dishwasher-internet-in-splits-11947082.html

கருத்துகள்